Cinema
மோகன்லால் நடிப்பில் வெளியான 12th Man.. எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா?
மலையாள சினிமாவில் தொழில்நுட்பம் ஏற்படுத்தியிருக்கும் வாழ்வியல் சிக்கல்களை விமர்சித்தும் உணர்த்தியும் சுட்டிக் காட்டியம் எண்ணற்றப் படங்கள் வந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றாக 12th man படத்தைக் கருதலாம்.
ஏற்கனவே த்ருஷ்யம் 1 மற்றும் த்ருஷ்யம் 2 ஆகிய படங்களின் மூலம் பெரும் புகழை எட்டிய ஜீத்து ஜோசப்தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். சாதாரணமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் செல்பேசியின் புழக்கம் நம் சமூகத்தில் எத்தகையச் சிக்கல்களை உருவாக்கவல்லது என த்ருஷ்யம் படங்களில் பேசியவர் அவர். ஒருவகையில் தொழில்நுட்பப் பிரச்சினைகளை மலையாள சினிமாவில் கொண்டு வந்து வெற்றியடைந்த முன்னோடி அவர் என்று கூடச் சொல்லலாம்.
த்ருஷ்யம் போலவே 12th man படத்திலும் மோகன்லால் என்பதால் படத்துக்கு ஓரளவுக்கு எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் படம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ததா?
படம் துவங்குவது ஒரு நண்பர் குழு கூடுவதிலிருந்து. குழுவில் இருக்கும் ஒரு ஜோடிக்கு திருமணம். எனவே பேச்சுலர் பார்ட்டி போல் ஒரு பார்ட்டியை ரிசார்ட் ஒன்றில் ஏற்பாடு செய்து நண்பர்கள் கூடுகின்றனர். குழுவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஜோடிக்கும் ஒவ்வொரு பிரச்சினை, பின்னணி சொல்லப்படுகிறது. உதாரணமாக ஒரு ஜோடியில் அம்மாவுக்கும் மனைவிக்கும் ஆகவில்லை. இன்னொரு பக்கம் ஒருவர் தான் வேலை செய்யும் வங்கியில் பணத்தை 'rotation’-ல் விட்டு, தற்போது பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருப்பவர். இன்னொருவர் தொடர்ந்து பல வியாபாரங்கள் செய்து தோல்வியை தழுவியவர். இன்னொரு பெண் உறவில் சிக்கல் கொண்டிருப்பவர். இவர்கள் அனைவரும் ரிசார்ட்டுக்கு வந்திருக்கின்றனர்.
மொத்த நட்புக் குழுவும் கூடும் ரிசார்ட்டில் தங்க வந்திருக்கும் இன்னொரு நபர்தான் மோகன்லால். படத்தின் துவக்கத்தில் அவர் மதுவுக்கு அலையும் ஒரு குடிகாரராக காண்பிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் நமக்குத் தெரிகிறது குடிகாரர் தாண்டிய ஒரு பாத்திரம் அவருக்கு இருக்கிறது என. இதனாலேயே மோகன்லால் அடிக்கும் சேஷ்டைகளை ரசிக்க முடிந்தாலும் அதில் ஒன்ற முடியவில்லை. ’திடீரென ஒரு திருப்பம் வரப் போகிறது, அதற்குத்தானே இந்த ஆட்டம் எல்லாம்’ என்றே படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்தத் திருப்பமும் வருகிறது.
ஒரு நீண்ட உணவு மேஜை. நண்பர்கள் குழு மொத்தமும் உணவு உண்ணத் தயாராக இருக்கிறது. அப்போது ஓர் உரையாடல். 'செல்பேசியை தூர வைத்து சாப்பிட்டால் என்ன’ எனத் தொடங்கி, ‘செல்பேசியை இழக்க யாரும் விரும்ப மாட்டார்’ என வந்து ‘செல்பேசியில் வரும் தகவல்கள் அந்தரங்கமானவை’ எனத் தொடர்ந்து ‘ரகசியமெல்லாம் ஒன்றும் செல்பேசியில் இல்லை’ என்றக் கட்டத்தை அடையும்போது ஒரு விபரீதம் நிகழ்கிறது. இத்தாலிய மொழிப் படமான Perfect Strangers மலையாளத்தில் ஓடத் தொடங்குகிறது.
அற்புதமான விஷயங்களை அற்புதமாக காட்சிப்படுத்தும் ஜீத்து ஜோசப்புக்கா இந்த நிலை என அதிர்ச்சி ஏற்படுகிறது. ஒரு வெளிநாட்டுப் படக் கதையை திருட வேண்டிய அவசியம் நேர்ந்த ஜீத்து ஜோசப்பின் மீது நமக்கு பரிதாபமும் கோபமும் ஏற்படாமல் இல்லை. அதனாலேயே அதற்குப் பிறகு ’படத்தில் நேரப் போகும் எதுவும் உருப்படியாக இருக்க வேண்டியதில்லை; இருந்தாலும் ஒன்றும் பிரமாதமில்லை’ என்கிற மனநிலைக்கு நாம் வந்து விடுகிறோம்.
எதிர்பார்த்தபடி நட்பு வட்டத்துக்குள் ஒரு கொலை விழுகிறது. அதை துப்புத் துலக்கும் அதிகாரியாக எதிர்பார்த்தபடியே மோகன்லால் வருகிறார். இறுதியில் எதிர்பார்த்தபடியே படமும் முடிகிறது.
12th man, ஜீத்து ஜோசப் மற்றும் மோகன்லால் வெற்றிக் கூட்டணி கொடுத்திருக்கும் ஏமாற்றம்!
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!