Cinema

கொரோனா அச்சம் : விஜய்யின் ‘மாஸ்டர்’ திட்டமிட்டபடி ரிலீஸாகுமா? - படக்குழு சொல்லும் விளக்கம்!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருவதை அடுத்து, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்து, மக்கள் பொது இடங்களில் கூடாத வகையில் வணிக வளாகங்கள், தியேட்டர்கள், வழிபாட்டு தளங்களை மூட அரசு உத்தரவிட்டு வருகிறது.

இதனால் கோடிக் கணக்கில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு வணிகர்கள் முதல் பொதுமக்கள் வரை பல்வேறு தரப்பினரும் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், தியேட்டர் உரிமையாளர்களும் அவதியுற்று வருகின்றனர். மேலும் 31ம் தேதி வரை சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மார்ச் 31க்கு பிறகு திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கான தடை நீடிக்குமா இல்லையா என்பது கொரோனா வைரஸ் பரவலின் நிலையைப் பொறுத்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 9ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு அதற்கேற்றாற்போல் பின்னணி வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலை தொடர்ந்தால் ’மாஸ்டர்’ படம் ரிலீசாவது கேள்விக்குறியாகிவிடும்.

இதுதொடர்பாகப் பேசியுள்ள படக்குழு, கொரோனா வைரஸ் பாதிப்பின் நிலை மார்ச் 31ம் தேதிக்குள் கட்டுக்குள் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆகையால் அதுவரையில் வீட்டுக்குள்ளேயே இருந்த மக்கள் அச்சம் நீங்கி திரையரங்குகளுக்குச் செல்வார்கள், எனவே திட்டமிட்டபடி மாஸ்டர் படமும் வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

கொரோனா குறித்த அச்சம் விலகினாலும், தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் மார்ச் 27ம் தேதி முதல் எந்த புதுப்படங்களையும் விநியோகிக்கப் போவதில்லை என முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனால் விஜய்யின் ‘மாஸ்டர்’, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ உள்ளிட்ட புதுப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

Also Read: #Corona LIVE | இந்தியாவில் 147 பேருக்கு வைரஸ் பாதிப்பு: 2ம் கட்டத்தை எட்டிய கொரோனா -ICMR அதிர்ச்சி தகவல்!