Cinema

“பண்ணை வீட்டுக்குச் செல்வது மருத்துவ அவசரமா?” - ரஜினிக்கு ஒரு நியாயம்... சாமானியர்களுக்கு ஒரு நியாயமா?

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வருவதால், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்வதற்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இ-பாஸ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

அதிலும் மருத்துவம், திருமணம், இறப்பு போன்ற அவசர தேவைகளுக்காக மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு காரில் சென்றது பரபரப்புக்குள்ளானது.

மேலும், அவர் முறையாக இ-பாஸ் விண்ணப்பித்துதான் சென்றாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. என்ன தேவைக்காகச் சென்றார் என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் உள்ள தனது இளையமகள் சவுந்தர்யாவையும் அவரது மருமகன் பேரனையும் காணச் சென்றதற்கான புகைப்படமும் சமூக வலைதளத்தில் வெளியாகின.

இந்நிலையில், இன்று (ஜூலை 23) கேளம்பாக்கத்துக்குச் செல்வதற்காக ரஜினிகாந்த் இ-பாஸ் பெற்றிருக்கிறார். அது தொடர்பான பதிவும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில், சென்னை தேனாம்பேட்டையில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கத்துக்கு மருத்துவ தேவைக்காக செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ரஜினியின் கார் ஓட்டுநருக்கும் சேர்த்து இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. பண்ணை வீட்டுக்கு செல்வது மருத்துவ தேவையா என கேள்விகள் முன்வைக்கப்படுகிறது. பொதுமக்கள் பலர் அவசர மருத்துவ தேவைக்காக முறையான மருத்துவம் தொடர்பான ஆவணங்களை சமர்பித்தும் இ-பாஸ் வழங்க முடியாது என அரசு அதிகாரிகள் நிராகரித்து வருகின்றனர்.

ஆனால், நடிகர் ரஜினி பண்ணை வீட்டுக்குத்தான் செல்கிறார் எனத் தெரிந்தும் மருத்துவ அவசரம் என குறிப்பிட்டு பாஸ் வழங்கியிருப்பது ஏன் எனக் கேள்வி எழுந்துள்ளது.