தமிழ்நாடு

ரூ.8 லட்சம் கடனை அடைக்க ரூ.10 லட்சத்தை பறிகொடுத்த சென்னை பெண்; ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வங்கி மேலாளர்!

வீட்டுக் கடன் பெற்றுத் தருவதாக கூறி 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த வங்கி மேலாளர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ.8 லட்சம் கடனை அடைக்க ரூ.10 லட்சத்தை பறிகொடுத்த சென்னை பெண்; ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வங்கி மேலாளர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மாதவரம் மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் பானுரேகா. இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக உள்ள நிலத்தின் மீது தனியார் வங்கியில் எட்டு லட்ச ரூபாய் கடன் பெற்றிருந்தார், எனினும் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாததால் நிலத்தை ஏலம் விடுவதற்கு தனியார் வங்கி ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பானுரேகாவிற்கு சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் வங்கியில் (காஸ்மோஸ் வங்கி) சட்ட ஆலோசகராக கிருஷ்ணபிரியா என்பவர் அறிமுகமாகி கடன் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறியுள்ளார். மேலும் தற்போது உள்ள நிலத்தை தங்களது வங்கியில் 23 லட்ச ரூபாய்க்கு அடமானம் வைத்து பணம் பெற்று தருவதாகவும் உறுதி அளித்துள்ளார். அதன்படி ஏற்கனவே கடன் வாங்கிய வங்கியில் 8 லட்சம் ரூபாய் கடனை அடைத்துள்ளனர்.

இதனால் நம்பிக்கை ஏற்பட்ட பானுரேகா வங்கி மேலாளர் ராஜா ராவ் என்பவரிடம் 6 வெற்று காசோலைகளை உத்தரவாதமாக கொடுத்துள்ளார், அந்த காசோலைகள் மூலம் 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை பானு ரேகாவிற்கு தெரியாமல் வங்கி மேலாளர் ராஜாராவ், வங்கி ஊழியர் யுவராஜ் மற்றும் சட்ட ஆலோசகர் கிருஷ்ணபிரியா ஆகிய மூன்று பேர் சேர்ந்து பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணத்தை பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பானுரேகா கடந்த 2018ம் ஆண்டு வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பானுரேகா தேசிய மனித உரிமை ஆணையத்தில் இது தொடர்பாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் மீது விசாரணை நடைபெற்று தற்போது தேசிய மனித உரிமை ஆணைய உத்தரவின் அடிப்படையில் வேப்பேரி காவல் நிலையத்தில் தனியார் வங்கி மேலாளர் ராஜா ராவ் வங்கி ஊழியர் யுவராஜ் மற்றும் சட்ட ஆலோசகர் கிருஷ்ணபிரியா ஆகிய 3 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

banner

Related Stories

Related Stories