விளையாட்டு

பயம் காட்டிய இங்கிலாந்து.. பந்துவீச்சில் மிரட்டி த்ரில் வெற்றி பெற்ற இந்தியா !

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பயம் காட்டிய இங்கிலாந்து.. பந்துவீச்சில் மிரட்டி த்ரில் வெற்றி பெற்ற இந்தியா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Gully Sports
Updated on

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ப்ரஷித் கிருஷ்ணாவும் ஆல்ரவுண்டரான க்ரூணால் பாண்ட்யாவும் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்திய அணியின் சார்பாக, ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். மார்க்வுட் மற்றும் சாம் கர்ரன் இருவரும் முதல் 10 ஓவர்களை மாறி மாறி வீச, இந்திய பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் நிதானமாகவே இந்த ஓவர்களை எதிர்கொண்டனர். ரோஹித் தவான் இருவரும் கொஞ்சம் பேட்டை வீசி பவுண்டரிக்களை அடிக்க தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஸ்டோக்ஸின் ஓவரில் ரோஹித் சர்மா 28 ரன்களில் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறிவிட்டார்.

பயம் காட்டிய இங்கிலாந்து.. பந்துவீச்சில் மிரட்டி த்ரில் வெற்றி பெற்ற இந்தியா !

ரோஹித் சர்மா ஆட்டமிழந்த பிறகு, கேப்டன் கோலி களத்திற்குள் வந்தார். தவான்-கோலி இந்த கூட்டணிதான் இந்திய அணியின் ரன் விகிதத்தை அதிகப்படுத்தியது. ஸ்டோக்ஸ், அடில் ரஷீத் ஆகியோரின் ஓவர்களில் தனது ஆஸ்தான கவர் ட்ரைவ்களை அடித்து கோலி மிரட்டினார். தவானும் செட்டில் ஆகி பெரிய சிக்சர்களை அடித்தார். இந்தக் கூட்டணி 105 ரன்களை சேர்த்திருந்த நிலையில், கேப்டன் கோலி 56 ரன்களில் மார்க்வுட்டின் பந்தில் எல்லைக்கோட்டுக்கு அருகே மொயீன் அலியிடம் கேட்ச் ஆனார்.

சிறப்பாக சென்றுக்கொண்டிருந்த இந்திய அணியின் ரன்விகிதம் கோலியின் விக்கெட்டுக்கு பிறகு குறைய ஆரம்பித்தது. 98 ரன்களிக் சதத்தை கோட்டைவிட்டு தவான் அவுட் ஆக, ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்ட்யா என அடுத்தடுத்த விக்கெட்டுகளும் வேகமாக விழுந்தது.

ஃபார்மில் இல்லாத கே.எல்.ராகுலும் அறிமுக வீரரான க்ரூணால் பாண்ட்யாவுமே கடைசி 10 ஓவர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவானது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் இருவரும் இங்கிலாந்தின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். கடைசி 10 ஓவர்களில் மட்டும் இவர்களின் அதிரடியால் 112 ரன்கள் கிடைத்தது. இதன் மூலம் இந்திய அணியும் 50 ஓவர்களில் 317 ரன்களை எட்டியது. அரைசதத்தை கடந்த ராகுலும் க்ரூணால் பாண்ட்யாவும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பயம் காட்டிய இங்கிலாந்து.. பந்துவீச்சில் மிரட்டி த்ரில் வெற்றி பெற்ற இந்தியா !

318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. ஜேசன் ராயும் ஜானி பேர்ஸ்ட்டோவும் அந்த அணியின் சார்பாக தொடக்கவீரர்களாக களமிறங்கினர்.

இருவருமே இந்தியாவின் பந்துவீச்சை மைதானத்தின் எல்லா திசைகலிலும் சிதறடித்தனர். முதல் 10 ஓவர் பவர்ப்ளேயை முழுமையாக இங்கிலாந்து அணிக்கு சாதகமாக மாற்றிக்கொண்டனர். குறிப்பாக, பேர்ஸ்ட்டோ பவுண்டரியும் சிக்சர்களுமாக அடித்துத் தள்ளினார்.

15 ஓவர்களிலேயே இந்தக் கூட்டணி 135 ரன்களை சேர்த்து, இந்தியாவுக்கு தோல்வி பயத்தைக் காட்டியது. அறிமுகவீரரான ப்ரஷித் கிருஷ்ணாவே இந்திய அணிக்கு முதல் விக்கெட்டை பெற்றுக்கொடுத்தார். அவர் வீசிய ஓவரில் ஜேசன் ராய் 46 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதுதான் இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதன்பிறகு, இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்டுகள் வரிசையாக விழத் தொடங்கியது. முக்கிய வீரரான ஸ்டோக்ஸையும் ஒரு ரன்னில் வெளியேற்றி அசத்தினார் ப்ரஷித் கிருஷ்ணா. அடுத்தடுத்த இரண்டு ஓவர்களில் பேர்ஸ்ட்டோ, மோர்கன், பட்லர் என இங்கிலாந்தின் முதுகெலும்பான மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்டத்தை மொத்தமாக இந்தியா பக்கமே திருப்பிவிட்டார் ஷர்துல் தாகூர்.

முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்த பிறகு, மொயீன் அலி கொஞ்சம் போராடி பார்த்தாலும் அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இறுதியில் இங்கிலாந்து அணி 42.1 ஓவரிலேயே 251 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

98 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவிய ஷிகர் தவானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டுள்ளது.

- உ.ஸ்ரீராம்

banner

Related Stories

Related Stories