Cinema
ட்விட்டரில் நடிகை சாய் பல்லவி-க்கு ஆதரவாக வைரலாகும் #saipallavi.. என்ன கூறினார் அப்படி!
'தி காஷ்மீர் பைல்ஸ்' படத்தில் வருவதை போல், காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதற்கும், தற்போது பசுவுக்காக இஸ்லாமியர் அடித்துக் கொல்லப்படுவதற்கும் என்ன வித்தியாசம்? என்று கூறிய நடிகை சாய் பல்லவி கருத்துக்கு சங்பரிவார் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் தான் 'தி காஷ்மீர் பைல்ஸ்'. 1990-களில் காஷ்மீரில் இருந்து இந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படும் இந்த திரைப்படத்தை, வலதுசாரி அமைப்புகள் வெகுவாக பாராட்டுத் தெரிவித்து வரவேற்றன. அதேநேரத்தில் வரலாற்றை திருத்தி அமைக்கும் முயற்சியாக இந்த திரைப்படம் இருப்பதாகவும், இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் மற்ற சில அமைப்புகள் குரல் கொடுத்தனர்.
இந்த நிலையில், தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை சாய் பல்லவி 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் குறித்து கருத்து ஒன்று கூறியுள்ளார். அவர் கூறியுள்ள கருத்துக்கு, சங்பரிவார் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நடிகை சாய்பல்லவி மற்றும் நடிகர் ராணா டகுபதி நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் 'விரத பர்வம்'.
இந்த படத்தின் விளம்பர வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றிற்கு நடிகை சாய்பல்லவி பிரத்யேக பேட்டியளித்திருந்தார். அப்போது பேசிய அவர், "தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக காட்டி இருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. பசுவை கொண்டு சென்ற ஒரு நபரை இஸ்லாமியர் என்று கருதி கும்பலாக தாக்குகிறார்கள்.
அந்த நபர் கொல்லப்பட்டவுடன் ஜெய் ஸ்ரீராம்' என்று முழக்கமிடுகிறார்கள். காஷ்மீரில் அன்று நடந்ததற்கும் தற்போது நடந்து கொண்டிருப்பதற்கும் என்ன வித்தியாசம்.?" என்று கேள்வியெழுப்பினார். மேலும் பேசிய அவர், “வன்முறை என்பது என்னைப் பொறுத்தவரை தவறான பெயர். என்னுடைய குடும்பம் நடுநிலையானது. அவர்கள் எனக்கு நல்ல மனிதனாக இருக்க கற்றுக் கொடுத்தார்கள். ஒடுக்கப்பட்டோர் பாதுகாக்கப்பட வேண்டும். யார் சரி, யார் தவறு என்று எனக்குத் தெரியாது. நீங்கள் ஒரு நல்ல மனிதராக இருந்தால், ஒரு பகுதி மட்டுமே சரியானது என்று நீங்கள் உணர மாட்டீர்கள்." என்றும் பேசினார்.
நடிகை சாய்பல்லவியின் இந்த கருத்து வலதுசாரி அமைப்புகளை சார்ந்தவர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். #saipallavi என்று ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. காஷ்மீர் பண்டிட்டுகளின் படுகொலையை, முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுடன் எவ்வாறு ஒப்பிட முடியும் என சங்பரிவார் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் மார்ச் மாதம் நாடு முழுவதும் வெளியானது. விவேக் அக்னிஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி, முன்னணி நடிகர் அனுபவம் கேர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படம், தேசிய அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியது. மேலும் பிரதமர் மோடி, இந்த படத்தின் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரியையும், படக்குழுவையும் நேரில் அழைத்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!