தமிழ்நாடு

தற்கால நெருக்கடிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அசாத்திய துணிச்சல், அரசியல் உறுதிப்பாட்டை கொடுத்துள்ளது

தனது ஆளுமையையும் தலைமைத்துவப் பண்பையும் உயர்த்தியுள்ளதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் அடிப்படைக் கூட்டமைப்புகளில் ஒன்றான கூட்டாட்சியைப் பலப்படுத்தி உள்ளார்.

தற்கால நெருக்கடிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அசாத்திய துணிச்சல், அரசியல் உறுதிப்பாட்டை கொடுத்துள்ளது
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவின் கவனத்தை ஈர்க்கும் தமிழ்நாடு முதலமைச்சர் என மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளை பாராட்டியுள்ளார் திருச்சி தூய வளனார் கல்லூரியின் முதல்வரும் முனைவருமான ஆரோக்கியசாமி சேவியர்.

இது தொடர்பான அவரது விரிவான கட்டுரையின் விவரம் பின்வருமாறு:-

“தமிழக முதலமைச்சரின் ஈடுபாட்டை அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் மட்டுமல்ல அனைத்து சமூக ஊடகங்களும் வெகுவாகப் பாராட்டுகின்றன. தேசிய அளவிலான ஊடகங்கங்களையும் அவர் அரசு திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கொரோனா பேரிடர் காலகட்டத்தில் உயிர்க் கொல்லி நோய் ஒழிப்பில் பல மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை பார்வையிட்டது மட்டுமல்லாமல், அனைத்து அரசு எந்திரங்களையும் அவர் முடுக்கி விட்டிருப்பது நோயின் உக்கிரத்தை வேகமாகக் குறைத்தது. மருத்துவமனையில் நோயாளிகளின் சொந்த உடன்பிறப்புகளே நுழையத் தயங்கும் கொரோனா வார்டுக்குள், பாதுகாப்பு உடைகளை அணிந்து சென்று பார்வையிட்டு நோயாளிகளை சந்தித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

முன்களப் பணியாளர்களுக்கு இச்செயல் உற்சாகத்தைத் தந்துள்ளது. இன்றைய தி.மு.க. அரசு இரு பெரும் நெருக்கடிகளில் 40 நாட்களுக்கு முன்பு ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. கொரோனா உயிர்கொல்லி நோயின் இரண்டாம் அலையின் தாக்கம் உச்சம் ஏறிக் கொண்டிருந்த சூழல்! தமிழ்நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்த நிலை! இந்த இரு நெருக்கடிச் சூழல்களில் பதவி ஏற்றார் இன்றைய முதல்வர். ஏற்கெனவே ஆட்சித் துறையில் பல நிலைகளில் பணிபுரிந்த அனுபவம் இருந்தாலும் முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த நெருக்கடியான சூழலில், ஒரு தலைமைத்துவத்தின் ஆளுமை எப்போது மிகச் சிறப்பாக வெளிப்படும் என்றால் அவர் ஒரு பெரிய சிக்கலை எப்படி சிறப்பாகக் கையாள்கிறார் என்பதைப் பொறுத்தே. ஒருவேளை இந்தச் சிக்கல்கள் அவருக்கும் இன்னும் வேகத்தையும், அசாத்திய துணிச்சலையும், அரசியல் உறுதிப்பாட்டையும் (Political Will) கொடுத்திருக்க வேண்டும்.

கொரோனாவை முறியடிக்கும் முயற்சிகள்

முப்பத்தி ஆறாயிரத்தையும் கடந்த தினசரி நோய்ப் பாதிப்பு இரண்டு வாரங்களிலே பாதிக்கும் கீழ் வெகுவாகக் குறைந்துவிட்டது. காரணம் முதல்வரின் ஆளுமை நிறைந்த தலைமைத்துவம்! அவரது அரசின் கூட்டுச்செயல்பாடு. முதல்வராகப் பதவி ஏற்றவுடன் அவர் உளப்பூர்வமாக கூறிய சொற்றொடர்கள் "நான் அனைவருக்குமான முதலமைச்சர்" அனைவரிடமும் மிகச்சிறந்த நல்லெண்ணத்தை ஏற்படுத்தியது. கொரோனாவின் உச்ச கால கட்டத்தில் அவர் எதிர்க்கட்சிகள் ஆலோசனையை அடிக்கடி கேட்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் பிரதிநிதிகளை, முக்கியச் சிறப்பு குழுக்களின் உறுப்பினர்களாக சேர்த்துக்கொண்டது சிறந்த தலைமைத்துவத்தின் உயரிய பணியை வெளிப்படுத்துகிறது. தேவையான அவசர முடிவுகளை தன்னிச்சையாக எடுக்காமல் தொடர்புடைய அனைத்து அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அழைத்தோ, காணொலி மூலமாகவோ தொடர்புகொண்டு கலந்தாலோசித்து நல்ல கருத்துக்களைப் பெற்று சிறப்பாக முடிவெடுத்தது கொரோனாவை முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளை தெளிவாகவும் வலுவாகவும் உணர்த்தியது.

தற்கால நெருக்கடிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அசாத்திய துணிச்சல், அரசியல் உறுதிப்பாட்டை கொடுத்துள்ளது

உடனடி நோய் ஒழிப்பு, நோய்த் தடுப்பு இவற்றில் ஏற்பட்ட சிக்கல்களைக் குறிப்பாக கொரோனா நோயாளிகளின் மருத்துவ செலவை அரசு ஏற்பதாகக் கூறியது. நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனைகளில் தேவைப்பட்ட நோயாளிகளுக்குப் பிராண வாயுத் தேவையை சீரமைத்த விதம். அவசர மருத்துவ உதவி இறந்தோருக்கு தேவைப்படும் அவசர ஊர்தி. மயானத்தில் ஏற்பட்ட சிக்கல்களை எதிர்கொண்ட விதம், பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் எதிர்காலத்திற்கு வைப்பு நிதி, இவை அனைத்தும் தமிழக மக்களின் மேல் உள்ள அக்கறையை எடுத்து இயம்பியது. இரவில் நேரடியாகச் சென்று கண்காணித்ததும் மக்களிடம் அவரின் நன்மதிப்பைக் கூட்டியுள்ளது. தடுப்பூசிகளுக்கான நேரடி கொள்முதல் முயற்சியை வெளிநாடுகளில் எடுத்திருப்பதும், இங்கு பிராணவாயு தயாரிக்கும் நிலையங்களை உடனே மீட்டெடுத்து செயலாற்ற வைக்கும் முயற்சியும், ஒன்றிய அரசிடமிருந்து பெறவேண்டிய அனைத்தையும் பெற்று உரிமையை நிலைநாட்டும் முயற்சியில் இறங்கி இருப்பது மற்றொரு அம்சம். இக்கால கட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் சித்த மருத்துவப் பிரிவை சிறப்பாக செயல்பட வைத்த பெருமையும் அவருக்கு உண்டு.

ஊரடங்கு கால கட்டத்தில் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் வகையில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்களை கணக்கில் எடுத்து அவர்களுக்குத் தேவையான நிதி உதவியையும், நிவாரணப் பொருட்களையும் உடனே வழங்கியது மிகச்சிறப்பு. இக்கொடும் தொற்று நோயைத் துறக்க மிக முக்கிய பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், காவலர்கள் போன்றோரின் நியாயமான தேவைகளை உடனடியாகப் புரிந்து கொண்டு அவர்களின் நலனுக்காக செயல்பட்ட விதம் அந்த முன்களப் பணியாளர்களுக்கு பணிகளில் ஈடுபாட்டை இன்னும் அதிகமாக்கியது. அதன் பின் அவர்களின் பணிகளில் மனிதம் கூடுதலாக வெளிப்படுவதைக் காண முடிகிறது. நெருக்கடியான காலகட்டத்தில் அடித்தள மக்கள் அத்தியாவசிய பொருட்கள் இன்றி உணவு இன்றி வருத்தப்படக்கூடாதே என்று குறிப்பறிந்து உடனடியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் நாலாயிரமும் வீட்டுத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரமும் என்ற தேவையான நிதி உதவியையும் உடனடியாக செயல்படுத்தியது அனைத்து மக்கள் மனதிலும் அரசிற்கு நற்பெயரை ஏற்படுத்தியுள்ளது.

அர்ப்பணிப்பும் அனுபவமும் மிக்க அதிகாரிகள் நியமனம்!

அரசின் அதிகாரமிக்க அனைத்துப் பதவிகளுக்கும் குறிப்பாக முடிவு எடுக்கும் பொறுப்பில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் மிகவும் தகுதியான அதிகாரிகளை நியமித்தது சிறப்பான ஒன்று. திறமை, நேர்மை, அர்ப்பணிப்பு, மதிநுட்பம், ஒருங்கிணைந்த பார்வை, சிக்கல்களை அவர்கள் அணுகும் விதம் போன்ற எண்ணற்ற சிறந்த குணங்களைக் கொண்ட அதிகாரிகளை நியமித்ததால் தமிழக மக்களுக்கு இந்த தி.மு.க. அரசின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

நிதி மேலாண்மை

தொற்று நோய் உச்சக்கட்ட காலகட்டத்தில் நோய் ஒழிப்பு, நோய் தடுப்பு அதற்குத் தேவையான நிதி ஆதாரங்களைத் திரட்டுதல் அதைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துதல் என்ற பல்முனைத் திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்துதல் என்பது அவசர காலகட்டத்தில் அவ்வளவு எளிதான செயல் அல்ல. தொழிலதிபர்களிடமும் தன்னார்வ தொண்டுள்ளங்களிடமும் நிதி உதவிக்கு அழைப்பு விடுத்து, அனைத்து, தரப்பினரிடமும் நிதி உதவி பெறுதலும் அவர்களிடமிருந்து பெறும் நிதியையும், நிதி மேலாண்மையையும் மிக நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுத்தும் முறையும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

தனது அமைச்சரவையில் இருக்கும் நிதி அமைச்சரின் பொருளாதாரத் தெளிவும், அவரின் நிதி மேலாண்மைப் புரிதலும் இவற்றைத் தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றலும் குறிப்பாக ஜி.எஸ்.டி. குழுவில் அவரின் தெளிவான வலுவான உரையும் இந்திய அளவில் அவரையும் தி.மு.க. அரசையும் பாராட்டி, தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. இவை அனைத்தும் திராவிட இயக்க அரசியல் பின்புலத்தில் உருவான சமூக நீதி என்ற கோட்பாட்டில் விளைந்ததே.

கூட்டாட்சியைப் பலப்படுத்தும் முயற்சி

மற்றொரு முக்கிய அம்சம் இந்த அரசு அனைத்துத் துறைகளை ஒருங்கிணைத்துச் செல்வதைப் பார்க்க முடிகிறது. இது நமது வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படையான அம்சமாகும். அனைவரையும் ஒன்றிணைத்து முன்னேற்றப் பாதையில் செல்ல விரும்புகிறார் என்பதை தெளிவாக எடுத்து இயம்புகிறது. 12 பிற மாநில முதல்வர்களுக்கு சிறு குறுதொழில் வளர்ச்சி மையத்திலிருந்து மாநிலங்களுக்கு பெற வேண்டிய நிதி போன்ற அம்சங்களுக்ககாக அவர் கடிதம் எழுதியிருப்பதன் மூலம் முக்கியச் சிக்கல்களுக்கு மாநிலங்கள் கூட்டாக குரல் எழுப்புவதன் அவசியத்தை உணர்த்தியுள்ளார்.

அதன் வாயிலாக அவர் தனது ஆளுமையையும் தலைமைத்துவப் பண்பையும் உயர்த்தியுள்ளதோடு மட்டுமல்லாமல் இந்தியாவின் அடிப்படைக் கூட்டமைப்புகளில் ஒன்றான கூட்டாட்சியைப் பலப்படுத்தி உள்ளார். இன்றைய தி.மு.க. அரசு கல்வியின் தரத்தை மேலும் உயர்த்தவும் சிறப்பான திட்டங்களைத் தீட்டி வருகிறது. மேலும் மருத்துவக் கல்விப் படிப்பில் மாணவர்கள் நுழைந்து நமது கட்டமைப்புகளை அதிகம் பயன்படுத்தி முயற்சி எடுத்துவருவதும். தமிழக மாணாவர்களுக்கு பாதகமாக இருக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை தமிழகத்தில் எதிர்த்து வருவதும், புதிய கல்விக் கொள்கையில் பாதகங்களை உணர்ந்ததால் தொடர்ந்து புறக்கணித்து வருவது சிறந்த கல்வியாளர்களின் மத்தியில் பாராட்டைப் பெற்று வருகிறது. நீடித்த வளர்ச்சிக்கான திட்டம் ஐக்கிய நாடுகள் முன்வைக்கும் நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை தமிழகத்தின் பின்னணியிலும் தேவையிலும் இந்த அரசு தெளிவாக நிர்ணயித்திருப்பது அவற்றை அடைய வேண்டிய காலகட்டத்தை தெளிவாக்கியிருப்பது பாராட்டுதலுக்குரியது.

வளமான தமிழகம், மகசூல் பெருக்கம், குடிமக்களுக்கு குறையாத தண்ணீர், அனைவருக்கும் உயர்தரக் கல்வி, மருத்துவம், எழில்மிகு மாநகரங்கள், உயர்தர ஊரகக்கூட்டமைப்பு என்று தமிழக அரசு நிர்ணயித்துள்ள இலக்குகளும் ஒரு மாநிலம் சிறந்த நிலையை அடையத் தேவையான அடிப்படையான இலக்குகளே. ஏற்கெனவே இந்தியாவில் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழகம் இன்றைய தி.மு.க. அரசின் ஒருங்கிணைந்த முயற்சியால் நிச்சயம் மிக. உயர்ந்த நிலை அடையும். அதற்கு நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோளைப்போல அவற்றை செயல்படுத்த சீரிய திட்டம் தீட்டல், அதற்குத் தேவையான நிதி ஆதாரத்தை ஒதுக்குதல், ஒவ்வொரு நிலையிலும் சம்மந்தப்பட்ட துறைகள் இணைந்து அவற்றை நுட்பமாக செயல்படுத்துதல், நிர்ணயிக்கப்பட்ட இலக்கு குறிப்பிட்டுள்ள காலகட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதா என கண்காணித்தல், கண்காணிக்கும் குழுக்களுக்கு போதிய அதிகாரமளித்தல் என்பதையும் செயல்படுத்தினால் இந்த அரசு நிர்ணயித்த இலக்கை நோக்கி விரைவில் நகரும் என்பதில் சந்தேகமில்லை.

அரசின் முன் உள்ள மிகப்பெரிய சவால் நிதி நெருக்கடியை சரி செய்து. வருவாயைப் பெருக்கி தமிழகத்தில் நீடித்த நிலைத்த வளர்ந்த மாநிலமாக்குவதே. சமூக நீதியை நிலைநிறுத்துவதே. அதில் தான் இப்போது தொடங்கிய நல்ல ஆட்சி முழுமை அடையும். தமிழகமும் மென்மேலும் சிறப்படையும்.”

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories