தமிழ்நாடு

நடமாடும் கோவில் திருப்பணி இது : பெரியார் - அண்ணாவை நினைவில் ஏந்தி கலைஞர் சொன்னதைச் செய்த முதலமைச்சர்!

'பெரியார் - அண்ணா - கலைஞர்' ஆகியோரை நெஞ்சிலேந்தி அவர்களுக்கான உதவிகளை வழங்கினேன். நடமாடும் கோயில் திருப்பணி தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடமாடும் கோவில் திருப்பணி இது : பெரியார் - அண்ணாவை நினைவில் ஏந்தி கலைஞர் சொன்னதைச் செய்த முதலமைச்சர்!
cm office
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (4.11.2021) செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள், நல வாரிய அட்டைகள், பயிற்சிக்கான ஆணைகள், வங்கிக் கடனுதவிகள் ஆகியவற்றை வழங்கினார்.

இந்நிலையில் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு பின்வருமாறு :- “சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும் சமூகநீதியையும் காப்பதே திராவிட இயக்கத்தின் பணி!

சகோதரி அசுவினி அவர்களுக்கு மறுக்கப்பட்டது உணவு அல்ல; மரியாதை. அதை மீட்டுத்தர ஆட்சிப் பொறுப்பு என்பது பெருவாய்ப்பு.

அதனைத்தான், "நடமாடும் கோயில் திருப்பணியைத்தான் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் செய்கிறது" என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்.

திராவிட இயக்கம் உருவாகி நூறாண்டுகளைக் கடந்திருக்கலாம். ஆனால் காலம் என்ற பெருவெளியில் நூறாண்டு என்பது கைக்குழந்தையே!

ஆயிரமாயிரம் ஆண்டுகள் சமூகத்தில் புரையோடிவிட்ட அழுக்குகளைக் களைந்து, சமூகநீதியை நிலைநாட்டி, மானுட ஒளியைக் காக்க நாம் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் உள்ளது.

பூஞ்சேரி கிராமத்து இருளர் மற்றும் குறவர் இன மக்களுக்குப் பட்டா, சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, வாழிடச் சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, நலவாரிய அடையாளச் சான்றிதழ், பயிற்சி சான்றிதழ், வங்கிக் கடன்கள் ஆகியவற்றை வழங்கினேன்.

இருளர் மற்றும் குறவர் இன வாழ்வில் ஒளியேற்றும் நாள் இது!

இதேபோல் இரண்டுவார காலத்துக்கு தமிழ்நாடு முழுவதும் இம்மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட உத்தரவிட்டுள்ளேன்.

இவற்றையெல்லாம் செய்யும்போது, திராவிட இயக்கம் கடந்து வந்த நெருப்பாறு என் நினைவுகளில் நிழலாடுகிறது!

'பெரியார் - அண்ணா - கலைஞர்' ஆகியோரை நெஞ்சிலேந்தி அவர்களுக்கான உதவிகளை வழங்கினேன். நடமாடும் கோயில் திருப்பணி தொடரும்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories