Cinema

‘எப்போதும் அந்த விளம்பரத்தில் மட்டும் நடிக்கமாட்டேன்’: GV பிரகாஷ்.. தமிழ் திரை உலகில் எழுந்த முதல் குரல்!

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் காரணமாகத் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது போன்ற விளம்பரங்களில் நானும் நடிக்க மாட்டேன், நடிகர்கள் யாரும் நடிக்க கூடாது என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டம் என்பது தற்போது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. முதலில் பொழுது போக்காக இதில் விளையாடத் தொடங்கும் பலரும் தங்கள் மொத்த சேமிப்பை இழக்கும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி, இதனால் மன உளைச்சல், கொலைகள், தற்கொலைகள் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில், ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கோரி, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கு சம்மந்தமாக ரம்மி விளையாட்டின் அம்சங்களை ஆராய்வதற்காக, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளதாக கடந்த மாதம், தமிழ்நாடு அரசு அறிவித்தது.

இந்தச் சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "அ.தி.மு.க. ஆட்சியில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை ஒழிப்பதற்குக் கொண்டுவரப்பட்ட சட்டம் வளமானதாக இல்லை. அவசர கோலத்தில் அள்ளித் தெளித்துக் கொண்டு வரப்பட்ட சட்டத்தால் அது தற்போது நீக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் அது உறுதியான சட்டமாகக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் ரம்மி ஒழிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது" என்று கூறினார்.

இந்த நிலையில், தற்போது நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ், ஆன்லைன் ரம்மி விளம்பரத்தை பற்றி கருத்து ஒன்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, "ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் எந்த காரணத்திற்காகவும் நான் நடிக்க மாட்டேன், யார் அணுகினாலும் நடிக்க மாட்டேன் என்று அழுத்தமாக சொல்வேன். நான் மட்டுமல்ல மற்ற நடிகர்களும் இது போன்ற விளம்பரங்களில் நடிக்க கூடாது" என்று நடிகர் ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான 'கத்தி' திரைப்படத்திற்கு பிறகு சமூக வலைதளப்பக்கத்தில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, 'கொக்கோகோலா (CoCo-Cola) விளம்பரத்தில் நடித்ததற்காக தான் வருத்தம் தெரிவிப்பதாகவும், இனி அது போன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் எனவும் நடிகர் விஜய் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “பசுவுக்காக இஸ்லாமியர் கொல்லப்படுகிறார்கள்” : ‘காஷ்மீர் பைல்ஸ்’ குறித்து நடிகை சாய் பல்லவி பேசியது என்ன?