தமிழ்நாடு

"+2 தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது ஏன்?” - தங்கம் தென்னரசு கேள்வி!

"கடந்த மூன்று ஆண்டுகளில் +2 தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது ஏன்?” என தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., கேள்வி எழுப்பியுள்ளார்.

"+2 தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது ஏன்?” - தங்கம் தென்னரசு கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

"கடந்த மூன்று ஆண்டுகளில் பள்ளி இறுதித் தேர்வை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது ஏன்?; இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன?" என விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவந்து இருக்கின்றன.வெற்றி பெற்றுள்ள மாணவ, மாணவியருக்கு வாழ்த்துகள்! இந்த முறை வாய்ப்பினைப் பெற இயலாவிடினும், வருங்காலத்தில் அந்த மாணவச் செல்வங்களும் பெறவிருக்கும் வெற்றிகளுக்கான என் வாழ்த்துகள்!

அரசு தேர்வுகள் இயக்ககம் இன்று பொதுத்தேர்வு குறித்து பல்வேறு விவரங்களை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, பள்ளிகளில் சேர்ந்து அவற்றின் வாயிலாக இறுதிப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கின்றது. கீழே உள்ள தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையை மட்டும் பார்த்தால் எளிதாகப் புரிந்து கொள்ள இயலும்.

2017- 8,93,262

2018- 8,60,434

2019- 8,42,512

2020- 7,79,931

சுருக்கமாக 2017ல் 8.93 லட்சமாக இருந்த தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை, 2020ல் 7.79 இலட்சமாகக் குறைந்திருக்கின்றது. அதாவது, ஏறத்தாழ 1.14 இலட்சம் மாணவர்கள் கடந்த மூன்று தேர்வுகளில் ஒவ்வோர் ஆண்டும் படிப்படியாகக் குறைந்து வந்திருக்கின்றார்கள். இவ்வளவு பெரிய சரிவு தொடர்ச்சியாக ஏற்பட என்ன காரணம்?

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று வரும் மாணவர்கள் மேல்நிலைக் கல்விக்குச் செல்லும் முன்னர் இடை நிற்றல் (Drop out) அதிகரித்து விட்டதா?

அல்லது பதினொன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் அனைவருமே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதாமல், பலர் பாதியில் படிப்பைத் தொடராமலோ அல்லது தேர்வு எழுதாமலோ நின்று விடுகின்றார்களா?

"+2 தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது ஏன்?” - தங்கம் தென்னரசு கேள்வி!

கடந்த மூன்றாண்டுகளில், ஒவ்வோர் ஆண்டும் பத்தாம் வகுப்புத் தேர்ச்சிக்குப்பின் பதினோராம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை என்ன?

அதில் எத்தனை மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதினார்கள்?

பதினோராம் வகுப்புப் பொதுத்தேர்வும், மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட பாடச்சுமையும் இந்த எண்ணிக்கை வீழ்ச்சிக்கு எந்த வகையில் காரணிகளாக அமைந்திருக்கின்றன?

பாடச்சுமை காரணமாகப் பல மாணவர்கள் கணிதம், உயிரியல், இயற்பியல் போன்ற முக்கிய பாடங்கள் அடங்கிய முதல் பாடப்பிரிவுகளில் சேராமல் தவிர்ப்பதாகச் சொல்லப்படுகின்றதே. அந்தப் பாடப்பிரிவுகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தால் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கைக் குறையாதா?

இவர்களில் மிகப்பலர் அரசுப்பள்ளிகளில் படித்தவர்களாகத்தான் இருந்திருக்க முடியும் என்பதால் பள்ளிக்கல்வித்துறை இதுகுறித்து என்ன நடவடிக்கை இதுவரை எடுத்திருக்கின்றது?

இச்சூழல் நீடித்தால் உயர்கல்விக்குச் செல்லும் நமது மாணவர்களின் எண்ணிக்கைக் கணிசமாகக் குறையும் சூழல் உருவாகி அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடாதா?

இவற்றை விளக்க வேண்டியது அரசின் கடமை அல்லவா?!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories