தமிழ்நாடு

“காக்கை குருவி எங்கள் சாதி என்ற மகாகவி பாரதி இன்றும் தேவைப்படுகிறார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை !

காக்கை குருவி எங்கள் சாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் - என்று சுற்றுச்சூழல் பேசிய பாரதி இன்றும் தேவைப்படுகிறார்!

“காக்கை குருவி எங்கள் சாதி என்ற மகாகவி பாரதி இன்றும் தேவைப்படுகிறார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை, வானவில் பண்பாட்டு மையம் சார்பில் இன்று (12.9.2021) நடைபெற்ற மகாகவி பாரதியார் நினைவுநாள் நூற்றாண்டுத் தொடக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை: “உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.

தமிழகம் தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும் தலைவனை எண்ணித் தவங்கிடக்கையில், இலகு பாரதிப் புலவன் தோன்றினான் - என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதினார். அத்தகைய பெரும்புலவன் பாரதியின் பெருமையைப் போற்றக்கூடிய விழாவாக வானவில் பண்பாட்டு மையத்தின் சார்பில் எழுச்சியோடு, ஏற்றத்தோடு, உணர்ச்சியோடு கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.

உங்கள் அமைப்பின் பெயர் வானவில் பண்பாட்டு மையம் என்பதாகும். வானவில்லின் வண்ணங்கள் ஏழுதான்! ஆனால், மகாகவி பாரதியினுடைய வண்ணங்களும் எண்ணங்களும் ஏழு என்ற எண்ணிக்கைக்குள் அடக்க முடியாதவை! பல ஆயிரம் சிந்தனைகள் கொண்டவர் பாரதி அவர்கள்.

அந்தச் சிந்தனைகள் யாருக்கும் கட்டுப்படாத சிந்தனைகள், சுதந்திர சிந்தனைகள் ஆகும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தாலே அடக்க முடியாத சிந்தனைகள் கொண்டவராகப் பாரதி இருந்ததால்தான் இன்று நாம் அவரைப் போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

“காக்கை குருவி எங்கள் சாதி என்ற மகாகவி பாரதி இன்றும் தேவைப்படுகிறார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை !

குடும்பமாக இருந்தாலும் -

சாதியாக இருந்தாலும்

மதமாக இருந்தாலும் -

அரசாக இருந்தாலும் - எந்த அடக்குமுறையையும் கேள்வி கேட்டவர் பாரதியார் அவர்கள்.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் நாள் கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்து விட்டு முதலமைச்சர் என்ற முறையில் நான் உரையாற்றும் போது, மகாகவி பாரதியார் மறைந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டன, அவர் மறைந்த ஆண்டின் நூற்றாண்டு என்று இந்த ஆண்டைக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன்.

பாரதி மறைந்தாலும் அவரது கவிதை வரிகள் மறையாது. மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும். பாரதியின் அச்சிட்ட புத்தகங்கள் மறைந்தாலும் மக்கள் மனதில் உள்ள பாரதியின் பாடல்களைக் கொண்டு அவற்றை மீண்டும் அச்சிடலாம். அத்தகைய வலிமை பாரதியின் படைப்புகளுக்கு உண்டு.

* அச்சம் தவிர்

* உடலினை உறுதிசெய்

* ஏறுபோல் நட

* கொடுமையை எதிர்த்து நில்

* சூரரைப் போற்று

* சோதிடந்தனை இகழ்

* தெய்வம் நீ என்று உணர்

* பிணத்தினைப் போற்றேல்

* புதியன விரும்பு

* போர்த்தொழில் பழகு - என்ற அவரது புதிய ஆத்திச்சூடி வரிகள் எல்லாம் எத்தனை நூற்றாண்டுகள் கழித்தும் எழுச்சியையும் உணர்ச்சியையும் ஏற்படுத்தக் கூடியவை. அதனால்தான் அவரை மக்கள் கவிஞர்' என்று 1947ஆம் ஆண்டே மகுடம் சூட்டி எழுதினார் பேரறிஞப் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள்.

“காக்கை குருவி எங்கள் சாதி என்ற மகாகவி பாரதி இன்றும் தேவைப்படுகிறார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை !

"பாரதியின் பாதை - புதிய பாதை!

சமதர்மப் புரிக்குப் போவதற்கு அமைத்தப் பாதை!

பரங்கியரை ஓட்டி விடுவது மட்டுமல்ல -

நாட்டுக்கு கேடு தரும் அனைத்தையும் ஓட்டி -

புதிய சமூக அமைப்பாக்கும் பாதைதான் பாரதியினுடைய பாதையாகும்.

அந்தப் புதிய பாதையை நாம் போற்றுவோம்" என்று 1947-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதினார்கள், அதையே வானொலியிலும் பேசினார்கள்.

அதனால்தான் கழக அரசு அமைந்தவுடன், தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சரான போது எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவில்லம் ஆக்கிப் பெருமை சேர்த்தார் தலைவர் கலைஞர் அவர்கள். அன்றைக்கு அமைச்சராக இருந்த மரியாதைக்குரிய சி.பா. ஆதித்தனார் அவர்கள் தலைமையில் 12.5.1973 அன்று நடந்த விழாவில் பாரதியார் இல்லத்தை வரலாற்றுச் சின்னமாக அறிவித்து முதலமைச்சர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

இதன் தொடர்ச்சியாகப் பாரதியார் நினைவைப் போற்றும் வகையில் அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை நேற்றைக்கு முன்தினம் தமிழ்நாடு அரசு சார்பில் நான் அறிவித்திருக்கிறேன்.

“காக்கை குருவி எங்கள் சாதி என்ற மகாகவி பாரதி இன்றும் தேவைப்படுகிறார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை !

* மகாகவி பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் நாளை அரசின் சார்பாக, மகாகவி நாளாக அறிவித்துள்ளோம்.

* பாரதி பெயரால் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி பாரதி இளங்கவிஞர் விருது வழங்க இருக்கிறோம். மாணவர் ஒருவருக்கும் மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட இருக்கிறது. * பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளைத் தொகுத்து 'மனதில் உறுதி வேண்டும்' என்ற புத்தகமாக அரசு வெளியிட இருக்கிறது. 37 லட்சம் பள்ளி மாணவ, மாணவியர்க்கு இந்தப் புத்தகம் வழங்கப்பட இருக்கிறது.

* பாரதி ஆய்வாளர்களான பெ.தூரன், ரா. அ.பத்மநாபன், தொ.மு.சி.ரகுநாதன், இளசை மணியன் ஆகியோர் நினைவாக அவர்களது குடும்பத்தாருக்கு நிதி வழங்கப்பட இருக்கிறது. * பாரதி படைப்புகளை மீட்டெடுத்த பெரியவர் சீனி. விசுவநாதன், பேராசிரியர் ய.மணிகண்டன் ஆகியோருக்கும் நிதி வழங்கப்பட இருக்கிறது. * பாரதியின் உருவச் சிலைகள் பூம்புகார் கலைக்கூடத்தில் தயாரிக்கப்பட இருக்கின்றன.

* 1973ஆம் ஆண்டு பாரதியாரின் இல்லத்தைத் திறந்து வைத்துப் பேசிய முதலமைச்சர் கலைஞர் அவர்கள், பாரதியினுடைய கையெழுத்தை வியந்து பாராட்டி இருக்கிறார். 'அழகாகப் பொடிப்பொடியாக அச்சுக்கோர்த்ததுபோல பாரதியார் அவர்கள் எழுதி இருக்கிறார்கள்' என்று சொன்னார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். அந்தக் கையெழுத்துப் பிரதிகள் மொத்தமாகத் தொகுக்கப்பட்டு அவை அதன் வடிவம் மாறாமல் செம்பதிப்பாக வெளியிடப்படும்.

* புகழ்பெற்ற ஓவியங்களுடன் பாரதியின் கவிதைகள் சித்திரக்கதை நூலாகவும் வெளியிடப்படும். * பாரதி குறித்த முக்கிய ஆய்வு நூல்கள் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிடப்படும். * பாரதியின் நூல்கள் தொகுக்கப்பட்டு எட்டயபுரத்திலும் திருவல்லிக்கேணி இல்லத்திலும் வைக்கப்படும். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும், மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்திலும் பாரதியியல் என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.

* உலகத் தமிழ்ச் சங்கங்களை இணைத்து பாரெங்கும் பாரதி என்ற நிகழ்ச்சி நடத்தப்படும்.

* “திரையில் பாரதி'' என்ற பெயரில், திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதி பாடல்கள் கொண்ட இசை நிகழ்ச்சி விரைவில் நடத்தப்படும்.

* சென்னை, பாரதி நினைவு இல்லத்தில் ஓராண்டுக்கு வாரந்தோறும் நிகழ்ச்சி நடத்தப்படும். * திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதி பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும். * காசியில் பாரதி வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க நிதி உதவி வழங்கப்படும். * பாரதி படைப்புகளைக் குறும்படமாக எடுக்க நிதி உதவி வழங்கப்படும். * பாரதியின் பாடல்கள் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்களில் எழுதியும் வரைந்தும் வைக்கப்படும்.

* மகளிர் சுயஉதவிக்குழுக்களின் வாழ்வாதாரப் பூங்காவுக்குப் பாரதியார் பெயர் சூட்டப்படும். - இப்படி ஏராளமான அறிவிப்புகளைத் தமிழ்நாடு அரசு செய்திருக்கிறது.

“காக்கை குருவி எங்கள் சாதி என்ற மகாகவி பாரதி இன்றும் தேவைப்படுகிறார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை !

'இது எனது அரசல்ல, நமது அரசு ' என்று நான் சொல்லி இருக்கிறேன். இந்த அரசு ஒரு கட்சியின் அரசாக இல்லாமல், ஒரு கொள்கையின் அரசாக, ஓர் இனத்தின் அரசாக இருக்கும் என்றும் சொல்லி இருக்கிறோம். அந்த அடிப்படையில் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் தமிழ்நாட்டுக்காகவும் உணர்ச்சிமிகு கவிதைகளைத் தந்த மகாகவி பாரதியைத் தமிழ்நாடு போற்றுகிறது.

இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தியாகிகளைப் போற்றுவதற்கும் மொழிப்போராட்டத்துக்காகப் பாடுபட்ட தியாகிகளை மதிப்பதற்கும் - எல்லைப் போராட்ட வீரர்களைப் போற்றுவதற்கும் - திராவிட முன்னேற்றக் கழக அரசு எப்போதும் மறந்தது இல்லை. நான் அதை பட்டியலிட ஆரம்பித்தால் அது மிக நீளமாகப் போய்விடும்.

கப்பலோட்டியக் தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் அறிவிப்புகளைக் கடந்த வாரத்தில் நான் செய்தேன். பாரதியின் நண்பர் பரலி சு.நெல்லையப்பருக்கு நிதி உதவி வழங்கி வந்த அரசுதான் திமுக அரசு. அந்த வரிசையில் தான் பாரதி நினைவு நூற்றாண்டு விழாவையும் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து நடத்தி வருகிறது. பாரதியைப் போற்றுவதற்குக் காரணம், அவரது சிந்தனைகள் காலங்களைக் கடந்தும் தேவைப்படுபவை என்பதால்தான்.

* சாதி இரண்டொழிய வேறில்லை என்றே தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தம் என்போம் - என்று இன்றைக்குப் பாரதி அதற்காகத் தேவைப்படுகிறார்!

“காக்கை குருவி எங்கள் சாதி என்ற மகாகவி பாரதி இன்றும் தேவைப்படுகிறார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை !

* சாதி நூறு சொல்லுவாய் போ போ போ - என்று விரட்டிய பாரதி இன்றும் தேவைப்படுகிறார்!

* ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே - என்று கண்டிக்கப் பாரதி இன்றும் தேவைப்படுகிறார் ! * சாதி, மதங்களைப் பாரோம் - என்று கம்பீரமாக அறிவிக்கப் பாரதி இன்றும் தேவைப்படுகிறார்!

* முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடமை - என்று பிரகடனம் செய்வதற்குப் பாரதி இன்றும் தேவைப்படுகிறார்!

* யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் - என்று தமிழ் வெறியோடு பாடக்கூடிய பாரதி இன்றும் தேவைப்படுகிறார்! * இயேசு கிறிஸ்துவைப் புகழ்ந்து எழுதிவிட்டு ஒம் சக்தி என்று முடிக்கும் சகோதரத்துவப் பாரதி இன்றும் தேவைப்படுகிறார்!

* சங்கராபரணம் இராகத்தில் அல்லாவுக்கும் பாட்டு எழுதிய பரந்தமனப்பான்மை பாரதி இன்றும் தேவைப்படுகிறார்!

* காக்கை குருவி எங்கள் சாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் - என்று சுற்றுச்சூழல் பேசிய பாரதி இன்றும் தேவைப்படுகிறார்! - இத்தகைய பாரதிகள் இன்றும் தேவை!

காலத்தின் தேவை!

அன்பு வேண்டும் -

அறிவு வேண்டும் -

கல்வி வேண்டும் -

நீதி வேண்டும் -

இந்த நான்கையும்தான் பாரதி விரும்பினார். அவரது எல்லாப் பாட்டுக்கும் அடிப்படை இதுதான். இந்த நான்கும் கொண்டவர்கள் மேலோர், மற்றவர்கள் கீழோர் என்பது பாரதியின் கருத்து. இத்தகைய மேலோரை உருவாக்க வானவில் பண்பாட்டு மையம் போன்ற அமைப்புகள் இன்னும் சிறப்பான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அந்த முயற்சிக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கக்கூடிய அரசு என்றைக்கும் துணை நிற்கும், துணை நிற்கும் என்ற உறுதியைச் சொல்லி,

வாழ்க பாரதி! பாரதி! என்று கூறி விடைபெறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories