Cinema

”விநியோகஸ்தர்களை காப்பாற்ற முடியாதவர்கள் நாட்டை எப்படி காப்பாற்றுவார்கள்” - டி.ராஜேந்தர் கடுமையான தாக்கு!

ரஜினி-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி கடந்த மாதம் 9ம் தேதி வெளியான படம் தர்பார். லைகா தயாரிப்பில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மும்பையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களே பெற்றிருந்தன. பொங்கலுக்கு முன்பே படம் வெளியிடப்பட்டதால் முதல் ஒருவாரம் மட்டும் திரையில் ஓடிக்கொண்டிருந்த தர்பார் அடுத்தத்தடுத்து வசூல் சரியத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் தர்பார் படத்தை அதிக பணத்துக்கு வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் அதனால் நஷ்டமடைந்துவிட்டது என போர்க்கொடி தூக்கியுள்ளனர். இயக்குநர் முருகதாஸ், லைகா, ரஜினி என மூவரிடமும் முறையிட்டும் பயனளிக்காததால் விநியோகஸ்தர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதற்கிடையில், தர்பார் பட விநியோகஸ்தர்கள் குறித்து நீதிமன்றத்தில் முருகதாஸ் வழக்குத் தொடர்ந்ததால் விவகாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தர்பார் நஷ்டம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர்.

அப்போது, “தர்பார் படத்தை அதிக விலைக்கு வாங்கி இருக்கக் கூடாது. பொங்கல் பண்டிகைக்கு நான்கு நாட்களுக்கு முன்பே படம் வெளியானதால் அது பழைய படமாகிவிட்டது. அதுபோக, தர்பார் படம் டப்பிங் படம் போலாகிவிட்டது. படத்தில் தமிழை தவிர இந்தியையே பெரும்பாலானோர் பேசுகின்றனர் என விநியோகஸ்தர்கள் புலம்புகின்றனர்.

விநியோகஸ்தர்கள் மீது வழக்கு தொடுத்துள்ள இயக்குநர் முருகதாஸுக்கு மூத்த இயக்குநர் என்ற முறையில் கேட்கிறேன். உங்களுக்கென சங்கம் இருக்கின்றது. முதலில் அங்கு புகாரளிக்காமல் போலிஸையும், நீதிமன்றத்தையும் நாடியது ஏன்? படத்தை கொண்டு சேர்ப்பது யார்? விநியோகஸ்தர்கள்தான்.

Also Read: ‘தர்பார்’ தோல்வி? : “ஊடகங்களின் முன்னிலையில் அம்பலப்படுத்துவோம்” - விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை!

விநியோகஸ்தர்கள் உங்களைத் தேடி முகமூடி அடிந்து கத்தியை தூக்கிக்கொண்டா வந்தார்கள்? விநியோகஸ்தர்கள் தர்பார் படம் தொடர்பாக பொய் கணக்கு காட்டுகிறார்கள் என கூறுகிறீர்களே நாங்கள் கணக்கு காட்டத் தயார், நீங்கள் வாதாட தயாரா?

தர்பாருக்கு முன்பு இவ்வளவு சம்பளமா வாங்கினீர்கள்? இதற்கடுத்த படத்தில் உங்களால் இவ்வளவு சம்பளம் வாங்கமுடியுமா? கரன்ட் ட்ரெண்டில் இல்லாவிட்டால் கரென்ட்டில் கூட கைவைக்கச் சொல்வார்கள். கவனமாக இருங்கள்.

படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களை காப்பாற்ற முடியாதவர்களா தமிழகத்தை காப்பாற்ற போகிறார்கள்?” என, ரஜினிகாந்த், லைகா, முருகதாஸ் அனைவருக்கும் சரமாரியாக கேள்வி கணையை தொடுத்துள்ளார் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் டி.ராஜேந்தர்.

Also Read: தர்பார் நஷ்டம் : “ரஜினி பேச்சை நம்பித்தான் படத்தை வாங்கினோம்” - கதறும் விநியோகஸ்தர்!