Cinema

KGF படம் கம்யூனிசம் பேசுகிறதா? படம் கொண்டிருக்கும் குறியீடுகள் சொல்லும் சேதிகள்?

படத்தின் பெயர் ராக்கி பாய் அல்ல, KGF!

கேஜிஎஃப் என்பது ஓர் இடம். அந்த இடம் மக்களைக் கொண்டிருக்கிறது. அம்மக்கள் உழைப்புச் சுரண்டலிலும் ஒடுக்குமுறையிலும் உழன்று கொண்டிருக்கின்றனர். அந்த இடத்துக்கான அதிகாரப் போட்டியில்தான் ராக்கி பாய் உள்ளே வருகிறான்.

KGF Chapter 1-ன் முதற்பாதியில் ராக்கி பாய் ஒரு டானாக, பெரும் பணக்காரனாக வேண்டுமென விரும்புபவன் மட்டும்தான். KGFக்குள் சென்ற பிறகு அவனுடைய நிலைப்பாடுகள் மாறுகிறது.

KGF வாழ் மக்கள் விடியலுக்காகக் காத்திருக்கின்றனர். ஒரு மீட்பர் வந்துவிட மாட்டாரா என ஏங்கி இருக்கின்றனர். KGF-ன் அதிகாரத்தைப் பிடிக்க வந்திருக்கும் ராக்கி பாய்க்கு மக்கள் படும் அவதி சலனத்தைக் கொடுக்கிறது. தன்னைக் காப்பாற்ற ஓர் உயிர் மரித்ததும் அவன் உலுக்கப்படுகிறான். அந்த உயிருக்குப் பிறந்த உயிர் அவன் கைகளில் வந்து சேரும்போது வரலாறின் அழுத்தம் அவனுக்கு பதற்றத்தைக் கொடுக்கிறது.

இயேசு சிலுவையில் உயிரிழப்பதற்கு முன் இரண்டு வாக்கியங்கள் சொல்வார். இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று முரணானவை. 'பிதாவே ஏன் என்னைக் கைவிட்டீர்' முதலாவது. 'என் ஆவியை உம்மிடம் ஒப்புக் கொடுக்கிறேன்' என்பது இரண்டாவது. இரண்டுக்கும் இடையே இயேசுவின் மனம் கொண்டிருக்கக் கூடிய அலைக்கழிப்பைத்தான் Last temptation of christ என படமாக்கினார் மார்டின் ஸ்கார்சசி.

வரலாறு கொடுக்கும் அழுத்தம் தாளாது ராக்கி பாயும் இரு முரணான வாக்கியங்களை உதிர்க்கிறான். ஒரு அநீதி இழைக்கப்படுகையில் அதைத் தடுக்க தன்னிச்சையாக ஓரடி முன் சென்று சுத்தியலை எடுக்கும்போது ராக்கி பாயின் மனம் 'வரலாறை அவசரப்பட்டு எழுதக்கூடாது' என முடிவு எடுத்து சுத்தியலை கீழே வைக்கிறது. ஆனால் அடுத்த கணமே 'அதே நேரம் ப்ளான் போட்டு ப்ளூ ப்ரிண்ட் வரைஞ்சும் வரலாற எழுத முடியாது' என முடிவு எடுத்து அருகே இருக்கும் பெரிய சுத்தியலை எடுக்கிறான்.

அதற்குப் பிறகு வருபவை யாவும் அடிமைகளின் கிளர்ச்சி, மக்கள் எழுச்சி ரகம்தான். கிட்டத்தட்ட ஸ்பார்டகஸ்ஸை ஒத்தக் களமாக முதல் பகுதி விரிந்து முடிந்திருக்கும்.

அதிகாரம் வந்த பிறகு ராக்கி பாய் என்னவாகிறான், கேஜிஎஃப் என்னவாகிறது என்பதை இரண்டாம் பகுதி காட்டுகிறது.

கிறிஸ்டபர் நோலன் ஒரு வகைக் கதையாடலை அறிமுகப்படுத்தினார். குறிப்பாக பேட்மேன் வரிசைப் படங்களில் அதிகமாக வெளிப்பட்டிருக்கும். நான்லீனியராக இருக்கும். ஒரு சம்பவம் நடக்கும்போதே இன்னொரு நான்கு சம்பவங்களுக்கு intercut போய் வருவார். அந்தச் சம்பவங்கள் அதனதன் முடிவுகளை எட்டும்போது மொத்த சீக்வென்ஸ்ஸும் வேறொரு முக்கியமான திருப்பத்தைச் சென்று அடையும்.

சீக்வன்ஸ் ரைட்டிங் இப்படித்தான் இருக்கும் என்றாலும் நோலன் ஒரு முக்கியமான விஷயத்தைச் செய்திருப்பார். எல்லாச் சம்பவங்களும் கடிகாரச் சக்கரம் போல அசைந்து அசைந்து மொத்த சீக்வன்ஸ்ஸும் முடிந்து ஏற்படுகிற திருப்பம், வெறும் திரைக்கதை திருப்பமாக மட்டும் இருக்காது. ஒரு தத்துவ விசாரணையைக் கொண்ட திருப்பம் போல் அமையும். அப்போது அந்தத் திருப்பம் நமக்குள் ஏற்படுத்தும் அடர்த்தி அலாதியாக இருக்கும். அந்த திருப்பம் பெரும் காட்சியாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் பெரும் வசனங்களாகவும் எழுதப்பட்டிருக்கும்.

ஒரு ரக்பி ஆட்டம், சிறுவனின் பாடலில் தொடங்கி மொத்த நகரத்தின் பாதாளமும் வெடித்து ரக்பி வீரர்கள் பள்ளத்துக்குள் வீழ்ந்து, ஸ்டேடியத்தில் Bane டாக்டரைக் கொன்று, மக்களிடம் 'Take Control' எனப் பேசுவது அந்த ரகம்.

KGF சோவியத் யூனியன் என சொன்னதற்கும் ஷெல்பி ஒரு சோசலிஸ்ட் என்றதற்கும் டென்ஷன் ஆனவர்களுக்கு இன்னும் சில டென்ஷன் குறிப்புகள்:

- Dark Knight Rises படத்தின் Bane பாத்திரம் ஒரு கம்யூனிஸ்ட்!

- Dark Knight படத்தில் வரும் ஜோக்கர் ஒரு அனார்க்கிஸ்ட்.

(ஸ்க்ரீன்ஷாட் எடுத்துக் கொள்ளலாம்).

KGF படத்தின் திரைக்கதை பாணி மேற்கண்ட நோலன் பாணி கதை சொல்லலை அதிகம் கொண்டிருக்கும். தனித்தக் காட்சி என எதுவுமே இருக்காது. முக்கியமாக படத்தின் narration லீனியரே கிடையாது. 'ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்' என்றுதான் இரு படங்களிலும் கதை விரிகிறது. யாரோ ஒருவர் வியாச முனிவருக்கு கதை சொன்னதைப் போல் நமக்கும் கதை சொல்கிறார்கள். அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களை அதீதங்கள் கொண்டு நிரப்பி சொல்லும் காப்பியமாக KGF படங்கள் நெய்யப்பட்டிருக்கிறது. 'இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு' எனத் தோன்றுவது அதனால்தான். நம் இதிகாசங்களை சற்றுப் புரட்டிப் பார்த்தால் தோன்றக்கூடிய அதே எண்ணம்தான்.

'Say hello to my little friend' என்னும் டோனி மொண்டானா போல் துப்பாக்கிக் கொண்டு நிற்பதும் யதேச்சை அல்ல.

அடிமைப்புரட்சிக்குப் பிறகு எதிர்புரட்சி நடக்கிறது. அதுவரை அதிகாரத்தில் இருந்தோர் KGF மீது போர் தொடுக்கின்றனர். அதை ராக்கி பாய் எதிர்கொள்கிறான். மக்கள் என்ன ஆனார்கள்? வீடுகள் கட்டிக் கொடுக்கிறான் ராக்கிபாய். அடிப்படை வசதிகள் எல்லாமுமே அவர்களுக்கு உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. எதிர்புரட்சியாளர்களிடம் இருந்து காக்க மக்கள் ராணுவம் ஒன்றையும் தயார் செய்திருக்கிறான் ராக்கி பாய். ஒரு பெரும் நகரத்தையே கட்டி எழுப்பி இருக்கிறான்.

ஐந்தாண்டு காலத் திட்டங்கள் போட்டு மக்களின் உழைப்பில் சோவியத்தைக் கட்டி எழுப்பியத் தலைவன் ஸ்டாலின் உங்கள் கண் முன்னே வரவில்லை எனில், சாரி பாஸ்.. இப்பதிவைப் படித்து டைம் வேஸ்ட் பண்ணிக்காதீங்க!

மேலும் இரண்டாம் பகுதி முழுக்க இன்று இந்தியச் சமூகம் எதிர்கொள்ளும் நிலைக்கான எதிர்க் கதையாடல்தான் இருக்கிறது.

ராக்கிபாய் நாயகியைக் கடத்திச் செல்கிறான். ஆனால் விரல் கூட அவள் மீது படவில்லை. அவள் மனம் மாறக் காத்திருக்கிறான், ராவணனைப் போல!

சுக்ரீவனும் வாலியும் சண்டையிடும் காட்சி மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால் ஒரு முக்கியமான மாற்றம்! இக்காட்சியில் ராமர் சஞ்சய் தத். வில்லன்! ஏமாற்றப்பட்டு வீழ்த்தப்படும் வாலியாக வருவது நாயகன். ராக்கி பாய்!

ராக்கி பாயின் வலது கரமாக இருப்பது ஓர் இஸ்லாமியர். இஸ்லாமியர்கள் படம் முழுக்க எதிர்ப்படுகிறார்கள். ஒரு காட்சியில் 'எல்லா மதத்துக்கும் மரியாதைக் கொடுக்கச் சொல்லி என் நாட்டுல சொல்லிக் கொடுத்திருக்காங்க' என்கிறான். அது 70களின் காலக்கட்டம்.

KGF மக்கள் வழிபடுவது ராமரையோ விநாயகரையோ அல்ல, மாகாளி போன்ற ஒரு பெண் தெய்வத்தை.

ஒரு காட்சியில் 'மாஸ்டர் இல்லாத க்ளாஸ்ல பசங்க ஆட்டம் போடற மாதிரி இருக்கு உங்க தில்லி' என்கிறான். அந்த தில்லி அவனது தில்லி இல்லை. அவனது தில்லி KGF-ல் இருக்கிறது. அங்கு மக்களிடையே சமத்துவம் இருக்கிறது.

KGF-ல் இருப்பவர்களுக்கு ராக்கி பாயிடம் பயம் இல்லை. 'அவன் இவன்' என்ற உரிமையோடுதான் பேசுகின்றனர். அவன் வீட்டில் வேலை செய்யும் பெண் கூட 'அண்ணே' என்றே அழைக்கிறாள். நாயகி ராக்கி பாயுடன் கொள்ளும் ஊடலைப் பார்த்து சிரித்துக் கொள்ளும் இயல்புடனே அவளும் அனைவரும் இருக்கின்றனர்.

காவலருக்கு டீ எடுத்து வரும் சிறுவன் உட்பட உழைக்கும் வர்க்க மக்கள் அனைவருக்கும் ராக்கி பாய்தான் நாயகன். அவனைத் தங்களின் பிரதிநிதியாகவே அவர்கள் பார்க்கின்றனர்; போற்றுகின்றனர்.

KGF-ல் நடக்கும் எதிர்ப்புரட்சிக்கு பதிலடியாக ராக்கிபாய் கைகொள்வது ஆயுதங்களை. அமெரிக்காவின் ஆயுதம் அல்ல; சோவியத்தின் ஆயுதங்களை. டர்பைன் முதற்கொண்டு நவீனங்களை உற்பத்தியில் பயன்படுத்த முனையும் பாட்டாளி வர்க்க முன்னேராகவே செயல்படுகிறான் ராக்கிபாய்.

இதற்காகவெல்லாம் 'ராக்கிபாயை கம்யூனிஸ்ட் என்றோ KGF-ஐ சோவியத் என்றோ சொல்லி விடலாமா.. ஓவராக இல்லையா?'

"உனக்குப் பின்னால ஆயிரம் பேர் இருக்காங்கங்கற தைரியத்துல முன்ன போகக் கூடாது. ஆயிரம் பேருக்கும் தனக்கு முன்னால ஒருத்தன் இருக்காங்கற நம்பிக்கைய கொடுக்கற வகையில முன்ன போகணும்"

எனவே ஆம். ராக்கி பாய் கம்யூனிஸ்ட்தான். KGF-தான் சோவியத்.

சலாம் ராக்கிபாய்!

Also Read: ராக்கி பாயின் பயணம் முடியவில்லை... KGF-3 பற்றி தயாரிப்பாளர் கூறிய தகவலால் ரசிகர்கள் உற்சாகம்!