Cinema

அருண் விஜய் நடித்த ‘மாஃபியா’ படத்துக்கு நேர்ந்த சோகம் : பொங்கிய கனடா ஊடகம் - காரணம் என்ன? #Mafia

கார்த்திக் நரேன் இயக்கத்தில், அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்த 'மாஃபியா Chapter 1' திரைப்படம், போதை மருந்து கடத்தும் தொழில் செய்யும் டானுக்கும், போதைத் தடுப்புப் பிரிவு அதிகாரிக்கும் நடக்கும் மோதலைச் சொல்லும் படம். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

‘மாஃபியா’ படத்தின் ஒரு காட்சியில் போலிஸ் விசாரணை செய்துள்ள விவரங்கள் ஒரு பலகையில் எழுதப்பட்டிருக்கும். அதில் போதை மருந்து கடத்தல் செய்பவனுடன் தொடர்பிலிருப்பவர்கள் என்று சிலரின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருக்கும். அந்தப் புகைப்படங்கள் மூலமாகத்தான் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

உண்மையில், அந்தப் புகைப்படங்கள் கனடாவில் ப்ரூஸ் மெக் ஆர்தர் என்ற கொலைகாரனால் கொல்லப்பட்டவர்களுடையது. கொல்லப்பட்டவர்களின் புகைப்படங்கள் போதைப் பொருள் கடத்தலில் தொடர்புள்ளவர்கள் என இப்படத்தில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘மாஃபியா’ திரைப்படம் சமீபத்தில் அமேஸான் ப்ரைம் ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியானது. அதை ரசிகர்கள் பலர் பார்த்து வந்தனர்.

இந்நிலையில், படத்தில் காட்டப்பட்ட புகைப்படத்தைப் பார்த்த புகைப்படத்தில் இடம்பெற்றவரின் உறவினர் ஒருவர், “ஏன் இவர்கள் எங்கள் குடும்பங்களுக்கு மீண்டும் நரகத்தைத் தருகிறார்கள். இது முற்றிலும் கண்ணியமற்ற செயல். மோசமாக மரணத்தைச் சந்தித்த எங்களுக்குத் தெரிந்தவர்களை இப்படிச் சித்தரித்திருப்பது எவ்வளவு பொறுப்பற்ற செயல்” என்று கண்டித்துள்ளார்.

இதையடுத்து கனடா ஊடகங்களும், ரசிகர்களும் இந்தச் செயலுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இப்படத்தை உடனடியாக அமேஸான் தளத்திலிருந்து நீக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அமேஸான் நிறுவனம் படத்தை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து அமேஸான் ப்ரைம் நிறுவனம், “டொரண்டோ தொடர் கொலையில் கொலையானவர்களின் புகைப்படங்கள் படத்தில் இடம்பெற்றது குறித்து அறிந்தோம், வருந்தினோம். உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அறிந்த தயாரிப்பு நிறுவனமான லைகா, சம்பந்தப்பட்ட குடும்பங்களிடம் நிபந்தனையின்றி மன்னிப்புக் கேட்பதாகவும், இந்தியாவில் ஊரடங்கு முடிந்தவுடன் அந்தப் புகைப்படங்கள் ‘மாஃபியா’ படத்திலிருந்து மறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Also Read: மருத்துவர்கள் ரெயின்கோட் அணிந்து சிகிச்சை... செர்பியாவுக்கு 90 டன் உபகரணங்கள் ஏற்றுமதி - வெடித்த சர்ச்சை!