அரசியல்

நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவோம் என தமிழக அரசு மக்களை ஏமாற்றியிருக்கிறது - வைகோ !

நீட் மசோதாவுக்கு விலக்கு பெறுவோம் என தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வந்த தமிழக அரசின் செயல் கடும் கண்டனத்துக்குரியது என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவோம் என தமிழக அரசு மக்களை ஏமாற்றியிருக்கிறது - வைகோ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நீட் தேர்விலிருந்து விலக்களிக்க கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பிய 2 சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இதற்கு கல்வியாளர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' மருத்துவப் படிப்புகளுக்கு தகுதிகாண் நுழைவுத் தேர்வு (NEET) மத்திய அரசால் கட்டாயம் ஆக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து தமிழகத்தில் கொந்தளிப்பு எழுந்தது. இதனால், நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி 2017 பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரு சட்ட முன்வரைவுகள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கைச் சட்டம், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மேற்படிப்பு மாணவர் சேர்க்கைச் சட்டம் என்று நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகள் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இச்சட்ட முன்வடிவுகளுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்டோர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தமிழக அரசின் சட்ட முன்வடிவுகளை மத்திய உள்துறை அமைச்சகம் பெற்றுக்கொண்டு, அவற்றைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதாகவும், 2017 செப்டம்பரில் குடியரசுத் தலைவர் சட்ட முன்வடிவுகளை நிறுத்தி வைத்ததாகவும் தெரிவித்தனர். மேலும், இந்த இரு சட்ட முன்வடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா? அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளதா? என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டபோது, அவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பதில் வந்ததாக மத்திய அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து இரு சட்ட முன்வடிவுகளும் மத்திய அரசால் பெறப்பட்ட தேதி மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வரைவுகளுக்கு அனுமதி கொடுக்காமல் நிராகரிக்கப்பட்ட தகவல் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு முன்பே தெரிந்திருக்கும். ஆனால் அந்த செய்தியை மறைத்து, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவோம் என்று தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வந்த செயல் கடும் கண்டனத்துக்கு உரியது.

நீட் தேர்வால் சமூக நீதிக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது மட்டுமின்றி, சாதாரண ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட மாணவர்கள் மருத்துவப் படிப்பைக் கனவில்கூட நினைக்க முடியாத நிலைமையை பா.ஜ.க. அரசு உருவாக்கி இருக்கிறது.

தமிழ்நாட்டில் மாணவர்கள், பெற்றோர்கள் விருப்பத்திற்கு மாறாக நீட் தேர்வை வலிந்துத் திணித்ததால், பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் அரியலூர் மாவட்டம் - குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதா 2017 செப்டம்பரில் தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த ஆண்டு 2018 இல் செஞ்சி அருகில் உள்ள பெருவளூர் கிராமத்தில் கூலித் தொழிலாளி மகள் பிரதீபா நஞ்சு அருந்தி மாண்டுபோனார். மேலும், திருச்சியில் மாணவி சுபஸ்ரீ, சென்னை சேலையூரில் ஏஞ்சலின் ஸ்ருதி போன்ற மாணவிகள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இந்த ஆண்டு 2019 இல் நீட் தேர்வு முடிவுகள் வந்தவுடன், திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஸ்யா, மரக்காணம் மோனிசா போன்ற மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். எடப்பாடி பழனிச்சாமி அரசின் பொய்யான வாக்குறுதியால் இந்த மாணவிகள் உயிரைப் போக்கிக் கொண்ட சோகம் நிகழ்ந்தது.

மத்திய பா.ஜ.க. அரசு மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, கல்வித் துறையில் முழுமையாக ஆதிக்கம் செலுத்துவதற்குப் புதியக் கல்விக் கொள்கையை உருவாக்கி இருக்கிறது. இதனை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்ப்பதுடன், கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்ப்பதற்கான உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் '' இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories