Cinema

“இப்படியே போனால் யார்தான் ‘காப்பான்’ தமிழை? - சூர்யா ரசிகர்களால் அதிருப்திக்குள்ளான போலிஸ் அதிகாரி!

சூர்யாவின் 37வது படமாக உருவாகி கடந்த வாரம் வெளியானது ‘காப்பான்’. கே.வி.ஆனந்த் இயக்கிய இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா, சமுத்திரகனி, தலைவாசல் விஜய், பிரேம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திரையில் வெற்றிகரமாக காப்பான் படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரியில் சூர்யா ரசிகர்கள் செய்த செயலால் கடிதம் ஒன்று வைரலாகியுள்ளது. புவனகிரி காவல் நிலையம் அருகே இருந்த திரையரங்கு வாயிலில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மேளதாளங்களுடன் வந்து தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனையறிந்த புவனகிரி காவல் ஆய்வாளர் அம்பேத்கர், காவலரை அனுப்பி தியேட்டர் முன்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வர அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, காவல் நிலையத்துக்கு வந்த 6 கல்லூரி மாணவர்களிடமும் இனி இதுபோன்ற காரியங்களில் ஈடுபடமாட்டேன் எனச் சொல்லி கைப்பட கடிதம் எழுதச் சொல்லி, ஒருவரைப் பார்த்து இன்னொருத்தர் காப்பி அடிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார். அதன்படி மாணவர்களும் கடிதம் எழுதி கொடுத்துள்ளனர்.

6 பேர் எழுதிய கடிதங்களிலும் 10க்கும் மேற்பட்ட பிழைகள் உள்ளதைக் கண்டு அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்தார் காவல் ஆய்வாளர். அதன்பிறகு, அவர்கள் எழுதிய கடிதத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இணைத்து பதிவும் இட்டிருந்தார்.

அதில், “கல்லூரியில் பயிலும் மாணவர்களின் நிலைமை இதேபோன்று தொடர்ந்தால் யார்தான் ‘காப்பான்’ தமிழையும், இவர்களையும்” எனப் பதிவிட்டுள்ளார். காவல் ஆய்வாளரின் பதிவில் உள்ள கடிதத்தை கண்டு பலரும் கிண்டல் செய்ததோடு, தமிழ் எழுத்துப் பிழைகள் குறித்து வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது.