உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த புபேந்திரா மற்றும் அவரது மகன் அர்ஜூன் ஆகிய இருவரையும் காணவில்லை என புபேந்திராவின் மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது காட்டுப்பகுதியில் இரண்டு சடலங்கள் கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று போர்த்தபோது இறந்து கிடந்தது புபேந்திரா மற்றும் அவரது மகன் அர்ஜூன் என்பது தெரியவந்தது. பின்னர் போலிஸார் அவர்களை யார் கொலை செய்தது என தீவிரமாக விசாரணை செய்ததில் காவலர் ஒருவரே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது.
ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் காவலர் விக்ராந்த். இவரிடம் புரேந்திரா வேறு வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளார். ஆனால் சொன்னபடி வேலை எதுவும் அவர் பெற்றுக் கொடுக்கவில்லை. அதற்காகக் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டும் தரமறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்ராந்த் புபேந்திராவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன்படி புபேந்திரா மற்றும் அவரது மகன் அர்ஜூன் ஆகிய இருவரையும் கடத்திச் சென்று பணத்தைத் திருப்பி கொடுக்கும்படி கேட்டு சித்ரவதை செய்துள்ளார். ஆனால், அவர் பணம் தருவதற்கு முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விக்ராந்த் தனது துப்பாக்கியை எடுத்து தந்தை மற்றும் மகனை சுட்டுக் கொலை செய்துள்ளார்.
பிறகு இருவரது உடலையும் தனது சகோதரர் உதவியுடன் எடுத்துச் சென்று காட்டுப்பகுதியில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் தலைமறைவாக உள்ள விக்ராந்த் மற்றும் அவரது சகோதரரை தேடி வருகின்றனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய 2 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.