Cinema
சினி அப்டேட்ஸ் 5 : ஹாலிவுட்டில் காஜல் அகர்வால்... அருண் விஜய்யின் அடுத்த படம்!
1. அருண் விஜய்யின் அடுத்த படம்!
திரைத்துறையைப் பொறுத்தவரை, ஒரு நடிகரின் திரைப்படம் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்தால், அவரின் அடுத்தடுத்த படங்களும் முடங்கத் தொடங்கிவிடும். ஆனால், ஒரு படம் ஹிட் கொடுத்துவிட்டால், புதிய படங்கள் புத்துயிர் பெற்று வேகமாக ரிலீஸூக்கு தயாராகும். அப்படித்தான், அருண்விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தடம்’ படம் கொடுத்த ஹிட் காரணமாக, அவரது நடிப்பில் உருவாகி, நீண்டநாளாக கிடப்பில் கிடந்த ‘வா டீல்’ திரைப்படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள்.
அருண்விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் ‘அக்னி சிறகுகள்’ மற்றும் ‘பாக்ஸர்’ திரைப்படங்களை விரைவில் முடித்து, ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்கள். தவிர, துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். அதில் அருண் விஜய்க்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் வில்லனாக பிரசன்னா நடிக்க இருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்தப் படத்துக்கு ‘மாஃபியா’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தை வரும் 6-ஆம் தேதி பூஜையோடு துவங்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
2. ஹாலிவுட் படத்தில் காஜல் அகர்வால்!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் விஜய்யுடன் நடித்த ‘மெர்சல்’. பிறகு, தெலுங்கில் ‘அவ்’, ‘எம்.எல்.ஏ’, ‘கவசம்’, ‘சிதா’ என நான்கு படங்கள் வெளியாகிவிட்டன. தற்போது தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ மற்றும் ‘கோமாளி’ படங்களில் நடித்துவருகிறார்.
இந்நிலையில், ஹாலிவுட் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை முன்னணி ஹாலிவுட் இயக்குநர் ஒருவர் இயக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறாராம். ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் உருவாக இருக்கிறதாம்.
3. ‘ராஜூ காரி காதி’ மூன்றாம் பாகத்தில் இருந்து தமன்னா விலகியது ஏன்?
தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஹாரர் படம் தான் ராஜூ காரி காதி. 2015-ல் ரிலிஸான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, 2017-ல் இதன் இரண்டாம் பாகம் வெளியானது. அதில் நாகார்ஜூனா, சமந்தா நடித்திருந்தனர். இப்படமும் ஹிட்டாக, மூன்றாம் பாகம் எடுக்க தயாரானார்கள். இவ்விரண்டு பாகங்களையும் இயக்கிய ஓம்கர் தான் மூன்றாம் பாகத்துக்கும் இயக்குநர்.
ஹீரோவாக அஸ்வின் பாபு நடிக்க, ஜோடியாக தமன்னா நடிக்க ஒப்பந்தமானார். கடந்த வாரம் பூஜையோடு மூன்றாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கியது. ஏற்கெனவே ‘தேவி’, ‘தேவி 2’, ‘காமோஷி’ என ஹாரர் படங்களில் நடித்திருக்கிறார் தமன்னா. அதில் ‘தேவி’ மட்டுமே வெற்றிப்படமாக அமைந்ததால், இந்தப் படத்தில் அதிக கவனம் செலுத்தினாராம். ஆனால் திரைக்கதையில் இயக்குநர் சில மாற்றங்கள் சொல்லியிருக்கிறார். அது பிடிக்காமல் போக, படத்திலிருந்து தற்போது விலகியிருக்கிறார் தமன்னா.
4. ‘ஜுமான்ஜி-’ரசிகர்களே... மூன்றாம் பாகத்தின் டிரெய்லர் இதோ..!
1995-ல் ராபின் வில்லியம்ஸ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஹாலிவுட் படம் தான் ‘ஜுமான்ஜி’. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்திருந்த இந்தப் படத்தின் இரண்டாவது பாகம், கிட்டத்தட்ட 12 வருடம் கழித்து, 2017-ல் தான் வெளியானது. ஜாக் காஸ்டன் இயக்கத்தில் வெயின் ஜான்சன் நடிப்பில் வெளியான இந்தப் படத்தில் ஜாக் ப்ளாக், கெவின் ஹார்ட், கரென் கில்லன், நிக் ஜோன்ஸ் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர்.
முதல் பாகத்தில் இருந்த வசீகரம், அடுத்து வெளியான இரண்டாவது பாகத்தில் இல்லை என்றாலும், டெக்னாலஜி டெவலப்மெண்ட்ஸ் படத்தை ரசிக்க வைத்தது. இந்நிலையில், இதன் மூன்றாவது பாகத்தை எடுத்து முடித்துவிட்டது படக்குழு. தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இரண்டாம் பாகத்தில் கதையை நகர்த்திய ஸ்பென்சர் எனும் பையனைத் தேடிப் போவது போல அமைந்திருக்கிறது மூன்றாவது பாகம்.
5. கேப்டன் அமெரிக்காவின் இடத்தை பிடித்த ட்ரான்ஸ்ஃபார்மர் நடிகர்!
மார்வெல் சீரிஸின் தலைவனாகப் பார்க்கப்பட்டவர் கேப்டன் அமெரிக்கா. இந்த கேரக்டரில் நடித்ததன் மூலம் உலகமெங்கும் பிரபலமானார் கிறிஸ் எவன்ஸ். கடைசியா வெளியான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தில் இவரின் கேரக்டர் அதிகம் பேசப்பட்டது.
தற்போது, இவரது நடிப்பில் ‘சூப்பர் பவர் டாக்ஸ்’, ‘தி ரெட் சீ டைவிங் ரெசோர்ட்’, ‘Knives Out’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இப்படங்கள் மட்டுமின்றி, இன்னும் சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கார் கிறிஸ். அதில் ஒரு படம் தான் ‘இன்ஃபினிட்’. போதுமான நாட்கள் கால்ஷீட் கொடுக்க முடியாததால், இப்படத்திலிருந்து விலகிவிட்டாராம் கிறிஸ். இவருக்கு பதிலாக நடிக்க தற்போது Mark Wahlberg ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். பிரபல ஹாலிவுட் படமான டிரான்ஸ்ஃபார்மர் படத்தில் லீட் ரோலில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர். ஏற்கனவே ஆஸ்கர் விருதில், சிறந்த நடிகருக்காக பரிந்துரைக்கப்பட்ட இவர், இந்தப் படத்தின் மூலம் சிறந்த நடிகர் விருதை தனதாக்குவார் என எதிர்பார்க்கலாம்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!