தூத்துக்குடி மாநகரில் புது கிராமம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஜான் ரவி (52). தொழிலதிபரான இவர், பாஜகவின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். வழக்கமாக பாஜகவினர் சமூக வலைதளங்களில் அவதூறு, போலியான செய்திகளை பரப்பி வருவது போல், இவரும் செயல்பட்டு வந்துள்ளார். மேலும் பெரியார், திமுக, முதலமைச்சர் உள்ளிட்ட அனைவர் பற்றியும் அவதூறு கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே இவர் தொடர்ந்து திமுக, தமிழ்நாடு அரசு, முதலமைச்சர், அமைச்சர் உதயநிதி, பெரியார் உள்ளிட்டோரை பற்றி அவதூறாகவும், மத கலவரத்தை தூண்டும் விதமாக பதிவு உள்ளிட்டவற்றை குறித்து அவதூறு கருத்து பதிவு செய்து வந்துள்ளார். இந்த சூழலில் இவர் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் மதுரை சைபர் கிரைம் போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து தூத்துக்குடி புது கிராமத்தில் உள்ள இவரது இல்லத்தில் வைத்து நேற்று கைது செய்தனர். இவர் மீது மதம், இனம், ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல் (153A), சமூகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் (504). வதந்தியை பரப்புதல் (505 1b) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் இதே போன்று சமூக வலைதளத்தில் முதல்வர் குறித்து தவறான தகவல் பதிவிட்டதால் குஜராத்திற்கு சென்று இவரை கைது செய்தனர் தமிழக போலீசார் என்பது குறிப்பிடத்தக்கது.