ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒன்றரை வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், உக்ரைனின் ராணுவத்தில் மேஜராக பணிபுரியும் வீரர் ஒருவரை பரிசுபொருளில் வெடிகுண்டு வைத்து சக வீரரே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. 39 வயதான மேஜர் ஹென்னாடி சாஸ்டியாகோவ் என்பவர் தனது வீட்டில் இருந்தபோது அவரது ராணுவ த்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து பார்சலில் பரிசு பொருள் ஒன்று இருந்துள்ளது.
இதனை அவரின் மகன் திறந்த நிலையில், அதில் கையெறி குண்டுகள் இருந்துள்ளது. அதனை அறியாத சிறுவன் அதன் கீயை திறக்க முயன்றுள்ளார்.இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராணுவ அதிகாரி, குழந்தையிடம் இருந்து கையெறி குண்டுகளை பறித்தபோது அது பயங்கர சத்தத்தோடு வெடித்துள்ளது. இதில் அந்த ராணுவ மேஜர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மகன் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் போலீசார் சோதனையிட்டபோது அங்கிருந்து மேலும் 5 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடைபெற்று வருவதாகவும், இந்த செயலில் ஈடுபட்ட சக ராணுவ வீரர் கண்டறியப்பட்டார் என்றும் உக்ரைன் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.