Cinema

தோல்விகளை துச்சமெனக் கடந்த ‘ஃபீனிக்ஸ் பறவை’ : 27 Years of #Ajithism

ரசிகர்களால் கட்டியெழுப்பப்பட்ட ஒற்றை வார்த்தை ‘சினிமா’. ரசிகர்கள் இன்றி இங்கு எதுவும் இல்லை. ஒரு ஸ்டார் அந்தஸ்தை நடிகர்களுக்கு, எந்த ரசிகனும் எளிதில் கொடுத்துவிடமாட்டான் அப்படி கொடுத்துவிட்டால், அந்த நடிகரை உச்சத்துக்குக் கொண்டு வைப்பான். அப்படியாக ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டிருக்கும் ஃபீனிக்ஸ் நடிகர் அஜித்குமார்.

அஜித்தின் சினிமா பயணம் கரடுமுரடான மலைகளுக்கு நடுவிலான சிகரம். ஒன்றிரண்டு படங்களில் இது நடந்துவிடவில்லை. இதற்கு நடுவே நிகழ்ந்த உழைப்பும், தோல்வியும் அதிகம். தடைகளை உடைப்பதும், புகழைக் கொண்டாடாமல் இருப்பதும், வெற்றியையும் - தோல்வியையும் சமமாகப் பார்ப்பதுமே அஜித்தின் மேஜிக்.

27 வருட திரையனுபவம் என்பது அத்தனை சுலபமான பாதையாக அஜித்துக்கு அமைந்துவிடவில்லை. இப்போது 59வது படத்தை எட்டியிருக்கிறார். ‘நேர்கொண்ட பார்வை’ இன்று வெளியாகியிருக்கிறது. படத்தை எடுக்கும் தயாரிப்பாளருக்கும், படத்தை ரசிக்கும் ரசிகனுக்கும் என இருதரப்புக்குமான ஒற்றை நம்பிக்கை அஜித். இந்த ‘அஜித்திஸம்’ எப்படி கட்டி எழுப்பப்பட்டது என்பதைப் பார்க்கலாம்.

சினிமா பின்புலம் இருந்தால் எளிதில் சினிமாவை தொட்டு விடலாம். ஆனால், திறமை இருந்தால் மட்டுமே அதில் நிலைத்திருக்கமுடியும். ஆனால், துளியும் சினிமாவுக்கு தொடர்பில்லாத நடுத்தரக் குடும்பத்திலிருந்து திரைப்பயணத்தை தொடங்குகிறார் அஜித். ஒரு பக்கம் பைக் ரேஸ், இன்னொரு பக்கம் சினிமா கனவுடன் வாய்ப்பு தேடி அலைகிறார். ஆனால், சினிமா வாய்ப்புக்கு பதில் மாடலிங் வாய்ப்பு கிடைக்க, அதன்வழியாக, பி.சி.ஸ்ரீராம் அறிமுகம் கிடைக்கிறது. அந்த வாய்ப்பு, அஜித்தை மணிரத்னம் முன்பு நிறுத்துகிறது.

அஜித்தின் ஹீரோ கனவு, மணிரத்னம் மூலமாக நிறைவேறியிருக்க வேண்டியது. ஆனால் அந்தப் படம் கைவிடப்படுகிறது. முதல் வாய்ப்பே அஜித்துக்கு தோல்வி. சிறியதோ, பெரியதோ எந்த ரோல் கிடைத்தாலும் நடித்துவிடலாம் என்றிருந்தவருக்கு தெலுங்கிலிருந்து வாய்ப்பு தேடி வருகிறது. கொல்லப்புடி சீனிவாச ராவ் இயக்கத்தில் பிரேம புஸ்தகம் படத்தில் ஒப்பந்தமாகிறார். அதே வேளையில் இயக்குநர் செல்வா, அமராவதி பட வேலைகளில் இருந்தார். அந்த நேரத்தில் அஜித்தின் புகைப்படம் கிடைக்க, ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகருக்கு பதில் அஜித்தை நடிக்கவைக்கிறார்.

முதலில் வெளியானதும் ‘அமராவதி’ தான். படம் சூப்பர் ஹிட். புதுப்பட வாய்ப்புகள் குவிந்தன, எக்கச்சக்க ரசிகர்கள் என்கிற சீனெல்லாம் இல்லை. படம் ஆவரேஜ் தான். முதல் படத்திலேயே ஹிட் கொடுக்காவிட்டால், புதுமுக நடிகர் போல மீண்டும், வாய்ப்பு தேடி அலையவேண்டும். அப்படி பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே என தொடர்ந்து மூன்று படங்கள். மூன்றுமே பெரிதாக வெற்றியைத் தரவில்லை. ஆனால், அஜித்தும், விஜய்யும் இணைந்து நடித்த படமாக மனதில் நிற்கிறது ‘ராஜாவின் பார்வையிலே’.

மணிரத்னம் படத்தில் அறிமுகமாக வேண்டியவருக்கு, முதல் வெற்றியும் மணிரத்னம் தயாரிப்பில் வெளியான ‘ஆசை’ படத்தின் மூலம் கிடைத்தது. அப்படியென்றால், அஜித்தின் முதல் படமாக ஆசையை எடுத்துக் கொள்ளலாம். ‘கொஞ்சநாள் பொறு தலைவா...’, ‘ஒரு வஞ்சிக் கொடி இங்கே வருவா...’ என தேவாவின் இசையில் எல்லாப் பாடல்களும் ஹிட். வைரமுத்துவும், வாலியும் போட்டி போட்டு பாட்டெழுதியிருப்பார்கள். 200 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி, வசூலை அள்ளுகிறது. அஜித்தின் டீசண்டான ஓபனிங் இந்தப் படம் தான்.

95ல் ஆசை கொடுத்த வெற்றி, அடுத்த வருடமே நான்கு படங்கள் வெளியாகக் காரணமாகிறது. ‘வான்மதி’, ‘கல்லூரி வாசல்’, ‘மைனர் மாப்பிள்ளை’ மற்றும் ‘காதல் கோட்டை’ . இதில் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களம். இதில் காதல் கோட்டை அஜித்தை அடுத்த தளத்துக்கு நகர்த்தியது. இந்த இடத்தில் ரசிகர்களின் ஆதர்ச நாயகனாக மாறுகிறார் அஜித். ஆர்ப்பாட்டமான வாணவேடிக்கைகளை விட, மிக எளிமையாக ஒளிவீசும் ஒரு மெழுகுவத்தி நம் மனதை அள்ளிக்கொண்டு போகும். அப்படியான வருடும் மெழுகுவர்த்தியாக மனதில் நிற்கிறது காதல்கோட்டை.

கடைசி வரை நேரில் பார்த்துக் கொள்ளாத காதலரின் கதை என்பது நிச்சயம் ஆச்சரியமான கரு. அப்படியான ஒரு கதையை தைரியமாக தேர்ந்தெடுப்பதும் நடிப்பதும் கொஞ்சம் ரிஸ்க்தான். அதற்கு நடிப்பாலும், காதலாலும் உயிர் கொடுத்திருப்பார் அஜித். துப்பாக்கியை நீட்டும் வில்லன்கள் இல்லை, எளிமையான மனிதர்கள், சராசரியான வாழ்க்கை என படம் முழுவதும் இருந்த இன்ப அதிர்ச்சியே படத்தின் வெற்றி. கொட்டுகிற மழையில் - ஆட்டோவில் - ஒருவரையொருவர் யாரென்றே தெரிந்துகொள்ளாமல் டிரைவரும் பாஸஞ்சருமாக காதலர்கள் பயணிக்கும் ஒற்றைக் காட்சி அதற்குச் சாட்சி.

இந்த இடத்தில் சினிமா பயணத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த இரண்டு விஷயங்களைச் செய்கிறார். நட்புக்காக நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தியை ராசி படத்தின் வழி, தயாரிப்பாளராக்கினார். அவர் தயாரிப்பில் ஒன்பது படங்கள் நடிக்கிறார். இரண்டாவது, புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்துவது. அப்படி தொடர்ந்து இயக்குநர்களை களத்தில் இறக்கிவிட, அவற்றில் பல ஃப்ளாப் ஆகிறது. அந்த வேளையில் அஜித்தை ‘ரசிகனின் காதலனாக’ மாற்றியது அறிமுக இயக்குநர் சரணின் ‘காதல் மன்னன்’. பிறகு, ‘வாலி’ எஸ்.ஜே.சூர்யா, ‘முகவரி’ துரை, ‘தீனா’ ஏ.ஆர்.முருகதாஸ், ‘சிட்டிசன்’ சரவண சுப்பையா, ‘கிரீடம்’ ஏ.எல்.விஜய், என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இயக்குநர்களை அறிமுகப்படுத்துகிறார்.

இப்படி புதுமுக இயகுநரின் படத்தில் துணிந்து நடிப்பதெல்லாம் சாராதண விஷயமல்ல. இதற்கெல்லாம் அடித்தளம் நம்பிக்கை மட்டுமே. இவற்றில் ரசிகர்களோடு அஜித்தை இன்னும் நெருக்கமாக்கிய ஒரு படமென்றால் அது வாலி. அஜித்தின் முதல் இரட்டை வேட திரைப்படம். எல்லாப் பாடலும் ஹிட். இரண்டும் வித்தியாசமான கதாபாத்திரங்கள். குறிப்பாக, சிம்ரனுடன் மனோதத்துவ மருத்துவமனையில் இருக்கும் இடத்தில் தேவா - சிவா என இரண்டு கேரக்டரையும் மாறி மாறி நடிக்கும் இடமெல்லாம் அஜித்தை ரசிகர்கள் இன்னும் அதிகமாகக் கொண்டாட வைத்தது. வாலி படத்தில் நடிக்க அஜித் துணிந்திருக்காவிட்டால், எஸ்.ஜே.சூர்யா எனும் இயக்குநர், நடிகர் நமக்குக் கிடைத்திருக்கமாட்டார்.

அஜித்தின் கிராஃபில் அதிகமாக காதல் படங்களே அதிகம் நடித்திருந்த நேரம். முதன்முறையாக ஒரு ஆக்‌ஷன் கலந்த ரொமான்டிக் படமாகத் திரைக்கு வருகிறது அமர்க்களம். படத்தில் ஆக்‌ஷனையும், நிஜ வாழ்க்கையில் காதலையும் தந்துவிட்டுச் சென்ற மிகமுக்கியமான படம். ஒரு படம் ஹிட் கொடுத்தால், தொடர்ந்து இரண்டு படங்கள் ஃப்ளாப் ஆகிவிடும் அஜித்துக்கு. பொதுவாக பெரிய ஹீரோக்கள் சிங்கிள் ஹீரோ சப்ஜெக்டில் தான் அதிக கவனம் செலுத்துவார்கள். அதை உடைத்து அஜித் நடித்த படம் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’. மூன்று காதல்கதைகளில் ஒரு கதை அஜித்துடையது. அவ்வளவே. பெண் ரசிகைகளை அஜித்துக்கு இன்னும் அதிகமாக இந்தப் படம் தான் தருகிறது.

ஒரு மாஸ் கதை மட்டுமே, ஒரு நடிகனை இன்னும் அழுத்தமாக ரசிகன் மனதில் பதிக்கும். அஜித்தை ‘தல’யாக மாற்றிய இடம் தீனா. இந்தப் படத்துக்குப் பிறகு தொடர்ந்து தோல்வி. அஜித்தின் நாட்டம் பைக் ரேஸ் மீது சென்றதும் இந்த நேரத்தில் தான். தொட்டது எதுவும் கைகொடுக்கவில்லை. துவண்டுபோயிருந்த அஜித்துக்கு மீண்டும் சினிமா சிவப்புக் கம்பளம் விரித்தது ‘வரலாறு’ படத்தில். இனி சினிமா மட்டும் தான் வாழ்க்கை. மற்றதெல்லாம் பொழுதுபோக்கு தான் என உணர்ந்ததும் இந்த இடத்தில் தான். வரலாறு படமும் வசூலில் அடித்துநொறுக்கியது.

இயக்குநர் தரணி வழியாக தெலுங்கு ரீமேக்கான கில்லி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அது கைகூடவில்லை. பின்னர், தமிழ்ப் படமான பில்லா ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு கைகூடுகிறது. தெலுங்கு ரீமேக் என்றால் கூட வேறு மொழிப் படம், தமிழுக்கு அறிமுகமில்லை. ஆனால், தமிழ்ப் படம், அதுவும் ரஜினி நடித்த படம். அனைவருக்கும் தெரிந்த கதை. அந்தக் கதையில் மீண்டும் நடிக்கத் துணிந்து ஒரு முடிவெடுக்கிறார். அது ரஜினிக்குக் கொடுத்த வெற்றியை, பலமடங்காக்கி மீண்டும் அஜித்துக்கு கொடுத்தது. ரொமான்டிக் ஹீரோ, மாஸ் ஹீரோவாக இருந்தவரை ஸ்டைலிஷ் ஹீரோவாக ரசிகர்களுக்குக் காட்டிய படம். பில்லாவின் இரண்டு பாகங்களுமே தனித்தனியாக கிளாசிக் தான்.

ஹீரோ என்றால் நல்லவனாக மட்டும் தான் இருக்கவேண்டுமா? நெகட்டிவ் ரோலில் ஒரு படத்தைப் பண்ணலாம் என மீண்டும் நினைத்தவருக்கு ஐம்பதாவது படம் ‘மங்காத்தா’. 90ஸ் கிட்ஸ் அஜித்தை இன்னும் அதிகமாகக் காதலிக்க, கொண்டாட இந்தப் படம் தான் காரணம்.

பக்காவான ஒரு ஸ்கிரிப்டுடன் அஜித்துக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி ‘ஆரம்பம்’. தனக்கு எது சரியாக வரும், என்ன மாதிரியான நடிப்பு வரும், இனி எந்தமாதிரியான கதைக்களத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற தெளிவுடன் அஜித் தேர்ந்தெடுத்து வெற்றி கொடுத்த படம் இது.

கெளதம் மேனனுடன் காக்க காக்க ஸ்கிரிப்டில் நடிக்க வேண்டியது, என்னை அறிந்தால் படத்தில் நிறைவேறுகிறது. ஒரு டீசண்டான படம். மாஸ் போலீஸ் ஹீரோ என்றில்லாமல், கிளாஸ் போலீஸாக கெத்து காட்டினார்.

நட்புக்காக ஸ்ரீதேவியின் இங்கிலீஷ் விங்கிலீஷ். மீண்டும் நட்புக்காக சிவாவுடன் நான்கு படங்கள். வீரம், விவேகம், வேதாளம் மற்றும் விஸ்வாசம். சமீபத்திய அஜித் படங்கள் விமர்சனங்களைச் சந்தித்தாலும், வசூலில் தாறுமாறாக ஹிட் கொடுத்தன என்பதே உண்மை. ஆரம்பம் படத்திலிருந்து விஸ்வாசம் வரை வசூலில் படங்கள் சறுக்கவில்லை. ரசிகர்களும் அஜித்தை கொண்டாடவும் தவறவில்லை.

பில்லா படத்துக்குப் பிறகு, மறுபடியும் ஒரு ரீமேக் படம் நேர்கொண்ட பார்வை. அஜித்தின் 59வது படம். ரீமேக் படமொன்றில் வெற்றியைத் தருவது அத்தனை சுலபமல்ல. ஒரிஜினலை தாண்டிய ஒரு மேஜிக் அதில் இருக்கவேண்டும். அதை இயக்குநர் வினோத் இந்தப் படத்தில் செய்திருக்கிறார்.

சமூகத்தில் நடக்கும் மோசடிக் குற்றங்களை கேண்டிட் சினிமாவாக சதுரங்கவேட்டையில் தந்தவர், கமர்ஷியல் போலீஸ் படங்களுக்கு மத்தியில், நடுங்கவைக்கும் கொள்ளைக் கூட்டத்தை தேடிச் செல்லும் நிஜ போலீஸின் வாழ்க்கையை தீரன் அதிகாரம் ஒன்றில் தந்தவர். வினோத்தின் ஸ்கிரிப்டில் டீட்டெயிலிங் இருக்கும். அது நேர்கொண்ட பார்வையிலும் நிகழ்ந்திருக்கிறது. ஹெச்.வினோத் கூட்டணியில் அஜித்தின் 60வது படத்திலும் நிச்சயம் அந்த மேஜிக் நிகழும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

பர்சனல் வாழ்க்கையில் அஜித் அப்படி, இப்படி என ஒரு பக்கம் சிலாகிப்பார்கள். மறுபக்கம், ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டார். ரசிகர்களைச் சந்திக்கமாட்டார். எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டார். சமூக பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க மாட்டார். சமூக வலைதளத்தில் இருந்து ஒதுங்கியிருக்கிறார் என பல குற்றச்சாட்டுகள் வைப்பார்கள். இந்த இரண்டையுமே தவிர்த்துவிடலாம்.

ஏனெனில், நடிப்பு மட்டுமே தனக்காக வேலை; ரசிகனை மகிழ்விப்பது மட்டுமே ஒரே கடமை என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார். நடிகராக காதல், மாஸ், ஆக்‌ஷன், க்ளாஸ் என எல்லா தளத்திலும் அஜித் கொடுத்த சறுக்கலும், அதன் பின்னான வெற்றியுமே ரசிகனை ஆட்கொண்ட அஜித்திஸம்.