Cinema
"VPF கட்டணம் இல்லாத 2 வாரங்களுக்கு மட்டும் புதிய திரைப்படங்களைத் திரையிட முடிவு" - பாரதிராஜா அறிவிப்பு!
தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், வி.பி.எஃப் கட்டணப் பிரச்சனைக்கு முடிவு எட்டும் வரை, புதிய திரைப்படங்களை வெளியிட முடியாது என தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டிஜிட்டல் புரஜெக்ஷன் நிறுவனங்கள் வி.பி.எப் கட்டணம் 2 வாரங்களுக்கு இல்லை என அறிவித்துள்ளன. இதையடுத்து வி.பி.எஃப் கட்டணம் இல்லாத 2 வாரங்களுக்கு மட்டும் புதிய திரைப்படங்களை வெளியிட முடிவு செய்துள்ளதாக நடப்பு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்காகத்தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்குத்தான். வி.பி.எஃப் சம்பந்தமான எங்கள் சங்கத்தின் நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்த நிலையில், ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக, டிஜிட்டல் புரஜெக்ஷன் நிறுவனங்கள் திடீரென்று வி.பி.எஃப் கட்டணம் தற்காலிகமாக 2 வாரங்களுக்கு இல்லை என அறிவித்திருக்கிறது. நல்லது!
திரையரங்கங்களுடன் எங்களுக்குப் பங்காளிச் சண்டை போன்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், தயாரிப்பாளர்களையோ, திரையரங்கங்களையோ பாதிப்பது எங்கள் நோக்கமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியாக டிஜிட்டல் நிறுவனங்கள் வி.பி.எப் கட்டணத்தை விலக்கி இருந்தாலும் அது 2 வாரங்களுக்காவது தயாரிப்பாளர்களுக்குப் பயன்படும் பட்சத்தில் இதை எங்கள் சிறு வெற்றியாகவும் கருதி, வி.பி.எஃப் கட்டணம் இல்லாத இந்த 2 வாரங்கள் மட்டும் எங்கள் புதிய திரைப்படங்களைத் திரையிட முடிவு செய்துள்ளோம்.
அதேசமயம் வி.பி.எஃப் கட்டணம் செலுத்தி படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். விரைவில் நல்ல நிலையான தீர்வை எட்டுவதிலும் உறுதியாக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?