தமிழ்நாடு

மக்களைத் தேடி மருத்துவம்: இப்போ 20 லட்சம் விரைவில் 1 கோடி பேர் பயனடைவர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்குள் தமிழகம் முழுவதும் ஒருகோடி பயனாளிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்களைத் தேடி மருத்துவம்: இப்போ 20 லட்சம் விரைவில் 1 கோடி பேர் பயனடைவர் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பொது சுகாதார நிலையத்தில் இதய அறுவைச் சிகிச்சைக்கான மருத்துவ உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த. வேலு, ஜெ. கருணாநிதி ஆகியோர் பங்கேற்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "68 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த பொது சுகாதார நிலையம், தற்போது 150 படுக்கைகளுடன் அனைத்து வகையான சிகிச்சைகளுக்கான கட்டமைப்புகளுடன் கூடியதாக இயங்குகிறது.

இதன் மூலம் தியாகராய நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட தொகுதி மக்கள் பயனடைகிறார்கள். தற்போது அறுவை சிகிச்சை அரங்கிற்கு தேவையான கருவிகள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையின் வளர்ச்சிக்கு என்னுடைய ஒரு மாத சம்பளத்தை வழங்க உறுதியளித்துள்ளேன். தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும் வழங்கவுள்ளார்.

விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படுவதைப் போல ரயில் நிலையங்களிலும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ள சென்னையின் சில ரயில் நிலையங்களை நேரில் ஆய்வு செய்து விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளோம். குறிப்பாக கேரளாவில் இருந்து அதிகமான பயணிகள் வந்திறங்கும் ரயில் நிலையங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடந்த சில நாட்களாக கொரோனா தாெற்று பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டு வருவதற்கு காரணம் சோதனைகளை அதிகப்படுத்தி இருப்பதால் தான். தடுப்பூசி வரவை பொறுத்து மாவட்டங்களுக்கு முறையாக பிரித்து வழங்குகிறாேம். கோவேக்சின் தடுப்பூசியினை முதல் தவணை செலுத்த வருவோருக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். கோவிசீல்ட் இரண்டு தவணையுமே போடப்படுகிறது.

தனியார் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் நிதி மூலம் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி போட மொத்தம் 28 லட்சம் வரை வாங்கப்பட்டுள்ளது. அவற்றில் 16 லட்சம் டோஸ்கள் வரை பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளன. இரண்டு கோடி பேர் வரை இதுவரை தடுப்பூசி போட்டுக் காெண்டுள்ள நிலையில் அவர்களில் 60 லட்சம் பேர் 2 தவணைகளும் போட்டுக் கொண்டுள்ளனர்' என்ற அமைச்சர், அரசிடம் இதுவரையிலான தடுப்பூசி வரவு, கையிருப்பு உள்ளிட்ட விவரங்களையும் அமைச்சர் விவரித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக ஆட்சி காலத்தில் பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்ட பாலூட்டும் தாய்மார்களுக்கான அறைகள் முறையான வசதிகள் இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. அவற்றை சீரமைப்பது குறித்து அந்த துறை அமைச்சருடன் கலந்துபேசி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் புதிதாக 12 இடங்களில் தாய்ப்பால் வங்கிகள் தொடங்கப்பட உள்ளன. அம்மா உப்பு, அம்மா காய்கறி வண்டிகள் உள்ளிட்ட திட்டங்களைப் போலவே அம்மா க்ளினிக் திட்டமும் எந்தவித அடிப்படை கட்டமைப்பும் இல்லாமல் தொடங்கப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 20 லட்சம் பயனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஒரு கோடி நோயாளிகளை இந்த திட்டத்திற்குள் பயனாளிகளாக கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

banner

Related Stories

Related Stories