விளையாட்டு

சர்வதேச டி20 போட்டி : ஆஸி. வென்று இந்தியா அபார வெற்றி - அதிக ஆட்ட நாயகன் விருதுகள் வென்றவர்கள் பட்டியல்!

சர்வதேச டி20 போட்டி : ஆஸி. வென்று இந்தியா அபார வெற்றி -  அதிக ஆட்ட நாயகன் விருதுகள் வென்றவர்கள் பட்டியல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாக்பூரில் வெள்ளிக்கிழமை அன்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய இந்திய கேப்டன் ரொஹித் ஷர்மா 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். மழை காரணமாக 9 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில் 91 ரன்களை சேஸ் செய்தது இந்திய அணி.

ரோஹித்தின் அதிரடியால் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்தியா வெற்றி பெற்றது. ஜாம்பாவின் சிறப்பான சுழற்பந்துவீச்சால் ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. கே.எல்.ராகுல் (10 ரன்கள்), விராட் கோலி (11 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (டக் அவுட்) ஆகியோரை வெளியேற்றினார் ஜாம்பா. இருந்தாலும் நான்கு ஃபோர்கள், நான்கு சிக்ஸர்கள் விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்தார் ஹிட்மேன். இதன் மூலம் இந்தத் தொடர் 1-1 என சமநிலையை அடைந்திருக்கிறது.

ஆரம்பத்தில் இருந்தே அதிரடி காட்டிய ரோஹித் ஷர்மா, ஜோஷ் ஹெசில்வுட் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே மூன்று மிகப்பெரிய ஷாட்கள் அடித்தார். அடுத்து பேட் கம்மின்ஸ் வீசிய ஸ்லோ பாலை சிக்ஸருக்குப் பறக்க விட்ட அவர், ஆடம் ஜாம்பாவின் பந்தை லாங் ஆஃப் திசையில் சிக்ஸராக்கினார்.

ராகுல், கோலி, சூர்யா என அடுத்தடுத்து இந்திய அணி பேட்ஸ்மேன்களை இழந்திருந்தாலும், ரோஹித் ஷர்மா மற்றொரு முனையில் தனி ஆளாக நின்று ஆட்டத்தை மாற்றினார். கடைசி கட்டத்தில் இந்திய அணியின் ஃபினிஷர் தினேஷ் கார்த்திக் இரண்டே பந்துகளில் 10 ரன்கள் விளாசி ஆட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த ஆட்டத்தின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து வீரர் மார்டின் குப்திலை பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு முன்னேறினார் ரோஹித் ஷர்மா. இந்தப் போட்டிக்கு முன்பு வரை சர்வதேச டி20 போட்டிகளில் இதுவரை 172 சிக்ஸர்கள் அடித்திருந்தார் ரோஹித். குப்திலும் 172 சிக்ஸர்களே அடித்திருக்கிறார். கிறிஸ் கெய்ல் 124 சிக்ஸர்களும், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் 120 சிக்ஸர்களும், ஆரோன் ஃபின்ச் 119 சிக்ஸர்களும் அடித்திருக்கின்றனர்.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் :-

ரோஹித் ஷர்மா - 176

மார்டின் குப்தில் - 172

கிறிஸ் கெய்ல் - 124

இயான் மோர்கன் - 120

ஆரோன் ஃபின்ச் - 119

அதுமட்டுமல்லாமல், சர்வதேச அரங்கில் அதிக ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் கங்குலியை சமன் செய்தார் ரோஹித் ஷர்மா. சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி ஆகியோர் முதலிரு இடங்களில் இருக்கின்றனர்.

இந்தியாவுக்கு அதிக ஆட்ட நாயகன் விருதுகள் வென்றவர்கள் :-

சச்சின் டெண்டுல்கர் - 76

விராட் கோலி - 58

ரோஹித் ஷர்மா - 37

சௌரவ் கங்குலி - 37

இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. மைதானத்தில் தண்ணீர் அதிகம் தேங்கியிருந்ததால், ஆட்டம் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக தாமதமானது. டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு இந்திய அணி, 3.1 ஓவர்களில் ஆஸ்திரேலியாவை 31-3 என்ற நிலைக்குத் தள்ளியது. கேமரூன் கிரீன் ரன் அவுட் ஆக, கிளென் மேக்ஸ்வெல் வந்த வேகத்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். டிம் டேவிட்டை வீழ்த்திய அக்‌ஷர் படேல் தன் இரண்டு ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். காயத்தில் இருந்து மீண்டு மீண்டும் அணிக்குத் திரும்பித ஜஸ்ப்ரித் பும்ரா அசத்தல் யார்க்கர் மூலம் ஆரோன் ஃபின்ச்சை வெளியேற்றினார்.

    banner

    Related Stories

    Related Stories