Cinema

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தை வெளியிட இடைக்கால தடையா? - தயாரிப்பு நிறுவனம் மறுத்ததால் பரபரப்பு!

‘இரும்புத்திரை’ பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘ஹீரோ’. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாலிவுட் நடிகர் அபய் தியோல், அர்ஜுன், இவானா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படம் வரும் டிசம்பர் 20ம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், 24 ஏ.எம்.பிலிம்ஸின் பங்குதாரர்கள் டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கிளடட்ஸ் பேட்ரிக் ஹென்றி என்பவரிடம் இருந்து கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளனர். ஆண்டுக்கு 24 சதவீதம் வட்டியுடன் 10 மாதங்களில் கடனை திருப்பி செலுத்துவதாக கூறிய நிலையில், இது வரை பணத்தை திருப்பி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘ஹீரோ’ படத்தை, வெளியிட தடை விதிக்கவேண்டும் என்றும், ஒப்பந்த படி கடன் தொகை 10 கோடி ரூபாயை வட்டியுடன் திருப்பி வழங்கவும் கோரி சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையத்தில் டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவன தரப்பில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நடுவர் மையம், ஹீரோ படத்தை வேறு தலைப்பில் வெளியிடவும், வேறு நிறுவனங்களில் பெயரில் வெளியிடவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருக்கும் ’ஹீரோ’ தமிழ் திரைப்படம் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸால் தயாரிக்கப்பட்டுள்ளது. வேறெந்த தயாரிப்பு நிறுவனமும் இதில் சம்பந்தப்படவில்லை என கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சமூக ஊடகங்களில் சில பொய்யான தகவல்களைப் பார்த்தோம். அதில் ’ஹீரோ’ என்று பெயரிடப்பட்ட தமிழ்ப் படத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது என்ற விஷயம் முற்றிலும் பொய்யானது. அந்த தகவல்களில் படம் 24 ஏ.எம் புரொடக்‌ஷன்ஸால் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் தவறே. இத்தனைக்கும் ’ஹீரோ’ என்ற படத்தில் தாங்கள் சம்பந்தப்படவே இல்லை என 24 ஏ.எம் புரொடக்‌ஷன்ஸ் முன்னதாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

இந்த நபர்கள், கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கில், ’ஹீரோ’ படத்தின் பெயர், டிரேட் மார்க், டொமைன் பெயர் மற்றும் லோகோவை அனுமதியின்றி பயன்படுத்தி வருகின்றனர். எங்கள் திரைப்படம் ‘ஹீரோ’ தொடர்பாக, 24 ஏ.எம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடமோ, டி.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்திடமோ எங்களுக்கு எந்த விதமான தொடர்பும், ஒப்பந்தமும் இல்லை என்பதைப் பொதுமக்களுக்குக் கூற விரும்புகிறோம்.

இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளை நம்பி ஏமாற வேண்டாம் எனப் பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம். இப்படித் தூண்டுபவர்களை ஊக்குவிக்க வேண்டாம் என கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பாகக் கடுமையாக வலியுறுத்துகிறோம்.

இப்படியான மோசடி நிகழ்வு அல்லது எங்கள் திரைப்படம் ’ஹீரோ’ தொடர்பாக எந்தத் தவறான தகவல் வந்தாலும், அப்படியான ஏமாற்று வேலைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்.

அப்படித் தவறு செய்பவர்களுக்கு எதிராகவும், எங்கள் ’ஹீரோ’ திரைப்படத்தின் பெயரை முறையான அனுமதியின்றி பயன்படுத்தும் டி.எஸ்.ஆர் ஃபிலிமிஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் பரிசீலித்து வருகிறோம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.