திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 'சமூக நல்லிணக்கப் பாதுகாப்பு மாநில உரிமைகள் மீட்பு எழுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதன் விவரம் வருமாறு:-
இது ஆகஸ்ட் மாதம். சுதந்திர மாதம். வேற்றுமைகளை மறந்து இந்தியாவின் மக்களாக நம்மை நாமே உணர்ந்து நமது முன்னோர்கள் போராடியதால் தான் 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது.
அதே மாதிரி வேற்றுமைகளை மறந்து வாழ்ந்து வருவதால் தான் 75 ஆண்டுகள் கடந்தும் சுதந்திர இந்தியா கம்பீரமாக காணப்படுகிறது. ஒற்றுமை - சமத்துவம் - சகோதரத்துவம் - அன்பு - ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல் - கருணை - ஒருவரை ஒருவர் மதித்தல் - அரவணைத்தல் ஆகியவை தான் இந்தியாவின் பண்பாடுகளாகச் சொல்லப்படுகின்றன. இவற்றை நாம் எப்படி கடைப்பிடிக்கிறோம் என்பதை வைத்தே நம்முடைய எதிர்காலம் அமையப் போகிறது.
நான் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறேன். தானாக இது எனக்கு வந்துவிடவில்லை. தோழமைக் கட்சியாகிய உங்களின் பேராதரவுடன் இந்த இடத்தில் உங்களால் நான் அமர வைக்கப்பட்டுள்ளேன்.
பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி வருகிறோம். கல்வி,மருத்துவம், வேளாண்மை,விளையாட்டு, சாலைகள், பாலங்கள், கட்டடங்கள், அணைகள் - ஆகியவை உருவாக்கப்பட்டு வருகின்றன. இவை மட்டுமே வளர்ச்சியா? என்றால் இல்லை! இன்னொரு பக்கமும் வளர வேண்டும் . அதுதான் சமத்துவம் - சகோதரத்துவம் - மானுடப்பற்று -மனிதாபிமானம்- ஏழை எளிய விளிம்பு நிலை மக்களது நலம் - திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் - ஒடுக்கப்பட்டோர் அதில் இருந்து விடுபடுவது -அனைத்துச் சமூகத்தவரும் அர்ச்சகர் ஆவது.
ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல திராவிட மாடல் அரசின் இரண்டு பக்கங்கள் இவை தான். இரண்டில் ஒன்று இருந்து - இன்னொன்று இல்லாவிட்டால் அந்த நாணயம் செல்லாது.
அதைப் போலத் தான் வளர்ச்சித் திட்டம் மட்டும் இருந்து சமூக மேம்பாடு இல்லாமல் போயிவிட்டால் அதனாலும் எந்தப் பயனும் இல்லை. அதனை மனதில் வைத்துத்தான் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம்.
மதவாதத்துக்கு எதிரானது திராவிடம்.
சாதியவாதத்துக்கு எதிரானது திராவிடம்.
சனாதனத்துக்கு எதிரானது திராவிடம்.
வர்ணத்துக்கு எதிரானது திராவிடம்.
ரத்த பேதத்துக்கும், பால் பேதத்துக்கும் எதிரானது திராவிடம்.
எவரையும் உயர்த்தும் தாழ்த்தும் வன்மத்துக்கு எதிரானது திராவிடம்.
யாரையும் பிரித்துப் பார்க்கும் வஞ்சகத்துக்கு எதிரானது திராவிடம்.
எனவே தான் திராவிட மாடல் என்று ஆட்சியின் கொள்கையை வடிவமைத்துள்ளோம்.
இதற்கு ஏன் தமிழ்நாடு மாடல் என்று பெயர் வைக்கவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். தமிழ்நாடு என்றால் அது இடத்தைக் குறிக்கும். ஆனால் திராவிடம் என்று சொன்னால் தான் அது ஒரு கொள்கையை கோட்பாட்டைக் குறிக்கும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.