பெண்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி மலர்ந்துள்ளது. அதன் அடையாளம்தான் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான திட்டங்கள் ஆகும்.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் வழங்கும் திட்டத்தை நேற்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருத்தணியில் தொடங்கி வைத்துள்ளார். இதே போல் மாநிலம் முழுவதும் அமைச்சர் பெருமக்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 463 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 பயனாளிகளுக்கு 2 ஆயிரத்து 750 கோடி ரூபாய் கடனுதவிகள் தரப்பட்டுள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் ஆற்றிய உரை, மகளிர் மாண்பைக் காப்பதில் தி.மு.க. ஆட்சி காட்டும் அக்கறையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
முதல்வராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற அன்றே மகளிருக்கு கட்டண மில்லாத பேருந்து பயணத்துக்கு உத்தர விட்டார். ஐந்து பவுனுக்கு கீழ் அடமானம் வைக்கப்பட்டு வாங்கப்பட்ட கடனை ரத்து செய்தார். மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்கள் ரத்து செய்யப்பட்டது. அந்த வரிசையில் 2 ஆயிரத்து 750 கோடியை கடனாக முதல்வர் வழங்கி உள்ளார். இது லட்சக்கணக்கான பெண் களின் வாழ்க்கையில் நம்பிக்கை அளிப்ப தாக அமைந்துள்ளது. தனது காலில் தானே நிற்கும் சுய பொருளாதாரத் தன்மையை அவர் களுக்கு வழங்கிட இப்பணம் உதவிகரமாக இருக்கும்.
இப்படி பெண்கள் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் தந்தை பெரியார் விரும்பினார். ரத்த பேதம் இல்லை, பால் பேதம் இல்லை என்பதே அவரது அடிப்படைக் கொள்கையாக அமைந் திருந்தது. பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்ற தீர்மானம் 1927 ஆம் ஆண்டு நடந்த சென்னை மாகாண பார்ப்பனரல்லாத இளைஞர் முதலாவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. ‘இந்துக் குடும்பங்களில் உள்ள பெண் குழந்தைகளுக்கும், ஆண் குழந்தைகளைப் போல் சமமான சொத்துரிமை வழங்கப்பட வேண்டும். அதற்கான மசோதா நிறைவேற்றப்பட வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1928 ஆம் ஆண்டு சென்னையில் சீர்திருத்தக்காரர்கள் மாநாடு, தந்தை பெரியார் தலைமையில் நடந்துள்ளது. “குடும்பச் சொத்தில் பெண்க ளுக்கும் ஆண்களைப் போல சம உரிமை அளிக்கப்பட வேண்டும்” என்ற தீர்மானம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் சுயமரியாதை இயக்க இரண்டாவது மாநாடு பெரிய அளவில் நடந்தது. இந்த மாநாட்டில்தான் “பெண்களுக்கு ஆண்களைப் போலவே சமமாக சொத்துரிமையும், வாரிசு பாத்தியதையும் கொடுக்கப்பட வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெண்களும், ஆண்களைப் போலவே அனைத்து வேலைகளிலும் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பள்ளி ஆசிரியர் வேலைகளுக்கு பெரும்பாலும் பெண்களே நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை நிறைவேற்றிக் காட்டும் ஆட்சியாகத்தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்திருந்தது. 7.5.1989 ஆம் நாள் தமிழக சட்டமன்றத்தில் பெண்களுக் கும் சொத்தில் சம பங்கு என்ற சட்டம் நிறைவேற் றப்பட்டது.
1. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம்.
2. பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர்.
3. உள்ளாட்சித் தேர்தலில் பெண்க ளுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு தரப்பட்டது.
4. ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டன.
5. பெண்கள் சொந்தக் காலில் நிற்க வசதியாக மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்தது.
6. ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களுக்கு முதலில் பள்ளிக்கல்வி வரை இலவசக் கல்வியும், அதன் பிறகு கல்லூரி வரை இலவசக் கல்வியும் வழங்கப்பட்டது.
7. ஒன்று முதல் 5 வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களாக மகளிரை நியமித்த அரசு தி.மு.க. அரசு.
8. கிராமப்புற பெண்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை கொடுத்தது கழக அரசு.
9. ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பாடப்புத்தகத் திட்டம்.
10. டாக்டர் முத்துலட்சுமி நினைவு மகப்பேறு உதவித்திட்டம்
11. மூவலூர் இராமாமிர்தம் நினைவு திருமண உதவித்திட்டம்
12. டாக்டர் தருமாம்பாள் விதவை மறுமணத் திட்டம்
13. அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித்திட்டம்
14. ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழைக் கைம்பெண்களின் மகள்களுக்கான திருமண உதவித்திட்டம்
15. பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் தரும் சத்தியவாணி முத்து அம்மையார் திட்டம்
16. காமராசரின் தாயார் சிவகாமி அம்மையார் பெண் குழந்தைகள் திட்டம்
17.பேரறிஞர் அண்ணா அவர்களின் தாயார் பங்காரு அம்மையார் பெயரில் மகளிர் குழுக்கள் திட்டம்
18. எம்.ஜி.ஆரின் தாயார் சத்தியா அம்மையார் குழந்தைகள் காப்பகம் திட்டம்
19. மகளிர் தொழில் முனைவோர் உதவித் திட்டம்
20. தொழில் மனை ஒதுக்கீட்டில் மகளி ருக்கு முன்னுரிமை
21. மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங் களுக்கு மோட்டார் பொருத்திய இலவச வாகனம்
22. மீனவ பெண்கள் மீன் அங்காடி அமைக்க நிதி உதவி
23. மகளிருக்கு சேமிப்புடன் கூடிய சிறு வணிகக் கடனுதவி.
24. திருமணம் ஆகாத 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்காக மாதம் தோறும் உதவித்தொகை
- இத்தகைய சாதனைச் சரித்திரத்தைத் தான் மீண்டும் தொடங்கி இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
மக்கள் சமுதாயத்தில் பாதி பெண். அந்த பெண்ணினம் அடையும் துன்ப துயரங்களைத் துடைக்க அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார் முதல்வர். பெண்களும், பெண் குழந்தைகளும் சில இடங்களில் அனுபவிக்கும் பாலியல் வன்முறைகள் குறித்து முதல்வர் அவர்கள் பேசி வெளியிட்ட காணொலியானது பெண்கள் சமூகத்தால் கண்ணீரோடு வரவேற்கப்பட்டது.
“அறமும் பண்பாடும் அதிகம் பேசும் ஒரு சமூகத்தில் - கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் முன்னேறிய ஒரு நாட்டில் - அறிவியலும், தொழில் நுட்பமும் வளர்ந்த காலக்கட்டத்தில் -இத்தகைய கேவலமான, அருவெறுப்பான செயல் களும் நடக்கத்தான் செய்கிறது என்பது வெட்கித் தலைகுனிய வைக்கிறது. இவற்றைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு குழந்தையும் அனைத்து விதமான சுரண்டல்களில் இருந்தும், வன் முறைகளில் இருந்தும் காக்கப்பட வேண்டும். இது தொடர்பான புகார்களை துணிச்சலாக கொடுக்க வேண்டும். முதல்வராக அல்ல, தந்தையாக நான் உங்களைக் காப்பேன்” என்று முதல்வர் சொல்லி இருந்தார்.
பெண்களை பொருளாதாரத்தில் தன்னிறைவு கொண்டவராகவும் - சமூகத்தில் தன்னம்பிக்கை கொண்டவராகவும் மாற்றும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்!