தமிழ்நாடு

"பொய்யை திரும்பத் திரும்பச் சொல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அல்ல, நியாயத்தை நிலைநிறுத்தவே நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"பொய்யை திரும்பத் திரும்பச் சொல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ-வும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின், பல்வேறு திட்டப் பணிகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது :

“உள்ளாட்சி தேர்தலை நிறுத்த தி.மு.க. முயற்சி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார். உண்மையைத் திரும்பத் திரும்பச் சொன்னால் அதை உண்மை என்று ஒப்புக்கொள்ளலாம். ஆனால், பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி.

உள்ளாட்சி தேர்தலை எப்படியாவது தடுத்து நிறுத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு பல்வேறு திட்டங்களை போடுகிறது. அதற்காக பல பேரை நீதிமன்றத்தில் வழக்கு போட அ.தி.மு.க மறைமுகமாக அனுப்பி வருகிறது. 3 வருடங்களாக இந்த பிரச்னை நடந்து கொண்டிருக்கிறது.

"பொய்யை திரும்பத் திரும்பச் சொல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

எங்கள் கட்சி சார்பில் ஆர்.எஸ்.பாரதி, நீதிமன்றத்துக்குச் சென்று தேர்தலை எந்தக் காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது; தேர்தலை நடத்தியே தீர வேண்டும் என்று கூறி உள்ளார். ஆனால் தேர்தல் நடத்துவதற்கு முன்பு பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள ‌ஷரத்துகள், எஸ்.சி., எஸ்.டி. இட ஒதுக்கீடு ஆகியவற்றை எல்லாம் முறைப்படுத்திவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

அந்த அடிப்படையில்தான் சென்னை உயர்நீதிமன்றம் இதையெல்லாம் முறைப்படுத்தி தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளதே தவிர, தி.மு.க. தேர்தலை நிறுத்திவிட்டது என்று எங்கும் சொல்லவில்லை.

மக்கள் மன்றத்தில் மட்டுமல்ல, சட்டமன்றத்திலும் இதை நான் பதிவு செய்துள்ளேன். வார்டு வரையறையை முறைப்படுத்த வேண்டும். உருவாக்கப்பட்டுள்ள புதிய மாவட்டங்களுக்கு வார்டு வரையறையை வெளியிடவில்லை. மேலும் பேரூர், நகராட்சி, மாநகராட்சி, இதனுடைய பட்டியலில் பழங்குடியின பெயர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

இந்த வி‌ஷயத்தில் உச்சநீதிமன்றமே தெளிவாகச் சொல்லி உள்ளது. வார்டை முறைப்படுத்தி தேர்தலை நடத்த அரசு உறுதி சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளது. இதையெல்லாம் நிறைவேற்றி இருக்கிறார்களா என்பதுதான் எனது கேள்வி இதற்கான பதிலை எடப்பாடி பழனிசாமி சொல்லவேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையாக இல்லை. அதனால்தான் நீதிமன்றத்தை அணுகி உள்ளோம். தேர்தலை நிறுத்த நாங்கள் சொல்லவில்லை. இந்த அரசு சட்டத்தை மீறி விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு தேர்தல் நடத்தும் சூழ்நிலை வந்தாலும் கூட அதைச் சந்திக்க தி.மு.க எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறது.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories