புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவை மத்திய அரசு நியமித்திருந்தது. அந்தக் குழு சமர்ப்பித்த வரைவு திட்டத்தில், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தப் பரிந்துரைத்தது.
இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து மும்மொழிக் கொள்கைக்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலத்தோரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மும்மொழிக் கொள்கையை மறைமுகமாக ஆதரிக்கும் வகையில் ட்வீட் ஒன்றை பதிவிட்டு நீக்கியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அவர் பதிவிட்ட ட்வீட்டில், “மதிப்பிற்குரிய பிரதமர் மோடிஜி அவர்களுக்கு ஒரு கோரிக்கை. தமிழ்நாடு அல்லாத மற்ற மாநிலங்களில் தமிழை தேர்ந்தெடுத்துப் படிக்கும் வகையில் விருப்பப்பாடமாக வைக்கவேண்டும்.” எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இது மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கருத்து எனப் பலரும் கடுமையாக விமர்சித்தனர். தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்தி இந்தியை நுழைப்பதற்கான மறைமுக முயற்சி இது எனக் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.