விளையாட்டு

“4வது டெஸ்டிலும் அஷ்வின் இல்லை... கோலிக்கு என்னதான் பிரச்சனை?” - கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்!

அஷ்வினை நான்காவது டெஸ்ட்டிலும் சேர்க்காததால் கோலி மற்றும் ரவி சாஸ்திரி மீது தொடர்ச்சியாக ரசிகர்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

“4வது டெஸ்டிலும் அஷ்வின் இல்லை... கோலிக்கு என்னதான் பிரச்சனை?” - கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் செஷன் முடிந்திருக்கிறது. பேட்டிங் செய்து கொண்டிருக்கும் இந்தியா 54-3 என்ற நிலையில் இருக்கிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் அஷ்வின் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஷ்வின் இந்தப் போட்டியிலும் தேர்வு செய்யப்படாமல் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் அஷ்வின் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டிருப்பதால் கோலி மற்றும் ரவிசாஸ்திரி மீது ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ரசிகர்களின் கோபத்திலும் நியாயமில்லாமல் இல்லை.

அஷ்வின் தனது கரியரின் உச்சபட்ச ஃபார்மில் இருக்கிறார். பௌலிங்கில் மட்டுமில்லை. பேட்டிங்கிலும் அசத்தி வருகிறார். லாக்டவுனுக்கு பிறகு தொடங்கிய ஆஸ்திரேலிய சீரிஸிலிருந்தே அஷ்வின் மிகச்சிறப்பான பெர்ஃபார்மென்ஸை அளித்து வருகிறார். சிட்னியில் ஹனுமா விஹாரியுடன் கூட்டணி போட்டு இந்திய அணியை தோல்வியிலிருந்து மீட்டதை காலத்துக்கும் யாராலும் மறக்க முடியாது. அடுத்து நடைபெற்ற இங்கிலாந்து சீரிஸில் விக்கெட்டுகளையும் குவித்திருந்தார். சதமும் அடித்திருந்தார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களே தடுமாறியபோது அஷ்வின் மட்டும் நியுசிலாந்துக்கு பயத்தை காண்பித்திருந்தார். அதன்பிறகு, ஒட்டுமொத்த வீரர்களும் விடுமுறையில் இருந்தபோது இந்த இங்கிலாந்து தொடருக்காக கவுண்டி போட்டிக்கெல்லாம் சென்று ஆடினார். அங்கேயும் ஒரு இன்னிங்ஸில் 6 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

இப்படி கடந்த சில மாதங்களாக அட்டகாசமாக பெர்ஃபார்ம் செய்து இந்த இங்கிலாந்து தொடருக்காக பிரத்யேகமாக தயாராகி வந்த அஷ்வினைத்தான் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் பென்ச்சில் அமர வைத்திருக்கிறார் கோலி.

“4வது டெஸ்டிலும் அஷ்வின் இல்லை... கோலிக்கு என்னதான் பிரச்சனை?” - கடுமையாக விமர்சிக்கும் ரசிகர்கள்!

இங்கிலாந்து பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு மட்டுமே ஒத்துழைக்கும், மழை பெய்வது ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்காது என பல விஷயங்களையும் அஷ்வினின் தேர்வுக்கு எதிராக கோலியும் ரவி சாஸ்திரியும் முன்வைக்கலாம். ஆனால், இதே இருவர்தான் இரண்டு மாதங்களுக்கு முன்பு வேறு மாதிரியாக பேசியிருந்தனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பான ஒரு பேட்டியில் ரவிசாஸ்திரி 'அஷ்வின் ஒரு உயர்தர வீரர். பிட்ச், வானிலையெல்லாம் அவரின் தேர்வுக்கு ஒரு காரணமாகவே இருக்க முடியாது. உலகின் எந்த மைதானத்திலும் நாங்கள் அஷ்வினுடன் களமிறங்குவோம்' என பெருமிதமாக பேசியிருந்தார்.

இந்த 2 மாதங்களில் அப்படி என்ன மாறிவிட்டது என புரியவில்லை. சொல்லப்போனால், ரவி சாஸ்திரியின் அந்தப் பேட்டிக்கு பிறகு அஷ்வின் கவுண்டி போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஷ்வின் மீதான கோலி, ரவி சாஸ்திரியின் நம்பிக்கை ஒரு படி அதிகம்தான் ஆகியிருக்க வேண்டும். ஆனால், இங்கே தலைகீழாகியிருக்கிறது.

ஏற்கனவே லார்ட்ஸ் வெற்றியை தவிர்த்து இந்த சீரிஸில் இந்தியா தடுமாறியே வருகிறது. இப்படியான நேரத்தில் அஷ்வின் மாதிரியான சீனியர் வீரரையும் தொடர்ந்து 4 போட்டிகளில் பென்ச்சில் உட்கார வைப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. இதனால்தான் ரசிகர்கள் தங்களின் அதிருப்தியை கோலி மற்றும் ரவி சாஸ்திரி மீது தொடர்ச்சியாக இணையத்தில் வெளிப்படுத்தி கொண்டிருக்கின்றனர்.

-உ.ஸ்ரீ

banner

Related Stories

Related Stories