செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த பெருமட்டுநல்லூர் பகவதிபுரம், லட்சுமி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(40). இவர் அ.தி.மு.க காட்டாங்கொளத்தூர் ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளராக இருந்தார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளன. செந்தில்குமார் ஏற்கனவே காஞ்சிபுரத்தில் இருந்தபோது கட்டுமான தொழில் செய்து வந்தார்.
அப்போது இவருக்கும் காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து வெளியேறிய செந்தில்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெருமாட்டுநல்லூரில் வீடு கட்டி குடியேறினார். மேலும் அப்பகுதியில் கட்டுமான தொழிலை தொடர்ந்து செய்து வந்தார்.
இந்நிலையில், செந்தில்குமார் கடந்த செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலிஸார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 10 பேர் கொண்ட கும்பலை போலிஸார் வலைவீசி தேடி வந்தனர்.
இதுதொடர்பாக, காஞ்சிபுரத்தை சேர்ந்த நிதி நிறுவன மேலாளர் கமலகண்ணனின் மனைவி விஜயலட்சுமி (35), அதன் உரிமையாளர் ஈரோடு எழிலரசன்(32) உள்பட கூலிப்படையை சேர்ந்த 10 பேரை போலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் கூடுவாஞ்சேரி போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கூலிப்படையினர் வாக்குமூலம் அளித்ததாக போலிஸார் கூறியதாவது, “கொலையான செந்தில்குமார் காஞ்சிபுரத்தில் குடியிருந்தபோது, தனியார் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த விஜயலட்சுமி மூலம் எழிலரசனிடம் ரூ.15 லட்சம் பணத்தை கட்டியுள்ளார். பின்னர், இருவரிடமும் பணத்தை திருப்பி கேட்டு செந்தில்குமார் தொந்தரவு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் பணத்தை திருப்பி கேட்டால் தீர்த்து கட்டி விடுவோம் என்று அவரை மிரட்டி உள்ளனர். இதில் பயந்து போன செந்தில்குமார் காஞ்சிபுரத்தில் வீட்டை காலி செய்து கொண்டு கூடுவாஞ்சேரி அருகே உள்ள பெருமாட்டுநல்லூருக்கு வந்தார். இதனையடுத்து விஜயலட்சுமி, எழிலரசன் ஆகிய இருவரும் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்து வருவதாக சமூக வலைதளங்களில் செந்தில்குமார் பதிவு செய்து வந்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த அவர்கள் செந்தில்குமாரை தீர்த்துக்கட்ட எங்களிடம் சொன்னார்கள். அதனால் செந்தில்குமாரை கண்காணித்து திட்டம் போட்டு வழிமறித்து தீர்த்து கட்டினோம். பின்னர் கொலைக்கு பயன்படுத்திய கத்திகள் மற்றும் ராடுகளை போரூர் ஏரியில் வீசிவிட்டு சென்றுவிட்டோம்” என்று போலிஸில் அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
பின்னர், கைதான பிரவீன், பிரசாந்த், சப்ஜெயில்காந்த், கிரன்லால், ராகுல், சரத்(எ)சன்முகம், விக்கி(எ)விக்னேஷ்வரன், முக்கேஷ், ஆகாஷ் ஆகியோரிடமிருந்து 5 பைக்குகள், 3 கத்திகள், 2 ராடுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலிஸார் 9 பேரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.