ஒன்றிய பா.ஜ.க ஆட்சியின் கீழ், அடிப்படைத் தேவைக்காக கடன் பெறும் விவசாயிகள் தற்கொலை செய்ய தூண்டப்படுவதும், பெரும் முதலாளிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவதும் அதிகரித்து வருகின்றன.
இதனால், இந்தியாவில் முதலாளித்துவ நடவடிக்கைகள் அதிகரித்து, பொருளியல் வேற்றுமையும் அதிகரித்துள்ளது. வறுமையில் தத்தளிப்போரின் நிலை மேலும் மோசமாகி வரும் நிலையில், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்களாக, அதானியும், அம்பானியும் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அதானி, அம்பானிக்கு தோள் கொடுக்கும் தோழர்களாய், ஒன்றிய பா.ஜ.க பட்டாளம் செயல்பட்டு வருகிறது. இதனை உலகளாவிய பொருளியல் வல்லுநர்களும், கூட்டமைப்புகளும் கண்டித்தாலும், ஒன்றிய பா.ஜ.க.வின் நடவடிக்கைகளில் மாற்றமில்லாத நிலையே நீடிக்கிறது.
இந்நிலையில், ஓமி பாபா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தரும், முன்னாள் இந்திய அணுசக்தித் துறை தலைவருமான அனில் கக்கோட்கர், சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசுகையில்,
“இந்திய பொருளாதாரம் உலகளவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த 10 ஆண்டிற்குள் மூன்றாவது இடத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஒரு சராசரி இந்தியரின் தனிநபர் வருமானம் உலகளவில் 140ஆவது இடத்தில் உள்ளது
ஒருபுறம் பொருளாதார முன்னேற்றம் சமத்துவமின்மையை அதிகரிக்க வழிவகுக்கிறது. நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது. எனவே, உலகளாவிய போட்டியில் நாடு முன்னணியில் இருக்க வேண்டும் என்ற அதே சூழலில், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க கிராமப்புறங்களில் விரைவான முன்னேற்றத்தை உறுதி செய்ய வேண்டும்.
அதற்கு இன்றைய உலகில் அறிவைப் பெற்றால் மட்டும் போதாது. சமூக சிந்தனையும், சமத்துவ நோக்கமும் தேவையாக அமைந்திருக்கிறது.
இப்போது நிறைய பல்கலைக்கழகங்கள் அந்தந்த சுற்றுச்சூழலுக்கு ஏற்ப புதுமையான தனித்துவமாக, கல்வி நிறுவனத்துக்கென தனியான கல்வி முறைகளை உருவாக்கி இருக்கின்றன. இதன் மூலம் கிராமப்புறம் மேன்மை அடைய புது வழிகளும் வாய்ப்புகளும் கிடைக்க வழிவகை உள்ளது” என்றார்.