Cinema

விஜய்யின் ‘மாஸ்டர்’ ரிலீஸ் எப்போது? - புது அப்டேட்டுடன் ரசிகர்களுக்கு ‘டபுள் ட்ரீட்’ கொடுத்த படக்குழு!

கொரோனா வைரஸ் காரணமாக பல துறைகளைப் போன்று சினிமாத் துறையும் முடங்கிப் போயுள்ளது. ஊரடங்கு அறிவித்த நேரம் தொட்டு, திரைத்துறை பிரபலங்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை வேலையில்லாமல் உள்ளனர். இதனால் லட்சக்கணக்கான ஊழியர்கள் திண்டாடி வருகின்றனர்.

அவர்களுக்காக தென்னிந்திய திரைத்துறை சங்கமான ஃபெப்சி சார்பாக நிதியும் திரட்டப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், 2020ம் ஆண்டின் முதல் பாதியில் பெரிதும் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளான படங்கள் நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ மற்றும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸாகவிருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக இரு படங்களின் வெளியிடலும் தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஏப்ரல் 9ம் தேதியன்று மாஸ்டர் படத்தின் புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும்படி படக்குழு வலியுறுத்தி இருந்தது.

தற்போது தேசிய ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் கொரோனா தாக்கம் அதிகரித்து மீண்டும் ஊரடங்கு மே மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட வாய்ப்புகள் உண்டாகலாம். ஆகவே ஜூன் முதல் பாதிக்குள் கொரோனா தாக்கம் குறைந்துவிடும் என்ற நம்பிக்கையுடன் படக்குழு இருப்பதால், மாஸ்டர் படத்தை நடிகர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ஊரடங்கு முடிந்த பிறகு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கட்டாயம் கொடுக்கும் என்பதில் ஐயப்பாடில்லை. இருப்பினும், படத்தின் ரிலீஸுக்கு இணையாக டீசர், ட்ரெய்லர் வெளியீட்டுக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Also Read: 'மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு' : என்ன செய்கிறது அரசு? யார் பொறுப்பேற்பது? - தி.மு.க எம்.பி விளாசல்!