தமிழ்நாடு

தண்ணீர் பந்தல் அமைப்பதில் தகராறு : தி.மு.கவை சேர்ந்தவரை வெட்டிக் கொன்ற அ.தி.மு.க பிரமுகர் சரண்!

சென்னை தி.மு.க நிர்வாகி கொலை சம்பவத்தில், அ.தி.மு.க பிரமுகர் மற்றும் அவரது மகன் உட்பட 5 பேர் செங்கல்பட்டு நிதீமன்றத்தில் சரணடைந்தனர்.

தண்ணீர் பந்தல் அமைப்பதில் தகராறு : தி.மு.கவை சேர்ந்தவரை வெட்டிக் கொன்ற அ.தி.மு.க பிரமுகர் சரண்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தண்டையார்பேட்டை அப்பாசாமி தெருவைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன் (59). இவர் சென்னை பாரிமுனை பேருந்து நிலையத்தில் பழக்கடை மற்றும் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

அ.தி.மு.க-வில் பணியாற்றிய இவர், 4 மாதங்களுக்கு முன்பு தி.மு.க.வில் இணைந்தார். இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் பாரிமுனையில் தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கும் ஏற்பாட்டு பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் தண்ணீர் பந்தல் அருகே நின்றிருந்த சவுந்தர்ராஜனை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் அச்சத்தில் சிதறி ஓடினர்.

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சவுந்தரராஜன் பரிதாபமாக இறந்தார்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்த எஸ்பிளனேடு போலிஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் உள்ளிட்ட போலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர், கொலை குற்றவாளிகளை பிடிக்க வழக்குப்பதிவு செய்தனர்.

பூக்கடை போலிஸ் துணை கமிஷனர் மகேஸ்வரன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் மாரியப்பன், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையில் தனிப்படை அமைத்தனர்.

தனிப்படையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அ.தி.மு.க.வில் இருந்தபோது சவுந்தரராஜன் அப்பகுதியில் தண்ணீர் பந்தல் அமைப்பது வழக்கமாக கொண்ட நிலையில், தற்போது தி.மு.க வில் இணைந்ததையடுத்து, அதே பகுதியில் தண்ணீர் பந்தல் அமைப்பது தொடர்பாக அவருக்கும், அ.தி.மு.கவை சேர்ந்த கணேஷ் என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையை இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். சரணடைந்த அ.தி.மு.க பிரமுகர் கணேசன் அவரது மகன் தினேஷ்குமார் மற்றும் இன்பம், கார்த்தி, குமரேசன் ஆகியோர்  செங்கல்பட்டு குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் II ல் சரணடைந்துள்ளனர்.

குற்றவாளிகளை செங்கல்பட்டு மாவட்ட கிளை சிறைச்சாலையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நடுவர் நீதிமன்ற நீதிபதி நவீன் துரைராஜ் உத்தரவிட்டார்.

banner

Related Stories

Related Stories