தமிழ்நாடு

கிராமங்களுக்கு எப்போதும் ஓட்டை, உடைசல் பேருந்துகள்தானா? - டவுன் பஸ் அவலங்கள்!

ஓட்டை, உடைசல் பேருந்துகளை இயக்கி உடல்நலத்தைக் கெடுக்காமல், சரிவரப் பராமரிக்கப்பட்ட பேருந்துகளையோ, புதிய பேருந்துகளையோ இயக்கவேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கையும்.

கிராமங்களுக்கு எப்போதும் ஓட்டை, உடைசல் பேருந்துகள்தானா? - டவுன் பஸ் அவலங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் கட்டணத்திற்கேற்ப பல்வேறு வசதிகளுடன் இயக்கப்பட்டாலும் இன்றளவும் வசூலிலும் பராமரிப்பிலும் தனியார் பேருந்துகளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகள் இதனாலேயே கட்டணம் அதிகமாக இருந்தாலும் பெரும்பாலும் தனியார் பேருந்துகளை நாடுகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட புதிய புறநகர் பேருந்துகள் தமிழக அரசால் இயக்கப்பட்டன. இந்தப் பேருந்துகளும் கூட சில ஆண்டுகளில் பழைய நிலையை அடையும். காரணம், அரசு பேருந்துகளைப் பராமரிக்கும் முறை அப்படி.

பேருந்துகள் பழுது ஏற்பட்டாலொழிய மாதாந்திர, வருடாந்திர பராமரிப்புப் பணிகளைச் செய்வதே இல்லை. 2 வருடங்களுக்கு ஒருமுறை FC எனும் பெயரில் இலகுவான வேலைகளைச் செய்து பூசி மொழுகுவதோடு பராமரிப்புப் பணி நிறைவடைந்து விடுகிறது. இதனால், அதிகமாக ஓடிய பேருந்துகள் நடுவழியில் நின்று பயணிகளை சோதனைக்குள்ளாக்குகின்றன.

புதுக்கோட்டை மாவட்ட கிராமப் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த டவுன் பஸ்கள் படு மோசமாக இருப்பதால் ஏற்கனவே புறநகரில் இயங்கிய பேருந்துகள் தற்போது டவுன் பஸ்களாக உருமாறி வலம் வருகின்றன.

File Image
File Image

அரிமளம், திருமயம் உள்ளிட்ட பகுதி கிராம மக்கள், “நாங்களும் பணம் கொடுத்துத்தான் அரசு பேருந்துகளில் செல்கிறோம். எப்போதும் எங்களுக்கு ஓட்டை உடைசல் பேருந்துதானா” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பழைய புறநகர் பேருந்துகளுக்கு வர்ணம் பூசி கிராமப் பகுதிகளில் டவுன் பஸ்களாக இயக்கும் திட்டத்தை அதிகாரிகள் கைவிட்டு புதிய பேருந்துகளை இயக்கவேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நகரங்களைப் போலல்லாது கிராமப்பகுதிகளில் பெண்கள் அதிகளவில் அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். ஓட்டை, உடைசல் பேருந்துகளை இயக்கி உடல்நலத்தைக் கெடுக்காமல், சரிவரப் பராமரிக்கப்பட்ட பேருந்துகளையோ, புதிய பேருந்துகளையோ இயக்கவேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கையும்.

banner

Related Stories

Related Stories