சென்னை உயர் மன்றத்தில் நடைபெறும் வழக்குகள் தொடர்பான விவரங்களை சேகரிக்கும் பணியில் பல்வேறு பத்திரிக்கைகள் மற்றும் மின்னணு ஊடகங்களை சேர்ந்த செய்தியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த செய்தியாளர்கள் உயர் நீதிமன்றத்தில் இருந்து செய்திகளை வழங்கி வரும் நிலையில், அவர்களுக்காக சங்கம் உருவாக்கப்பட்டு உள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற பத்திரிகையாளர்கள் சங்கம் என பெயரிடப்பட்டு, பதிவு செய்யப்பட்ட இந்த சங்கத்தை சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா துவக்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய யர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, ஊடகங்களும் லட்சுமண ரேகையும் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
மேலும் ஜனநாயகத்தில் பத்திரிகைகள் முக்கியமானவை என்றும் அரசியல் சாசனத்தின் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரமே பத்திரிகை சுதந்திரம் என்றும் குறிப்பிட்டார். பத்திரிகைகள் தங்கள் வரம்பை மீறாமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஊடக விசாரணை என்ற பெயரில் ஒருவர் மீது குற்றம் சாட்டி பின் நீதிமன்றத்தில் அவர் விடுதலை செய்யப்படும் போது அந்த நபருக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஈடுகட்ட முடியாது என்றும் பொறுப்பு தலைமை நீதிபதி சுட்டி காட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் மூத்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன் உள்ளிட்ட நீதிபதிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மேலும் சென்னை உயர் நீதிமன்ற பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு தலைவராக சுப்ரமணி,துணை தலைவர்களாக வில்சன், ராம்ஜி, செயலாளராக ரமேஷ்குமார், பொருளாளராக ஆனந்த் ஆகியோர் தேர்வாகினார் என்பது குறிப்பிடத்தக்கது.