அரசியல்

அடிப்படை ஜனநாயக உணர்வே இல்லாதது எத்தகைய விபரீதம் தெரியுமா? - ஒன்றிய மோடி அரசை கடுமையாக சாடிய கி.வீரமணி!

தானடித்த மூப்பாக நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் கண்மூடித்தனமாக எதேச்சதிகாரத் தொனியில் நாளும் அரங்கேறி வருகின்றன என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

அடிப்படை ஜனநாயக உணர்வே இல்லாதது எத்தகைய விபரீதம் தெரியுமா? - ஒன்றிய மோடி அரசை கடுமையாக சாடிய கி.வீரமணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து தமிழ்நாடெங்கும் வரும் 20 ஆம் தேதி தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் பங்கேற்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

”பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மக்கள் விரோதப் போக்குகள் நாளும் வேகமாக வளர்ந்து வருகின்றன.

தானடித்த மூப்பாக செயல்படும் ஒன்றிய அரசு!

ஜனநாயகம், குடியரசு, சோசலிசம், மதச்சார்பின்மை என்ற - அரசமைப்புச் சட்ட கட்டுமானத்தைத் தகர்க்கும் அளவுக்குத் தானடித்த மூப்பாக நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் கண்மூடித்தனமாக எதேச்சதிகாரத் தொனியில் நாளும் அரங்கேறி வருகின்றன.

நாடாளுமன்றத்தில் விவாதங்களேயின்றி அவசர சட்டங்கள் கோலோச்சுவதை உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ளது. அதுவும் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட முறை ஜனநாயக அமைப்பு முறைக்கு மிகப்பெரிய தலைக்குனிவாகும்.

தலைநகரில் விவசாயிகள் போராட்டமும் - பிரதமரின் அணுகுமுறையும்!

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்தியாவின் தலைநகரமான டில்லியில் கடந்த 11 மாதங்களாக ஆயிரக்கணக்கான விவசாயிகள், குளிரிலும், வெயிலிலும் அமைதி வழிப் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமராக இருக்கக் கூடியவருக்கு, போராட்டப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசும் அடிப்படை ஜனநாயக உணர்வு அறவேயில்லை என்பது எத்தகைய விபரீதம்!

அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்!

‘‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ

செல்வத்தைத் தேய்க்கும் படை’’ என்றார் திருவள்ளுவர்.

குடிமக்களின் அழுத கண்ணீரின் வலிமை என்பது தோட்டாக்கள், பீரங்கிகளை விட கூர்மையான ஆயுதங்களைவிட வலிமையானதே!

ஆட்சியும், அதிகாரமும் குடிமக்களின் எதிர்ப்புகளை துச்சமாகக் கருதக்கூடும் - அதுவே அவர்களின் ஆட்சி இழப்புக்கும், இறுதிக்கும் பெரும் காரணியாக வெடிக்கும் என்பது வரலாறு கற்பிக்கும் பாடமாகும்.

அடிப்படை ஜனநாயக உணர்வே இல்லாதது எத்தகைய விபரீதம் தெரியுமா? - ஒன்றிய மோடி அரசை கடுமையாக சாடிய கி.வீரமணி!

தமிழ்நாட்டில் 20 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!

அகில இந்திய அளவில் காங்கிரஸ் தலைமையில் 19 கட்சிகளின் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. வரும் 20 ஆம் தேதிமுதல் 30 ஆம் தேதிவரை இந்தியா முழுவதும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்திட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வரும் 20 ஆம் தேதி அன்று காலை 10 மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. தலைமையிலான அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூட்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.

திராவிடர் கழகம், காங்கிரஸ், ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.அய்., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

‘‘காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த 20ஆம் தேதி இந்திய அளவிலான எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற காணொலி கூட்டத்தில், வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, பொருளாதார சீரழிவு, தனியார்மயமாக்கல், வேலை இல்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் ஒட்டுக் கேட்பு உள்ளிட்ட ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத ஜனநாயக - விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நாடு முழுவதும் செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைக் கண்டித்து திமுக தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் வரும் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு தங்களின் இல்லம் முன்பு கருப்புக் கொடி ஏந்தி கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டிட வேண்டும். ஒருங்கிணைந்து போராடுவோம், மதச்சார்பற்ற - ஜனநாயக இந்தியக் குடியரசைப் பாதுகாப்போம்‘’ என்று கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கழகத் தோழர்களுக்கு...

வரும் 20 ஆம் தேதி காலை 10 மணிக்குக் கழகத் தோழர்கள் தத்தம் இல்லங்கள் முன் (இதற்கு முன்பும் இதுமாதிரி நடத்தியுள்ளோம்) கருப்புக் கொடி ஏந்தி, கரோனா கால விதிமுறைகளை மிகவும் சரியான முறையில் பின்பற்றி, அறவழியில் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் கொடுக்குமாறு கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம். இதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்திடுமாறும் கழகத் தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஒருங்கிணைந்து போராடுவோம் - மதச்சார்பற்ற ஜனநாயக உரிமையைப் பாதுகாப்போம்!”

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories