Cinema

கைதி to விக்ரம் : Shared Universe பற்றி தெரியுமா? - லோகேஜின் ‘LCU’-வால் தமிழ் சினிமா இழக்கப் போவது என்ன ?

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின், அதன் ‘பல நடிகர் பங்கேற்பு’ம் விளம்பரங்களும் இருந்தாலும் பிரதானமாக ஒரு முக்கியமான அம்சம் இருக்கிறது.

Shared Universe!

பல அண்டங்களின் கலப்பைத்தான் shared universe என்கிறார்கள். அதாவது ஒரு கதைக்கென ஒரு யுனிவெர்ஸ் இருக்கும். யுனிவெர்ஸ் எனில், அக்கதையின் பாத்திரங்களும் அவை சந்திக்கும் பிரச்சினைகளும் எல்லாமும் நிகழும் இடமும் சேர்ந்தது எனலாம். இன்னொரு கதை இன்னொரு பாத்திரக் குழுவுடன் வேறுபட்ட பிரச்சினைகளுடன் வேறுபட்டக் களத்தில் நடக்கும். அது இன்னொரு யுனிவெர்ஸ் என்கிறோம். இந்த இரண்டையும் கலந்து ஒரு கதைக்களம் உருவாக்கினால் எப்படி இருக்கும்? அதைத்தான் shared universe என்கிறார்கள்.

விக்ரம் படத்தில் இத்தகைய shared universe-ஐ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பாத்திரங்கள் படங்களில் இடம் மாறித் தோன்றிய சில தருணங்கள் தமிழில் இருந்தாலும் ஒரு பாத்திரத்தை அதன் கதைக்களத்தோடு இன்னொரு படத்தில் காண்பிப்பது இதுவே முதன்முறை எனக் கருதப்படுகிறது.

‘கைதி’ படத்தின் நாயகனும் காவல்துறை அதிகாரியும் வில்லனும் கூட விக்ரம் படத்தில் வருகின்றனர். கதைக்களமும் வருகிறது. விக்ரம் சேதுபதி அடிக்கடி ரோலெக்ஸ் என்கிற பெயரைச் சொல்லி அடுத்த பாகத்துக்கு முஸ்தீபு கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அதற்கேற்ப இறுதியில் சூர்யாவும் ரோலெக்ஸாக வந்து மற்றொரு படத்துக்கான கொக்கியைப் போட்டு விட்டுச் செல்கிறார்.

‘விக்ரம்’ கதை உருவாக்கியிருக்கும் shared universe-ன்படி, ஃபகத்தின் பாத்திரத்தை வைத்து ஒரு படம் செய்யலாம். விஜய் சேதுபதியை வைத்து ஒன்று, சூர்யாவை வைத்து ஒன்று, நரேனை வைத்து ஒன்று என தனித்தனி முன் கதைகள் செய்யலாம். இவையன்றி பகத்-சூர்யா, பகத்-கார்த்தி, கமல்-கார்த்தி, சூர்யா-கார்த்தி, விஜய் சேதுபதி-பகத், விஜய் சேதுபதி-கார்த்தி என பல இணைவுகளுடன் கதைக்களங்களை உருவாக்கலாம். அடுத்து ஒரு பத்து, பதினைந்து படங்களை உருவாக்குவதற்கான அடித்தளத்தைப் போட்டு வைத்திருக்கும் இந்த shared universe-க்கு இயக்குநர் லோகேஷ் ஒரு பெயரும் சூட்டியிருக்கிறார். LCU. Lokesh Cinematic Universe!

இத்தகைய shared universe-கள் கொடுக்கக் கூடிய சாத்தியங்கள் என்ன?

Shared Universe கதைக்களம் மிக்சர் போல. அதிலிருக்கும் வேர்க்கடலைகளை தேடித் தேடி உண்போம். பிறகு ருசியைப் பொறுத்து பிற விஷயங்களை தேடித் தேடி உண்போம். ருசி இல்லையென்றால் வேர்க்கடலையிலேயே திருப்தி கண்டுவிடுவோம்.

இயல்பாகவே பல படங்களின் ஒருங்கிணைவாக அமையும் Shared Universe படங்கள் ஆர்வத்தை அதிகரிக்க வல்லவை. படம் பார்ப்பவர், அவருக்கு விருப்பமான பாத்திரம் எப்போது திரையில் தோன்றும் என காத்துக் கொண்டே இருப்பார். அப்பாத்திரம் தோன்றும் காட்சியின் ‘பில்ட் அப்’களுக்காக தன் கொண்டாட்டத்தை அடக்கி வைத்துக் கொண்டிருப்பார்.

அப்பாத்திரம் தோன்றியதும் சில்லறையை சிதற விடுவார். ஆனால் அதுவரை கதை என்னவானது, திரைக்கதையில் தொய்வு இருந்ததா, கதைக்கான தொடர்பு சரியாக நேர்ந்ததா என்பவற்றிலெல்லாம் பெரிய அளவில் கவனம் செல்லாது. இத்தகைய shared universe-களின் பிரதான பலியாக திரைக்கதை இருக்கும். உத்திரவாதமாக வருமானம் இருக்கும்.

சினிமாவில் மட்டுமல்ல, இலக்கியங்களிலேயே பல வகை shared universe-கள் பல முயற்சிக்கப்பட்டு இருக்கின்றன. ராமாயண அனுமன் மகாபாரதத்தில் வருவதும் தண்டகாரண்ய ராவணன் இலங்கை ராவணன் ஆனதும் இத்தகைய shared universe முயற்சிகளே. காப்பியங்களில் இத்தகைய இணைவுகள் ஓர் இனக்குழுவும் இன்னொரு இனக்குழுவும் இணைந்ததாலோ அல்லது ஒன்றை ஒன்று வென்றதாலோ உருவான இணைவுகள்.

காப்பிய பாத்திரங்களின் இணைவுகளுக்குப் பின்னால் அரசியலும் பொருளாதாரமும் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன. சமீபத்தில் வெளியான ‘அசுரன்’ நாவல் கூட ராவணனின் கதாபாத்திரத்தை கேரளாவின் மாபலி மன்னனின் காலத்தைப் பகிர்ந்து கொண்ட பாத்திரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். காரணம் அரசியல்!

சினிமாவின் shared universe-களுக்குப் பின்னால் அரசியலும் பிரதானமாக பொருளாதாரமும் காரணங்களாக இருந்திருக்கின்றன. உண்மையிலேயே அந்தக் காரணங்கள்தாம் பெரிய shared universe-கள்.

முதன்முதலாக shared cinematic universe என்கிற வார்த்தை பிரபலமாகக் காரணமாக இருந்தது மார்வெல் காமிக்ஸ்தான். நம்மூர் இரும்புக்கை மாயாவி, கபீஷ் குரங்கு போல அமெரிக்காவின் பல காமிக்ஸ் கதாபாத்திரங்களை படைத்து புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருந்த நிறுவனம் மார்வெல்.

அவ்வப்போது மார்வெலுடன் இணைந்து பல தயாரிப்பு நிறுவனங்கள் காமிக்ஸ் பாத்திரங்களைக் கொண்டு படங்கள் தயாரித்தன. ஆனால் மார்வெலுக்கு பெரிய வருமானம் இருக்கவில்லை. எனவே மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது.

இருக்கும் காமிக்ஸ் பாத்திரங்களை கொண்டு shared universe படங்கள் எடுக்கும் உத்தி முன் வைக்கப்பட்டது. அதற்கு தேவையான அடித்தளமாக பிரதான காமிக்ஸ் கதாபாத்திரங்களின் தனிப்படங்களை முதலில் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்து வெளியிட்டது. பிறகு அப்பாத்திரங்களைக் கொண்டு கலவைப் படங்கள் எடுப்பதற்கான முஸ்தீபுகளைக் கொண்ட படங்கள் தயாரிக்கப்பட்டன. அடுத்ததாக முற்றிலும் கலவையான shared universe படங்கள் தயாரிக்கப்பட்டன.

ஸ்பைடர் மேன், ஐயன் மேன் போன்றவை தனிப் படங்களாக வெளியாகின. அவற்றின் அடுத்தடுத்த பாகங்களில் வேறொரு பாத்திரம் வேறொரு கதையைக் கொண்டு விடுகதை போல இயங்கிக் கொண்டே இருக்கும். உதாரணமாக ஐயன் மேன் - 2வில் ஸ்கார்லட்டின் பாத்திரம். அதற்குப் பிறகு பிற படத்தின் பாத்திரங்களுடன் ஐயன் மேன் பாத்திரமும் நடித்து வெளியானது. அவெஞ்சர்ஸ் போன்ற படங்கள்!

மார்வெல் எதிர்பார்த்தபடி shared universe படங்கள் உலகெங்கும் சக்கைப் போடு போட்டது. இம்முறை பெருமளவில் வருமானம் மட்டுமின்றி லாபத்தையும் அந்த நிறுவனம் ஈட்டியது. பிறகு மெல்ல மெல்ல பிற நிறுவனங்கள் கொண்ட காமிக்ஸ் பாத்திரங்களின் shared universe படங்களையும் மார்வெல் ஸ்டுடியோ உருவாக்கி தற்போது ‘உறுதி வெற்றி’ படங்களைக் கொடுக்கும் நிறுவனமாக அது மாறியிருக்கிறது.

அடிப்படையில் shared cinematic universe என்பது accumulated wealth-க்கான வழிதான். அதாவது குவிக்கப்படும் லாபம் அல்லது வளத்துக்கான உத்திரவாதமான சினிமா தயாரிப்பு முறை.

Shared இலக்கியங்களின் வழி அனுமனையும் ராமனையும் கொண்டு வந்து தமிழ்நாட்டில் விட்டதைப்போல, பல இந்தியக் கதாபாத்திரங்கள் ஒன்றிணையும் வாய்ப்புகளை shared universe கொடுக்கக் கூடும். வள்ளி-முருகன் நாடகம் சுவாரஸ்யமற்றதாக மாற்றப்பட்டதைப்போல, நம் மண்ணுக்கான கதைக்களமும் வணிகச் சந்தையில் தோற்று தடமழியக் கூடும்.

எனவே இயக்குநர் லோகேஷ் முயலவிருக்கும் LCU என்பது சினிமா திரைக்கதை யதார்த்தத்துக்கான ICU-வாகவும் இருக்கலாம். ஆனால் நாமே ரசிக்கக் கூடிய ICU-வாக இருக்கும் என்பது மட்டுமே வித்தியாசம். கேள்வி என்னவெனில் ICU மீது கொள்ளும் ரசனையால் நாம் அடையப் போவது என்ன, இழக்கப் போவது என்ன என்பது மட்டும்தான்.

Also Read: அக்னிபாத் திட்டம் : “RSS கனவு திட்டத்தை நிறைவேற்ற துடிக்கும் ஒன்றிய அரசு” - வடக்கே ஏன் போராட்டம் ?