அரசியல்

“இனியும் தொடர்ந்தால் தி.மு.க இளைஞரணி திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கும்”:உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!

அவதூறு பரப்புவோரை பாதுகாக்கும் எடப்பாடி காவல்துறை, தங்கள் பிரதிநிதிகளை நோக்கி கேள்வி எழுப்பும் மக்களை கைது செய்வது வரம்பு மீறிய செயல்.

“இனியும் தொடர்ந்தால் தி.மு.க இளைஞரணி திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கும்”:உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திருப்பூர் மாநகராட்சியின் ஈஸ்வரமூர்த்தி லே-அவுட் பகுதியில் அ.தி.மு.க எம்.எல்.ஏ குணசேகரன் கடந்த 7-ந் தேதி பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதற்கு திட்ட மதிப்பீடு ரூ. 7 லட்சத்து 70 ஆயிரம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி அமைக்க இவ்வளவு தொகையா என்று சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன.

இதேபோல, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடைக்கான மதிப்பீட்டுத் தொகையும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தகர ஷீட் கொண்டு அமைக்கப்பட்டுள்ள பயணியர் பேருந்து நிறுத்தத்தின் மதிப்பீடு 45 லட்சம் ரூபாய் எனகுறிப்பிடப்பட்டுள்ளது. போதிய வசதிகள் ஏதுமின்றி அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிறுத்தத்திற்கு 45 லட்சம் ரூபாய் செலவா என பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி பதிவிட்டதற்காக கருவம்பாளையத்தைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி ஜீவா என்ற அருண் உள்ளிட்ட சிலர், ஆளுங்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், இதுபோன்ற சம்பவங்கள் இனியும் தொடர்ந்தால் தி.மு.க இளைஞரணி திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கும் என எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “குடிநீர் தொட்டிக்கு ரூ.7.70 லட்சம், பேருந்து நிறுத்த தகர கொட்டகைக்கு ரூ.45 லட்சம். இவை திருப்பூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ குணசேகரனின் நிதி ஒதுக்கீடுகள். ‘இந்த நிதியில் இவ்வளவுதான் செய்யமுடியுமா’ என்று சமூகவலைதளத்தில் விமர்சித்த தி.மு.க இளைஞரணி தம்பி ஜீவா(எ)அருணை கைது செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

அவதூறு பரப்புவோரை பாதுகாக்கும் எடப்பாடி காவல்துறை, தங்கள் பிரதிநிதிகளை நோக்கி கேள்வி எழுப்பும் மக்களை கைது செய்வது வரம்பு மீறிய செயல். இச்சம்பவங்கள் தொடர்ந்தால் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒப்புதல்பெற்று தி.மு.க இளைஞரணி திருப்பூரில் ஆர்ப்பாட்டத்தில் இறங்கும்” என எச்சரித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories