Cinema

ஒரு உணவு பண்டத்தை வைத்து சமூக பிரச்சனையை பேசும் Axone!

பெயரைப் பார்த்தால் ஏதோ ஆங்கில வார்த்தைப் போல் தோன்றும் இந்த வார்த்தை நாகலாந்தின் உணவுக்கான பெயராம். இந்த வார்த்தைக்கு நாகாலாந்தின் அர்த்தம், அக்குனியாம். அக்குனி என்றால் ‘வலுவான வாசனை’ என அர்த்தமாம். நெட்ஃபிளிக்ஸ்ஸில் காணக் கிடைக்கும் Axone படம் பேசுவது ஓர் உணவு வகையைப் பற்றி. மிக எளிமையான நகைச்சுவைப் படம்தான். ஆனால் அதைக் காணுகையில் நமக்குள் இருக்கும் சிக்கல்களையும் உணரத் தொடங்கி விடுகிறோம்.

கிட்டத்தட்ட நம்மூர் கருவாடுதான் ஆக்ஸொன். நாற்றம் குடலைப் புரட்டுமாம். ஒரே வித்தியாசம், அது அசைவம் இல்லை. சாதாரண சோயா பீன்ஸ்தான். சோயாபீன்ஸை அலசி வேக வைத்து பிறகு நீரை வடிகட்டி, பானையில் போட்டு மூன்று, நான்கு நாட்களுக்குப் பிறகு நல்ல சுவையை அடையும்போது உண்ண வேண்டும். அவ்வளவுதான் ஆக்ஸொன். சுவையை அடைந்துவிட்டது என்பதை, அதிலிருந்து கிளம்பும் மணத்தை வைத்துதான் சொல்வார்களாம். அதைத்தான் பிறர் நாற்றம் என்கிறார்கள். சிலர் வாசனை என்கின்றனர். ஆக்ஸொன்னில் எழுவது நாற்றமா, வாசனையா என்பதை நோக்கி நம் மனதை வெற்றிகரமாக செலுத்துகிறது இப்படம்.

கதைப்படி தில்லியில் ஒரு நண்பர் குழு இருக்கிறது. அக்குழுவில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகவிருக்கிறது. ஆனால் அப்பெண் வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர்களின் பாரம்பரியத்தில் ஆக்ஸொன்தான் திருமணத்தின் சிறப்பு உணவு. ஆனால் அவர் தில்லியி இருப்பதால் திருமணத்துக்கு ஆக்ஸொன் சமைக்க முடியாதச் சூழல். எனவே அவரின் நண்பர்கள் அவருக்குத் தெரியாமல் ‘ஆக்ஸொன்’ சமைத்து மாலை நடக்கும் திருமணத்தில் அவரை ஆச்சரியப்படுத்தவென முடிவெடுக்கின்றனர். பிறகுதான் பிரச்சினை தொடங்குகிறது.

நண்பர்கள் வீட்டில் ஆக்ஸொன் சமையலுக்கு கடும் எதிர்ப்பு வருகிறது. அதன் வாசனை கடும் நாற்றம் அடைக்கும் என்கிறார் வீட்டு உரிமையாளர் அம்மாள். அதோடு மட்டும் அவர் நின்று விடாமல், ‘இதற்குத்தான வடகிழக்குக்காரர்களுக்கு வீடு கொடுப்பதில்லை’ எனவும் சொல்கிறார். ஒரு நண்பரின் வீடு இப்படி, இன்னொரு நண்பர் வீட்டிலும் எதிர்ப்பு. வேறு ஒரு சேமிப்புக் கிடங்கில் சமைக்க முயலுகின்றனர். அங்கும் வாய்ப்புப் பறிபோகிறது.

சமீபத்தில் ஓர் உயர்சாதிப் பெண் ‘மீன் பிடிக்கும். ஆனால் மணமின்றி அதை சமைத்துக் கொடுத்தால் சாப்பிடலாம்’ எனக் கூறினார். மணமின்றி சாப்பிட மீன் என்ன காலிபிளவரா?

பிறரின் பண்பாடுகளையும் வாழ்க்கைமுறையும் பழக்க வழக்கங்களையும் நாம் ஏற்க வேண்டுமென்றாலும் நமக்கான ‘விதிகளுடன்’தான் ஏற்க விரும்புகிறோம். மீனுக்கே மணத்தைப் பற்றிக் கவலைப்படும் தோழி, கருவாட்டுக்கு என்ன செய்வார்? கருவாட்டின் மணத்தை, நாற்றம் எனக் கூட விளிக்கும் பழக்கம் உண்டு. மீன் வகைகள் மட்டுமல்ல, சிக்கன், மட்டன், மாட்டுக்கறி எனப் பல வகை உணவு வகைகள் மீது தொடர்ந்து விமர்சனம் நம் சமூகத்தில் எழுப்பப்படுவதுண்டு. குறிப்பாக அசைவ உணவு மீது கீழ்த்தரமான மதிப்பே உண்டு. இன்றும் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் ‘உயர்தர சைவ’ உணவகம்தான் பார்க்க முடியும். உயர்தர அசைவ உணவகம் என்ற பெயர்ப் பலகை காணுவது கடினம்.

உணவைக் கூட பிராந்தியமாக, மொழியாக, மதமாக - குறிப்பாக ஆளும் வர்க்கத்துக்கு - ஏதுவாக அணுகுவோருக்கு ஆக்ஸொன் படம் நாற்றம் அடிக்கலாம். மற்ற அனைவருக்கும் ஆக்ஸொன் நறுமணம் கொடுக்கவல்லது.

Also Read: நீங்கள் பாசிஸ்ட்டா என்பதை ’ஜன கண மன’ படம் சொல்லும்.. படத்தின் கதை இதுதான்!