தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாடு பயணம் நாடு முழுவதும் பரவலாகப் பேசப்படுகிறது. இதைத் திசை திருப்பவே வருமானவரி சோதனை என்ற பெயரில் பா.ஜ.க கேவலமான அரசியல் செய்கிறது என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி," கர்நாடக தேர்தலில் பிரதமர் மோடி தெருத் தெருவாகப் பிரச்சாரம் செய்தார். அனுமன் பெயரைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிக்க நாடகம் நடத்தினார். ஆனால் கர்நாடகத் தேர்தல் முடிவு காஷ்மீர் முதல் குமரி வரை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக தேர்தல் முடிவு பா.ஜ.கவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரூ.2000 நோட்டு திரும்பப் பெறுவது கூட கர்நாடக தேர்தல் முடிவின் எதிரொலிதான். 2024ம் நாடாளுமன்றத் தேர்தலின் மேன் ஆப்த மேட்சாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் குறித்தும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. இது நாடுமுழுவதும் பரவலாகப் பேசப்படுகிறது.
இதை திசை திருப்பவே வருமானவரித்துறை என்ற பெயரில் பா.ஜ.க கேவலமான அரசியல் செய்கிறது. இப்படியான சோதனைகளைப் பார்த்து தி.மு.க எந்த காலத்திலும் அச்சப்பட்டது கிடையாது. அமைச்சர் செந்தில் பாலாஜியை முடக்க வேண்டும் என்ற திட்டமிட்டு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.
செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்தப்படும் என்று அண்ணாமலை ஏற்கனவே கூறியிருந்தார். சோதனை நடத்துவது குறித்து காவல்துறைக்குக்கூடச் சொல்லப்படவில்லை. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லாத நேரத்தில் இப்படி நடந்து கொள்வது பா.ஜ.கவின் கேவலமான அரசியலை எடுத்துக் காட்டுகிறது" என தெரிவித்துள்ளார்.