Cinema

‘பிகில்’ கதை திருட்டு வழக்கை ஐகோர்ட்டில் தொடரப்போகிறேன்... குறும்பட இயக்குநர் அதிரடி!

விஜய் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘பிகில்’. தெறி, மெர்சல் வெற்றிக்குப் பிறகு, மூன்றாவது முறையாக இணைந்துள்ளது இந்தக் கூட்டணி. ‘மெர்சல்’ படத்தை அடுத்து பிகில் படத்திலும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் விஜய் - அட்லீ கூட்டணியுடன் இணைந்துள்ளார்.

இந்தப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகி வருகிறது. நயன்தாரா, விவேக், இந்துஜா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படம், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என ஏற்கெனவே தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். அறிவித்திருந்தது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

குறும்பட இயக்குநர் செல்வா

முன்னதாக, இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று கூறி குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் குறும்பட இயக்குநர் செல்வா அந்த வழக்கை வாபஸ் வாங்கினார். வழக்கை வாபஸ் பெற்றதன் மூலம் மனு தள்ளுபடி ஆனது.

இதன்மூலம் பிகில் படம் திரையிடப்படுவதில் பிரச்னையை ஏதும் இருக்காது என ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக குறும்பட இயக்குநர் செல்வா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூறிய செல்வா, 5 மாதங்களாக சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில், பிகில் கதை வேறு என்னுடைய கதை வேறு என அவர்கள் சொல்லவில்லை. என்னைச் சந்திக்கவில்லை என்று படக்குழு மறுப்பும் தெரிவிக்கவில்லை. அவர்கள் சொன்னதெல்லாம் கதை தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் தான் நடக்கவேண்டும்; அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறும்தான் கடந்த ஐந்து மாதங்களாக அவர்கள் வாதாடினார்கள்.

‘பிகில்’ ரிலீஸ் நெருங்குவதால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாமென முடிவெடுத்தே சிவில் நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப்பெற்றேன். அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு அந்த மனுவை தள்ளுபடி செய்தார்கள். இன்னும் ஒரு வாரத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். ஏ.ஜி.எஸ் நிறுவனம் என்னை வைத்து மோசமாக அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்கள்.'' எனத் தெரிவித்துள்ளார்.