Cinema

CTS கட்டடம் கட்ட ரூ.23 கோடி லஞ்சம் வாங்கிய விவகாரம் : தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் காக்னிசன்ட் நிறுவன கட்டிடத்துக்கு அனுமதி பெற, அரசு அதிகாரிகளுக்கு 23 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் CTS எனும் காக்னிசன்ட் நிறுவனம், சென்னையில் அலுவலக கட்டடம் கட்ட, இந்திய நிறுவனமான எல்&டி-யுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த ஒப்பந்தத்தின் படி, சென்னையில் 27 லட்சம் சதுர அடியில் கட்டடங்கள் கட்ட தேவையான அனுமதிகள், உரிமங்கள் பெற, அரசு அதிகாரிகளுக்கு 23 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்திருப்பதாகவும், இதுகுறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், இந்தக் கட்டிடங்களுக்கு அனுமதி, சி.டி.எஸ் நிறுவனம் தனது இந்தியன் வங்கி கணக்கில் இருந்து 23 கோடி ரூபாயை அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக வழங்கியிருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

அதேபோல, புனேவில் கட்டடம் கட்ட சுற்றுச்சூழல் துறையின் தடையில்லாச் சான்று பெற அரசு அதிகாரிகளுக்கு 6 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முறைகேடுகளை அமெரிக்காவின் பங்குச் சந்தை ஆணையத்தில் ஒப்புக்கொண்டுள்ள CTS நிறுவனம், அதற்கான அபராதத்தையும் செலுத்தி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் மஹாராஷ்டிரா அரசுகள் சம்பந்தப்பட்டிருப்பதால், இதுகுறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, மார்ச் 9-ம் தேதிக்குள் மத்திய, மாநில அரசுகள், சி.பி.ஐ, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டனர்.

Also Read: “அமெரிக்கா வரை சந்தி சிரிக்கும் அ.தி.மு.க அரசின் லஞ்ச லாவண்யம்” - மு.க.ஸ்டாலின் விளாசல்!