விளையாட்டு

தவறான நேரத்தில் கோலி விக்கெட்... இந்திய அணியின் சறுக்கல் எங்கே? - முதல் நாள் ஆட்டம் எப்படி? #INDvAUS

இன்னும் 70 ரன்னை எடுத்து 300 ரன்களை கடந்துவிட்டால், பௌலிங்கில் ஆஸியை ஒரு மிரட்டு மிரட்டலாம்!

தவறான நேரத்தில் கோலி விக்கெட்... இந்திய அணியின் சறுக்கல் எங்கே? - முதல் நாள் ஆட்டம் எப்படி? #INDvAUS
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அடிலெய்டில் தொடங்கிய, இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவடைந்திருக்கிறது. ஆஸி பௌலிங்கை தட்டுத்தடுமாறி எதிர்கொண்டுதான் முதல் நாளை முடித்திருக்கிறது இந்திய அணி. நாளின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களை எடுத்திருக்கிறது.

கோலி டாஸ் வென்று முதல் பேட்டிங்கை தேர்வு செய்ததே கொஞ்சம் பாசிட்டிவ்வாக இருந்தது. ஏனெனில், இதற்கு முன் கோலி டாஸ் வென்ற 25 போட்டிகளில் இந்திய அணி தோற்றதே இல்லை. ஆரம்பமே கொஞ்சம் சாதகமாக அமைய இந்திய அணியின் சார்பில் ஓப்பனர்களாக மயங்க் அகர்வாலும் ப்ரித்வி ஷாவும் களமிறங்கினர்.

சுப்மன் கில்லுக்கு பதிலாக ப்ரித்வி ஷாவை ப்ளேயிங் லெவனில் சேர்த்ததே பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருந்தது. கோலியும் ரவிசாஸ்திரியும் ப்ரித்வி ஷாவவை டிக் அடித்ததற்கு நம்பிக்கையை தவிர வேற எந்தக் காரணமும் இருந்திருக்க முடியாது. அந்த நம்பிக்கையை ப்ரித்வி ஷா இன்று காப்பாற்றியிருக்க வேண்டும். ஆனால், இரண்டாவது பந்திலேயே கோலியின் முடிவும் நம்பிக்கையும் தவறு என்பதை அவர் நிரூபித்தார்.

ஸ்டார்க், ஓவர் தி விக்கெட்டில் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே போல்டை பறிகொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார் ப்ரித்வி. இந்த பந்துக்கு முன்பாக கமென்ட்ரி பாக்ஸில் பேசிக்கொண்டிருந்த ரிக்கி பான்டிங், 'ப்ரித்வி ஷா பந்தை நோக்கி காலை நகர்த்துவதில் தடுமாறுவார். அப்போது பேட்டுக்கும் பேடுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கும். அதை டார்கெட் செய்து ஆஸி பௌலர்கள் வீச வேண்டும்' என பேசியிருப்பார். பான்டிங் சொன்ன மாதிரியேதான் ப்ரித்வி அவுட் ஆனார். ஃப்ரன்ட் ஃபுட்டையும் முழுமையாக நகர்த்தாமல், பேடுக்கும் பேட்டுக்கும் இடைவெளியை உண்டாக்கி, பேக் ஃபுட்டையும் தாமதமாக நகர்த்தி ஸ்டம்பை பறிகொடுத்தார்.

ப்ரித்வி ஷாவை ஷாட் ஆட வைக்க ஆஸியினர் புத்திசாலித்தனமாக திட்டமும் தீட்டியிருந்தனர். அவர் மற்ற பேட்ஸ்மேன்களை போல அதிகமாக பந்துகளை லீவ் செய்யமாட்டார். ஷாட் ஆடுகிற லெந்த்தில் வந்தால் தைரியமாக பேட்டைவிட்டு விடுவார். இதைத்தான் ஆஸி அணியினர் பயன்படுத்திக்கொண்டனர். ஸ்லிப், கல்லி, பாய்ன்ட் இங்கேயெல்லாம் ஃபீல்டர்களை நிறுத்திவிட்டு கவரை முழுமையாக ஓப்பனாக்கிவிட்டனர். இதுதான் ப்ரித்வி ஷாவின் விக்கெட்டுக்கு வெட்டப்பட்ட குழி. ப்ரித்வியை எந்த தயக்கமும் இன்றி பந்தை நோக்கி இழுத்து ஷாட்டுக்கு கமிட் ஆக வைத்து அவரின் பலவீனமான ஃபுட் ஒர்க் மூலம் விக்கெட்டை தூக்கினர்.

இந்த ஒரு விக்கெட்தான் இந்திய அணியின் தடுமாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. ப்ரித்வி ஷாவிடம் இருந்து கோலி எதிர்பார்த்தது வேகமான ஒரு அரைசதம். ஆனால், அவரின் பேட்டிலிருந்து அது வரவில்லை. இதனால், அடுத்த விக்கெட்டுக்கு கூட்டணி சேர்ந்த மயாங்க் அகர்வாலும் புஜாராவும் அதீத ஜாக்கிரதையுடன் ஆட வேண்டியிருந்தது. விளைவு, முதல் செஷன் முடிவில் இந்திய அணி 41 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

தவறான நேரத்தில் கோலி விக்கெட்... இந்திய அணியின் சறுக்கல் எங்கே? - முதல் நாள் ஆட்டம் எப்படி? #INDvAUS

25 ஓவர்கள் வீசப்பட்ட இந்த முதல் செஷன் முழுவதும் ஆஸி பௌலர்களே ஆதிக்கம் செலுத்தினர். முதல் 10 ஓவர் முழுவதையும் ஸ்டார்க்கும் ஹேசல்வுட்டும் சிறப்பாக வீசினார். ஷாட் பால்களை அதிகம் வீசாமல் அதிகமாக ஃபுல் லெந்த் டெலிவரிக்களை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினர். பேட்ஸ்மேனை ஷாட் ஆட வம்படியாக இழுப்பதற்கு இப்படி வீசிக்கொண்டிருந்தனர்.

ஆனால், மயாங்க் அகர்வாலும் புஜாராவும் மிகச்சிறப்பாக இவர்களின் தாக்குதலை எதிர்கொண்டனர். புஜாராவுக்கு மட்டும் ஒன்றிரண்டு ஸ்லிப் கேட்ச்கள் கேரி ஆகாமல் அதிர்ஷ்டவசமாக தப்பித்திருப்பார். மற்றபடி, அற்புதமாக பந்துகளை லீவ் செய்து ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட்டின் பொறுமையை சோதித்தார். ஆஸியினரும் டிசைன் டிசைனாக யோசித்து புஜாராவுக்கு கட்டம் கட்டினர். 2018–ம் ஆண்டு ஆஸி சீரிஸில் லெக் கல்லியில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகியிருப்பார் புஜாரா. அதேமாதிரி, இந்த போட்டிக்கு முன்பு நடந்த பயிற்சி ஆட்டத்திலும் அவுட் ஆகியிருப்பார். இந்த யுக்தியை இங்கே ஸ்டார்க் கையிலெடுத்தார்.

ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து புஜாராவின் உடம்புக்குள் வீசி லெக் கல்லியில் லயனை நிற்கவிட்டிருப்பார். இங்கேயும் ஒன்றிரண்டு கேட்ச்கள் சரியாக கேரி ஆகாமல் தப்பித்திருப்பார் புஜாரா. 10 ஓவருக்கு பிறகு கம்மின்ஸும் கீரினும் பந்து வீச வந்தனர். கம்மின்ஸ் குட் லெந்துக்கு மேலாக கொஞ்சம் ஃபுல்லாக ஒரு லெந்தை பிடித்துக்கொண்டு அதே லெந்தில் தொடர்ந்து வீசிக்கொண்டே இருந்தார். சிறிது நேரம் இதை கச்சிதமாக எதிர்கொண்ட மயங்க் அகர்வால், ட்ரிங்ஸ் ப்ரேக்குக்கு விடப்பட்ட சின்ன இடைவெளிக்கு பிறகு கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே இதே டெலிவரியை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி போல்டானார்.

மயாங்க் அகர்வால் 17 ரன்களில் அவுட் ஆக, அடுத்ததாக கேப்டன் கோலி உள்ளே வந்தார். முதல் செஷன் முடிவில் இந்தியா 41-2 என இருந்தது. இரண்டாவது செஷன்தான் இந்தியாவுக்கு ரொம்பவே முக்கியமான கட்டம். இதில் சொதப்பினால் ஒரு நாள் கூட முழுமையாக இந்திய அணி பேட் செய்ய முடியாமல் போகலாம். மேலும், முதல் செஷனில் ரொம்பவே மெதுவாக ரன் அடித்திருந்ததால் இந்த செஷனில் கொஞ்சம் வேகமாக செயல்பட வேண்டிய கட்டாயம் இருந்தது. ஏனெனில், கடைசி செஷனில் ப்ளட்லைட்ஸில் புதிய பிங்க்பாலை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். எனவே அங்கே எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் இருக்க இந்த இரண்டாவது செஷனை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. ப்ரித்வி ஷா அடிக்க தவறிய 50 ரன்கள் ஏற்படுத்திய விளைவு இது.

எல்லா பௌலர்களையும் சிறப்பாக லீவ் செய்த புஜாரா, நாதன் லயனை மட்டும் பவுண்டரிகள் அடிக்க முயன்று கொஞ்சம் பதற்றத்துடனே எதிர்கொண்டார். 140+ டெலிவரிகளுக்கு பிறகு லயனின் பந்தில்தான் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகளையும் அடித்தார். இன்னொரு பக்கம் விராட் கோலி, லயனை சிறப்பாக கையாண்டார். பெரும்பாலும் பேக் ஃபுட்டில் நின்று லயனின் டெலிவரிகளை அழகாக தட்டிவிட்டார். இந்த செஷனை அப்படியே விக்கெட் விழாமல் இந்த கூட்டணி கடந்துவிடும் என்று நினைக்கையில் 50–வது ஓவரில் லயன் வீசிய பந்தில் எட்ஜ்ஜாகி லபுசேனிடம் கேட்ச் கொடுத்து புஜாரா வெளியேறிவிடுவார். 160 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து புஜாரா அவுட் ஆனார்.

இரண்டாவது செஷன் முடியும்போது இந்திய அணி 107-3 என்ற நிலையில் இருந்தது. மூன்றாவது செஷனை விராட் கோலியும் ரஹானேயும் எதிர்கொண்டனர். 80 ஓவர்களுக்கு பிறகு புதிய பந்து எடுக்கப்பட்டுவிடும் என்பதால், இந்தக் கூட்டணி சிறப்பாக ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து வேகமாக ரன்களையும் சேர்த்தது. கோலியும் அரைசதத்தை கடந்தார். ப்ளட்லைட்ஸில் இவர்களின் ஆட்டத்தை பார்க்கும் போது ODI போட்டிகளை பார்ப்பது போல இருந்தது. கம்மின்ஸ் வீசிய டெலிவரியை புல் ஷாட் மூலம் சிக்சரெல்லாம் அடித்தார் ரஹானே.

முதல் இரண்டு செஷன்களில் ஆஸி பௌலர்களிடம் இருந்த திட்டமிடலும் விக்கெட்டுக்கான உந்துதலும் இந்த செஷனில் குறைவாகவே இருந்தது. ரஹானே-கோலி கூட்டணியும் நிலைத்து நின்று 75 ஓவரை தாண்டிவிட்டதால் இன்றைய நாளை இவர்கள் சமாளித்துவிடுவார்கள் என்று தோன்றியது. ஆனால், 77 வது ஓவரில் லயன் வீசிய ஒரு பந்தை மிட் ஆஃபில் நின்ற ஹேசல்வுட்டிடம் தட்டிவிட்டு ரஹானே ரன்னுக்கு அழைக்க. கோலியும் ஓடி வர, திடீரென ரஹானே 'நோ சொல்ல', கோலி ரன் அவுட் ஆனார். 74 ரன்களில் கோலி வெளியேறினார். கோலி நின்றிருந்தால் ஒரு சதம் வந்திருக்கும். எல்லாவற்றுக்கும் மேல், கடைசி 10 ஓவர் புது பந்தில் கோலி நின்றால்தான் நாளை வரை முதல் இன்னிங்ஸை உயிர்ப்போடு வைத்திருக்க முடியும் என்ற நிலையில் அவர் அவுட்டானது ஏமாற்றமாக இருந்தது.

இது தவறான நேரத்தில் விழுந்த விக்கெட். எதிர்பார்த்தது போலவே 81–வது ஓவரில் நியு பால் எடுக்கப்பட்ட பிறகு இந்தியா தடுமாறியது. புது பந்தின் முதல் ஓவரிலேயே ஸ்டார்க் ஓவரில், ரஹானே lbw ஆகி வெளியேறினார். அடுத்ததாக ஹேசல்வுட் வீசிய 84–வது ஓவரில் ஹனுமா விஹாரி lbw. இறுதியில் அஸ்வினும் சஹாவும் க்ரீஸில் நிற்க 233-6 என முதல் நாளை முடித்தது இந்தியா.

முதல் செஷன் மற்றும் இறுதி செஷனில் ஆஸியே ஆதிக்கம் செலுத்தியது. ப்ரித்வி ஷா அடிக்கத்தவறிய அந்த 50 ரன்களும் அவரின் டக் அவுட்டுமே முதல் சறுக்கலாக அமைந்தது. அதேமாதிரி கடைசி நேரத்தில் கோலியின் ரன் அவுட்டும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இன்னும் 70 ரன்னை எடுத்து 300 ரன்களை கடந்துவிட்டால், பௌலிங்கில் ஆஸியை ஒரு மிரட்டு மிரட்டலாம்!

banner

Related Stories

Related Stories