தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (8.8.2024) முகாம் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக, மதுரை நகரத்தின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் “மா மதுரை விழா”-வினை தொடங்கி வைத்து ஆற்றிய உரை:-
திங்களைப் போற்றுதும்… திங்களைப் போற்றுதும்… ஞாயிறு போற்றுதும்… ஞாயிறு போற்றுதும்… மாமழை போற்றுதும்… மாமழை போற்றுதும் என்று சிலப்பதிகாரம் தீட்டிய இளங்கோவடிகள் எழுதினார்!
இப்போது, “மா மதுரை போற்றுவோம்! மா மதுரை போற்றுவோம்!”- என்று வேள்பாரி தீட்டிய எழுத்தாளர் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் நிகழ்ச்சியை நடத்துகிறார்.
எல்லாருக்கும் அவர் அவர்களின் ஊர் பெருமைக்குரியதுதான்; போற்றுதலுக்குரியதுதான். அதிலும் குறிப்பாக, மதுரை மாநகர் என்பது பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்டது என்று நான் அதிகம் விளக்கத் தேவையில்லை.
* இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்று மதுரை.
* இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்டது மதுரை.
* பாண்டிய மன்னர்கள் தலைநகராக ஆட்சி செய்த நகரம்.
* ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன் ஆட்சி செய்த நகரம்.
* “தவறு செய்தவன் மன்னனே ஆனாலும்” மன்னனைக் கண்ணகி கேள்வி கேட்ட மண் இது.
* நீதியைக் காக்க தன்னுடைய உயிரையே தந்த மன்னர் ஆட்சி செய்த இடம் இது.
* திருமலை நாயக்கரும், ராணி மங்கம்மாளும் ஆண்ட பூமி இது.
* புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கும் கோயில் நகரம் இது.
* அனைத்துக் கலைகளும் ஒருங்கே இருக்கும் பண்பாட்டுச் சின்னமாக இந்தக் கோவில் கருதப்படுகிறது.
* புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா, மாபெரும் பண்பாட்டு விழாவாக இது நடைபெற்று வருகிறது.
* 1866-ஆம் ஆண்டே நகராட்சியாக ஆன ஊர் இது.
* சென்னைக்கு அடுத்ததாக இரண்டாவது மாநகராட்சியாக 1971-ஆம் ஆண்டு மதுரையைதான் மாநகராட்சி ஆக்கினார் அன்றைய முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள்.
* அண்ணல் காந்தி அவர்கள் தன்னை அரையாடை மனிதராக மாற்றிக்கொண்ட இடமும் இந்த மதுரை தான்.
* ஏன் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய தி.மு.க. இளைஞரணி தொடங்கப்பட்டதும் இந்த மதுரை மண்ணில் இருந்துதான்.
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதனால்தான், பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்ட நகரம் என்று மதுரையை, குறிப்பிட்டேன். இத்தகைய மதுரையை மதுரைக்காரர்கள் மட்டுமல்ல; எல்லோரும் போற்றலாம்; மதுரையைப் போற்றுவோம் என்று கொண்டாடலாம்!
நம்முடைய திராவிட மாடல் அரசில் மதுரை மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர்களை வழங்கியிருக்கிறோம். தங்களின் சிறப்பான செயல்பாடுகளால் இரண்டு பேரும் மதுரைக்கும், நம்முடைய அரசுக்கும் பெருமை சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். 2013-ஆம் ஆண்டு முதல் ‘மா மதுரை போற்றுவோம்’ விழா நடந்துக்கொண்டு இருக்கிறது. சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் அவர்களின் முயற்சியால் இது தொடங்கப்பட்டது.
விழாக்குழு தலைவராக மதுரை தியாகராசர் குழுமத் தலைவர் கருமுத்து தி. கண்ணன் அவர்களையும், விழாக்குழு துணைத் தலைவராக மதுரை அபராஜிதா குழுமத் தலைவர் முனைவர் பரத் கிருஷ்ணன் சங்கர் அவர்களையும் கொண்டு இந்த விழாக்கள் ஆண்டுதோறும் சிறப்பாக நடந்து கொண்டு வந்தது.
* வரலாற்றைப் போற்றுவோம்,
* வைகையைப் போற்றுவோம்,
* மாமதுரையைப் போற்றுவோம் போன்ற தலைப்புககளில் இது நடந்துக்கொண்டு வருகிறது. இந்த விழா நடக்கும் நாட்களில் மதுரை மாநகர் புத்துயிர் பெறுகிறது என்றே சொல்லலாம்.
* வைகை தொடங்கும் இடத்திலிருந்து, அது கடலில் கலக்கும் இடம் வரைக்குமான ஆற்றின் பாதை, அதன் கரைகளில் அமைந்திருக்கும் ஊர்கள் ஆகியவற்றின் மாதிரி, வைகை ஆற்றுக்குள் வடிவமைக்கப்பட்டு இருந்தது. காலந்தோறும் மதுரை நகரம் மாறிய காட்சி ஓவியமாகவும், மாதிரி நகரமாகவும் கண்காட்சியாக தமுக்கம் திடலில் அமைக்கப்பட்டிருக்கும்.
* மதுரை பிரமுகர்களின் படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
* பள்ளி, மாணவ மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.
* கருத்தரங்குகள், கலைநிகழ்ச்சிகள், ஊர்வலம், வாணவேடிக்கை ஆகியவை நடத்தப்படுகிறது.
* இருபுறமும் விளக்குகள் ஏந்தி பொதுமக்கள் நிற்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட ‘இந்திர விழா’ போல இவை நடத்தப்படுவதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதேபோல், இந்த ஆண்டும் மாமதுரை போற்றும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இன்று தொடங்கி 11-ஆம் தேதி வரை இந்த விழாவை ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். மதுரை நகரத்தின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் பெருவிழாவாக இதை நடத்திக்கொண்டு வருகிறீர்கள். இந்த ஆண்டு மதுரை போற்றும் விழாவை ஆர்வத்துடன் முன்னெடுத்துச் செல்லும் இந்திய தொழில் கூட்டமைப்பான C.I.I. அமைப்புடன் இளையோர் அமைப்பான “யங் இந்தியன்ஸ்” அமைப்பை பாராட்டுகிறேன். ஊரைப் போற்றும் இளைஞர்களாக நீங்கள் வளர்வது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஊரைப் பாதுகாக்க வேண்டும். அதன் பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும். அதே நேரத்தில் நவீன வசதிகள் எல்லாவற்றையும் ஏற்படுத்தியும் தர வேண்டும். பழமைக்கு பழமையாக, புதுமைக்கு புதுமையாக இளைஞர்கள் இயங்க வேண்டும். பொழுதுபோக்கு விழாவாக இல்லாமல், பண்பாட்டுத் திருவிழாவாக இதை நீங்கள் நடத்திக்கொண்டு வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
தமிழ் மொழி, தமிழ் இனம் என்ற பெருமையும் பெருமிதமும் உள்ளவர்களாக எதிர்காலத் தலைமுறை வளர வேண்டும்! இது போன்ற விழாக்கள் கூட்டுறவு எண்ணத்தையும், ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்ற உணர்வையும் உருவாக்கும்.
சாதி, மத வேறுபாடுகளுக்கு இடமளிக்காமல், இதுபோன்ற பண்பாட்டு விழாக்களை எல்லோரும் கொண்டாட வேண்டும். மனிதநேயம் போற்றுவோம்! மக்கள் ஒற்றுமை போற்றுவோம்! என்றஅடிப்படையில் இது போன்ற விழாக்கள் மாநிலம் முழுவதும் நடைபெற வேண்டும் என்று கேட்டு விடை பெறுகிறேன்.
நன்றி! வணக்கம்!