Cinema

திடீரென வாழ்க்கையை மாற்றிய ஒரு LUNCH BOX: படம் சொல்லும் செய்தி என்ன?

கணவருக்கு தன் மீது ஈர்ப்பு வரவென ருசியான உணவுகளை தினமும் அனுப்புகிறாள் இளா. ஒருநாள் லஞ்ச் பாக்ஸ் மாறி விடுகிறது. சாஜனுக்கு லஞ்ச் பாகஸ் சென்று விடுகிறது. உணவின் ருசியில் சொக்கி விடுகிறான் ஃபெர்னாண்டஸ். அடுத்த நாளே இளாவுக்கு ஆள் மாறி உணவு போன விஷயம் தெரிந்து விடுகிறது. ‘மன்னிப்பு’ கடிதம் ஒன்று எழுதி லஞ்ச் பாக்ஸில் வைத்து அனுப்புகிறாள். அதைப் படிக்கும் ஃபெர்னாண்டஸ் பதிலுக்குக் கடிதம் வைத்து அனுப்புகிறான். தொடரும் கடிதப் போக்குவரத்து என்னவாக முடிகிறது என்பதே மிச்சக் கதை!

ஃபெர்னாண்டஸ் கதாபாத்திரத்தில் இர்ஃபான் கான் நடத்திருக்கிறார். அவரின் அலுவலகத்தில் பணிபுரியும் ஷேக் என்னும் சக ஊழியர் கதாபாத்திரத்தை நவாசுதீன் சித்திக்கி செய்திருந்தார். இவர்கள் இருவரின் பாத்திர வடிவமைப்பும் உறவும் படத்துக்கு இன்னும் சுவாரஸ்யம் கூட்டுகிறது.

ஷேக் கதாபாத்திரம் மிக இயல்பாக உலகில் காணக் கிடைக்கும் கதாபாத்திரம். ரிட்டயர் ஆகவிருக்கும் பெர்னாண்டஸ் இடத்தை நிரப்புவதற்காக பணியில் சேருபவன் தான் ஷேக். அக்கவுண்ட்ஸ் பார்க்கும் வேலையை ஷேக்குக்கு பெர்னாண்டஸ் கற்றுக் கொடுக்க வேண்டும். ரிட்டையர் ஆகும் வயதில் பொதுவாக மனிதர்களிடம் ஆர்வம் இல்லாமல் இருக்கும் பெர்னாண்டஸ்ஸுக்கு ஷேக்கும் மற்றொரு மனிதனே. ஆனால் ஷேக்கோ பெர்னாண்டஸ் அருவருப்படையும் அளவுக்கு சுற்றி சுற்றி வருகிறான். சுய மரியாதை கொஞ்சம் கூட இன்றி பெர்னாண்டஸ்ஸிடம் வழிகிறான்.

ஷேக்கிடம் ஒரு சிரிப்பு இருக்கிறது. எல்லாவற்றையும் சாதித்திட முடியுமென்கிற மமதை நிறைந்த வெட்கங்கெட்ட சிரிப்பு. எத்தனை திட்டினாலும் அவமதித்தாலும் அவன் மீதான நம் அருவருப்பை வெளிப்படுத்தினாலும் வெட்கமே இல்லாமல் மீண்டும் வந்து சிரிப்பான்.

தனியாக மதிய உணவை உண்ணுபவர் பெர்னாண்டஸ். அவரின் கவனத்தை பெற முயற்சி செய்யும் ஷேக் மதிய உணவு நேரத்தில் அவருடன் வரத் தொடங்குகிறான். தனக்கான தனிமை மீதான படையெடுப்பு என பெர்னாண்டஸ் அசூயை கொண்டாலும் நாகரிகம் கருதி வேறு வழியின்றி அனுமதிப்பார். மதிய நேரங்களில் ஷேக்குக்கு உணவு கிடையாது. பழங்கள் மட்டும் வாங்கி வருவான். நாகரிகம் கருதி தன் உணவிலிருந்து கொஞ்சத்தை எடுத்துக் கொள்ளுமாறு ஷேக்கிடம் பெர்ணாண்ட்ஸ் சொல்வார். பின்வரும் நாட்களில் அதையே பழக்கமாக்குவான் ஷேக்.

ரயிலே கூட்டத்தில் நிரம்பி வழிந்திருக்க அதற்குள் அமர்ந்து கொண்டு இரவு சமையலுக்கென கேரட், வெங்காயம் வெட்டும் ஜாலக்காரன் ஷேக்.

ஷேக் பார்த்த கணக்கு வழக்குகள் எதுவுமே சரியாக இல்லையென சொல்லி மேலாளர் திட்ட, பழியை பெர்னாண்டஸ் ஏற்றுக் கொள்கிறார். அறையை விட்டு வெளியேறுகையில், மேலாளர் நிறுத்தி, 'கணக்கு வழக்கு புத்தக தாள்களில் வெங்காயம், பூண்டு ஏன் மணக்கிறது?' என கத்துகிறார்.

காய்கறியை அக்கவுண்ட்ஸ் நோட் மேல் வைத்து நறுக்கியதற்கு ஷேக்கை கத்துகிறார் பெர்னாண்டஸ். ஷேக் அமைதியாக உட்கார்ந்திருக்கிறான். எந்த பாதிப்பும் கிடையாது அவனுக்கு.

நாகரிகம் பார்க்கும், அசூயை கொள்ளும் சுயமரியாதை நிறைந்த பெர்னாண்டஸ்கள் இருக்கும் வரை இவ்வுலகில் ஷேக்குகளுக்கு பாதிப்பே கிடையாது.

ஒரு நாளின் ஒரு மணி நேரத்தில் உங்களை சுற்றி குறைந்தது ஒரு ஷேக்கையேனும் நீங்கள் பார்த்திட முடியும். Self Centred என சொல்வார்களே அதுபோல இவ்வுலகின் மொத்தமுமே தன்னை சுற்றி மட்டுமே சுழலுவதாக எண்ணுவார்கள் இந்த ஷேக்குகள்.

தன் காரியம் நிறைவேறிட எந்த இறக்கத்துக்கும் இறங்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற உயரிய குறிக்கோளுடன் வாழ்பவர்கள்.

தனக்கான குறிக்கோள் நிறைவேறி அதிகாரத்துக்கு அருகே சென்றவுடன் திறமை உள்ளவனை கடுமையாக ஒடுக்குவார்கள். திறமை உள்ளே வந்துவிட்டால் தனது திறமையின்மை வெளிப்பட்டுவிடும் என்ற அச்சத்தில் திறமையை வளரவே விட மாட்டார்கள். அவர்களை சுற்றி ஷேக்குகளை மட்டும் வைத்துக் கொள்வார்கள்.

பெர்னாண்டஸ்களோ வழக்கம்போல் மனிதர்களிடம் ஆர்வமின்றி தொடர்வார்கள். சாதனையாக நினைத்து ஷேக்குகள் நெளிவது உண்மையில் சாதனை வாழ்க்கை அல்ல; புழு வாழ்க்கை என எழுத்து படைப்பார்கள்.

Irfan Khan-ம் Nawazzuddin Siddiqui-யும் நடிப்பில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து வரும் காட்சிகள் எல்லாமும் பல தடவை நிறுத்தி, பின்னோட்டி ஒவ்வொருவரின் நுட்ப நடிப்பையும் பார்த்து பார்த்து ரசிக்கவல்லவை.

படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருக்கிறது.

Also Read: பேராசை, அதிகார வெறி, வன்முறை, காதல் என தீப்பறக்கும் 'Mirzapur' - எப்படி இருக்கிறது இந்த வெப் சீரிஸ்?