தமிழ்நாடு

“ஒரு மாத காலம் கஞ்சா வேட்டை” : பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருள் விற்பனையை ஒழிக்க போலிஸ் அதிரடி!

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப் பொருள் விற்பனையை ஒரு மாதத்தில் ஒழிக்க காவல்துறை டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.

“ஒரு மாத காலம் கஞ்சா வேட்டை” : பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருள் விற்பனையை ஒழிக்க போலிஸ் அதிரடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப் பொருள் விற்பனையை ஒரு மாதத்தில் ஒழிக்க அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு, காவல்துறை டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.

தி.மு.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளைத் தடுக்கவும், போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டைத் தடுக்கவும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சிறார் குற்றங்களைத் தடுத்து சமூகத்தைக் காக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப் பொருள் விற்பனையை ஒரு மாதத்தில் ஒழிக்க காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் மற்றும் லாட்டரி விற்பனையை ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க, 6.12.2021 முதல் 6.1.2022 வரை ஒரு மாத காலம் கஞ்சா மற்றும் லாட்டரி வேட்டை நடத்த வேண்டும்.

அதன்படி, கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனை செய்பவர்களை அடையாளம் கண்டு, தொடர்ந்து இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

கஞ்சா மற்றும் குட்கா கடத்தல் - பதுக்கல் - விற்பனை சங்கிலியை உடைக்க மொத்த கொள்முதல், விற்பனை செய்யும் நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கஞ்சா, குட்கா, லாட்டரி பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களை அடையாளம் கண்டு மனநல ஆலோசகர் மூலம் மீட்க வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் குடியிருப்பவர்களை கொண்டு காவல் ஆய்வாளர் வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி ரகசிய தகவல் சேகரித்து விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

ஆந்திர மாநிலத்தில் பயிரிடப்படும் கஞ்சா பயிரை ஒழிக்க ஆந்திர போலிஸாருடன் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதை மாநில போதைத் தடுப்பு பிரிவு முன்னின்று செயல்படுத்த வேண்டும்.

ரயில்வே காவல்துறையினர் ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கஞ்சா, குட்கா, லாட்டரியை கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இந்த ஒரு மாதத்துடன் இந்த நடவடிக்கை நின்று விடாமல் காவல் நிலைய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர்களுக்கு கஞ்சா, குட்கா, லாட்டரி குற்றவாளிகளை கண்காணிக்கும் பொறுப்பு அளித்து தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பணியினை சென்னை காவல் ஆணையர், சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் இயக்குநர் ஆகியோர் தினமும் கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories