தமிழ்நாடு

8 முறை திறப்பு விழா ரத்து - அமைச்சர் வருகைக்காக ஒன்றரை ஆண்டுகளாக பூட்டியிருக்கும் அரசு மருத்துவமனை !

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டிக்கு மேலாகியும் அமைச்சர் விஜயபாஸ்கரின் வருகைக்காக, அரசு மருத்துவமனை திறக்கப்படாமல் இருக்கிறது.

8 முறை திறப்பு விழா ரத்து - அமைச்சர் வருகைக்காக ஒன்றரை ஆண்டுகளாக பூட்டியிருக்கும்  அரசு மருத்துவமனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில், மோசமான நிலையில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையைம் மக்களின் மருத்துவத் தேவையை கருத்தில் கொண்டு, மருத்துவமனையாக விரிவுபடுத்திக் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய அரசு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகின்றன.

ஆனால், இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு மருத்துவமனை திறக்கப்படவில்லை. இதற்குக் காரணம் புதுக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏவும், சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர். இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர், கறம்பக்குடி புதிய அரசு மருத்துவமனையை திறந்து வைக்க வேண்டும் என்ற காரணத்தால்தான், இதுவரையில் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது அந்த மருத்துவமனை.

சரி, திறப்பு விழாவுக்கு அமைச்சர் தேதி தர மறுக்கிறாரா? என்று கேட்டால், “தேதி எல்லாம் கொடுக்குறாரு, ஆனா அந்த தேதியில வர தான் மாட்டேங்குறாரு” என்கின்றனர் கறம்பக்குடி ஊர் மக்கள்.

திறப்புவிழா தேதி முடிவு செய்யப்பட்டு, பேனர்கள் கட்டப்பட்டு, எம்.ஜி.ஆர் பாடல்கள் ஒலிக்க கறம்பக்குடியே களைகட்டும் அளவுக்கு அமைச்சருக்கு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்படும். பக்கத்து கிராம மக்கள் தங்கள் மருத்துவமனைக்காக ஆவலுடன் காத்திருப்பர்கள். கடைசியில் ”அமைச்சர் இன்னைக்கு வரலையாம், அவர் வந்தாதான் ஆஸ்பத்திரிய திறப்பாங்களாம்” என்று மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதே மிச்சம்.

8 முறை திறப்பு விழா ரத்து - அமைச்சர் வருகைக்காக ஒன்றரை ஆண்டுகளாக பூட்டியிருக்கும்  அரசு மருத்துவமனை !

இதுவரை ஒரு முறை, இரு முறையல்ல, இப்படி 7 முறை திறப்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அமைச்சர் வராததால் மருத்துவமனை திறக்கப்படாமலேயே இருந்திருக்கிறது.

இன்று 8-வது முறையாக திறப்பு விழா முடிவு செய்யப்பட்டது. கடந்த வாரம் வருவார் என தேதி குறிப்பிட்டு போடப்பட்ட பேனரில், இன்றைய தேதி மட்டும் மாற்றப்பட்டது. அதே போல, காலை முதலே எம்.ஜி.ஆர் பாடல்களும் ஒலிக்கத் தொடங்கின. வருவார் வருவார் என்ற எதிர்பார்ப்பு இம்முறையையும் ஏமாற்றத்திலேயே முடிந்தது. 8-வது முறையாக திறப்பு விழா நடைபெறாமலேயே முடிந்திருக்கிறது.

தேதி மாற்றப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்
தேதி மாற்றப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்

கறம்பக்குடியைச் சுற்றியுள்ள, சுமார் 30 கிராம மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யக் கட்டியது இந்த அரசு மருத்துவமனை. இது இல்லை என்றால் பல கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து புதுக்கோட்டைக்கோ அல்லது வேறொரு டவுனுக்கோ தான் இம்மக்கள் செல்ல வேண்டும். அதைப் பற்றியெல்லாம் அமைச்சர் விஜயபாஸ்கருக்கோ, அ.தி.மு.க அரசுக்கோ எந்த கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை.

அ.தி.மு.கவினருக்கு இது ஒன்றும் புதிதல்ல. 2014-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். அப்போது பாலங்கள், அரசு திட்டங்கள் பல மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா சிறையில் இருந்து வெளியான பிறகு, அவரே வந்து திறந்து வைக்கும் வரை, திட்டங்கள் பயன்பாட்டுக்கு வராது என எந்தவித பொறுப்புணர்வும் இல்லாமல் பதிலளித்தனர்.

அப்படிப்பட்ட ஒரு கட்சியின் கையில் தமிழக அரசும், தனது சொந்த தொகுதி மக்கள் மீது கூட அக்கறை இல்லாதவர் சுகாதாரத்துறை அமைச்சராகவும் வாய்த்திருப்பதும், தமிழக மக்களின் சாபக் கேடு !

banner

Related Stories

Related Stories