Cinema

“மக்கள் விரும்பும் சினிமாவே இவரது சாய்ஸ்” : பிஜூ மேனன் பிறந்ததின சிறப்புப் பகிர்வு! #HBDBijuMenon

வெள்ளிக்கிழமை என்றாலே புதிது புதிதாக படங்கள் வெளியாவதும், புதுப்புது நடிகர்கள் உதயமாவதும் வழக்கமான ஒன்று தான். ஆனால், நடிப்பு எனும் கலை அத்தனை எளிதாக எல்லோருக்கும் கை வருமா என்பது சந்தேகமே. அதிலும் ‘வெர்சடைல் ஆக்டர்’ எனும் பதத்தை ஒரு சிலருக்கு மட்டுமே குறிப்பிட்டுச் சொல்ல முடியும். அப்படியான ஒரு மலையாள நடிகர் பிஜூ மேனன்.

மலையாள திரையுலகின் தவிர்க்க முடியாத கலைஞன். எந்த கேரக்டர் என்றாலும் அப்படியே, பொருந்திப் போவதே பிஜூ மேனன் ஸ்டைல். அவருக்கு இன்று பிறந்தநாள். அவரைக் கொண்டாட என்ன காரணம் என்பதை விளக்கவே இந்த சிறப்புப் பகிர்வு.

‘ஸ்கிரீன் ப்ரசன்ஸ்’ எனும் விஷயம் எல்லா நடிகர்களுக்கும் எளிதில் வராது. திறமையான நடிப்பும், திரையில் அவர் தரும் உடல்மொழியுமே பிஜூ மேனனை மலையாளத்தின் முக்கிய நடிகனாக நிறுத்தியது. இதுவரை 130க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துவிட்டார், செகெண்ட் ஆக்டர் எனும் கேட்டகிரியில் இரண்டு முறை கேரள மாநில விருதினைப் பெற்றிருக்கிறார், துணை நடிகராக பல விருதுகள். கையில் எடுக்கும் ஒவ்வொரு கதையிலும் வித்தியாசம் காட்டுவதே பிஜூ மேனன் சக்சஸ் கிராஃபுக்கு காரணம்.

திரைக்கும், பிஜூவுக்குமான அறிமுகம் தொலைக்காட்சி சீரியல்கள் தான். அதன்பிறகு, இவர் சினிமாவில் அறிமுகமான முதல் படம் 1995ல் வெளியான ‘புத்ரன்’. ஹீரோவாக மட்டுமல்லாமல், செகண்ட் ஹீரோவாகவும் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ் கோபி, ஜெயராம், திலீப் ஆகியோருடன் நடித்திருக்கிறார். குணச்சித்திர வேடங்கள் மற்றும் வில்லன் ரோல்களில் பின்னிப் பெடலெடுப்பார். குறிப்பாக, மம்முட்டியுடன் ‘அழகிய ராவணன்’, சுரேஷ் கோபியுடன் ‘புத்ரன்’, ஜெயராமுடன் ‘Krishnagudiyil Oru Pranayakalathu’, மோகன்லாலுடன் ‘ஸ்நேகவீடு’உள்ளிட்ட படங்கள் செகெண்ட் ஹீரோவாக பிஜூவின் பட வரிசையில் குறித்துவைத்துக் கொள்ள வேண்டிய படங்கள்.

அதே நேரத்தில் ஹீரோவாகவும் பல படங்களில் வெற்றியும் கொடுத்திருக்கிறார் பிஜூ. ஆரம்ப காலத்தில் ரொமான்டிக் ஹீரோவாக ‘பிரணயவர்ணங்கள்’, ‘Meghamalhar’ படங்களில் அசத்தினார். ரொமான்ஸ் மட்டுமல்ல, ஆக்‌ஷன் நடிகராகவும் ரசிகன் மனதில் நின்றது ‘ஷிவம்’ திரைப்படத்தில் தான். படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும், பிஜூவுக்கு பெஸ்ட் ஆக்‌ஷன் பெர்ஃபார்மிங் படமாக இருந்தது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பிஜூவின் கதைத் தேர்வும், கதைக்களமும் ஆச்சரியப்படுத்தும் விதத்திலேயே இருக்கும். சுந்தர்.சி - பூனம் பாஜ்வா நடிப்பில் வெளியான முத்தின கத்திரிகா படம் நினைவிருக்கிறதா? அதன் ஒரிஜினல் பிஜூ மேனன் - நிக்கி கல்ராணி நடித்த வெள்ளி முங்ஙா தான். ஒரிஜினல் செம ஹிட். ஏனென்றால் அதன் கதைக்களம் வித்தியாசமாக இருக்கும். நாற்பது வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாத ஹீரோ. அரசியலிலும் பெரிதாக சாதிக்கவில்லை. எதை எடுத்தாலும் மொக்கை வாங்கும் நாயகனின் கதை தான் களம்.

இதே நேரத்தில் இன்னொரு பிளாக் காமெடி படத்தை கூறவேண்டுமென்றால் ‘ரோசாப்பூ’ படத்தைக் குறிப்பிடலாம். கழுத்தளவு கடனில் தவிக்கும் நாயகன் பிஜூ. கேபிள் சேனலில் வேலை செய்யும் நீரஜ் மாதவ் உடன் இணைந்து புதிய தொழில் செய்ய நினைக்கிறார். எடுக்கும் முயற்சிகள் அத்தனையுமே தோல்வி. அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதே ஒன்லைன். காமெடியில் அசத்தியிருப்பார் பிஜூ.

பிஜூவின் இன்னொரு படம் கூட, தமிழில் ரீமேக் ஆனது. பார்த்திபன், விமல் நடிப்பில் கரு.பழனியப்பன் இயக்கத்தில் வெளியான ‘ஜன்னல் ஓரம்’ படம் தான் அது. மலையாளத்தில் பிஜூ மேனனும், குஞ்சக்கோ கோபனும் நடித்த ஆர்டினரி படம் தான் ஒரிஜினல். பேருந்து ஓட்டுநரும், நடத்துனருமான பிஜூவும் குஞ்சக்கோ கோபனும் விபத்து ஒன்றைச் செய்துவிடுகிறார்கள். அதில் ஒருவர் இறந்துபோகிறார். இறந்தது யார், நிஜமாகவே என்ன ஆனது என்பதே கதைக்களம்.

காமெடி பாத்திரங்களில் படம் தருவதால் மட்டுமே பிஜூ கொண்டாடப் படவேண்டியவர் கிடையாது. கிளாசிக்கான திரைப்படங்களையும் பிஜூ தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். அதற்கு கச்சிதமான உதாரணம் லீலா. இலக்கியங்களை படமாக்குவது சாதாரண விஷயமல்ல. சப்பகுரிசு, முன்னறியிப்பு, சார்லி படங்களின் திரைக்கதையாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக கேரளத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் உண்ணியின் பின்நவீனத்துவ சிறுகதையே லீலா.

எழுத்தில் புனையப்பட்ட சாராம்சம் குறையாமல், எந்தவித சமரசமும் இன்றி, பிரச்னைகள் எழும் என்பதை உணர்ந்தும் துணிந்து படத்தை எடுத்திருப்பார் இயக்குநர் இரஞ்சித். அதில் துணிந்து நடித்திருப்பார் பிஜூ மேனன்.

ஜாலியாக இருப்பது மட்டுமே குட்டியப்பனுக்கும், அவரது நண்பர்களுக்கும் தெரிந்த ஒரே விஷயம். இவர்களின் வாழ்க்கையில் குறுக்கு வெட்டாக நுழையும் லீலாவும், அதன்பிறகான சம்பவமுமே படம். ஜாலியான கேரக்டர் என ஒரே வார்த்தையில் சொல்லிவிட முடியாது. ஏனெனில் முதல் காட்சியிலேயே குடித்துவிட்டு குதிரையில் வந்து போலீஸை டரியலாக்குவது, தினமும் மாடிப்படியேறிவந்து எழுப்பி விடும் அம்மாவை, இனி ஏணியில் வந்து ஜன்னல் வழியாக எழுப்பி விடு என்பது, யானை வாங்க வேண்டும் என நினைப்பது என சிறப்பான கற்பனை.

இவரது தேர்வில், ‘Rakshadhikari Baiju Oppu’ திரைப்படத்தைக் கூட குறிப்பிடலாம். கும்பளம் டீமின் ஒட்டுமொத்த சந்தோஷமும் அந்த மைதானம் தான். அதன் கேப்டன் பிஜூ மேனன். விளையாட்டு, ஆண்டு விழா, கொண்டாட்டம் என இருக்கும் மைதானத்தை அதன் உரிமையாளர் விற்றுவிடுகிறார். புதிய உரிமையாளர் அந்த இடத்தில் மருத்துவமனை கட்ட நினைக்கிறார். அந்த மைதானத்தையே வாழ்க்கையாக நினைக்கும் நபர்களின் உணர்வுகளே கதைக்களம்.

இப்படி சாதாரண, மனித இயல்புகளைப் படமாக்குவதும், அதைத் தேர்ந்தெடுத்து நடிப்பதுமே பிஜூவை கவனிக்க வைக்கிறது. இந்த உலகத்தில் கோடிக்கணக்கானவர்கள் வாழ்கிறார்கள், போகிறார்கள். இந்த பூமியில் கதைகளும் கொட்டிக் கிடக்கின்றன. கதை சொல்லவேண்டும். எளிமையான கதையாக, மனித மனங்களின் பிரதிபலிப்பாக இருக்கவேண்டும். அப்படியான கதைக்களங்களில் நடிப்பது என மக்கள் விரும்பும் சினிமாவை தருபவர் பிஜூ மேனன்.

படம் வெற்றியோ- தோல்வியோ, லாபமோ-நஷ்டமோ கவலையில்லை என வித்தியாசமான கதைகளை மட்டும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் பிஜூ மேனனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..!