முரசொலி தலையங்கம்

"ரூ.3000 கோடி எங்கே? - முதல்வரின் உத்தரவால் பயந்துகிடக்கும் எடப்பாடி" : முரசொலி‌ சாடல்!

வீட்டில் இருக்க முடியாமல் வீதிக்கு வந்து, பத்து நிமிடம் அலைந்து விட்டு, தி.மு.க. ஆட்சியைப் பற்றிக் குறைச்சொல்லி பேட்டி கொடுத்துவிட்டு பழனிசாமி பதுங்கிக் கொள்வதற்குக் காரணம் இந்த பயம்தான்.

"ரூ.3000 கோடி எங்கே? - முதல்வரின் உத்தரவால் பயந்துகிடக்கும் எடப்பாடி" : முரசொலி‌ சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இதுகுறித்து முரசொலி நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கம் வருமாறு:-

அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல பீதியிலேயே இருக்கிறார் பழனிசாமி!

“எதிர்க்கட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிரட்டுகிறார். விசாரணைக் கமிஷன் குறித்து நாங்கள் பயப்படவில்லை” என்று அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பயப் பேட்டி கொடுத்துள்ளார்.

முதலமைச்சர் அளித்த பேட்டி என்பது தெளிவானது. அதில் யாரையும் அவர் மிரட்டவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணம் முறையாக அதற்குச் செலவு செய்யப்படவில்லை என்பது முதலமைச்சரின் குற்றச்சாட்டு. திட்டப்பணிகளுக்குச் செலவு செய்தோம் என்ற பெயரால் கணக்குக் காட்டப்பட்டுள்ளதே தவிர, சரியாக எந்தத் திட்டப்பணிகளும் செய்யப்படவில்லை என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர். இதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை. எந்த இடத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் திட்டப் பணிகள் செய்யப்பட்ட தாகச் சொல்லப்பட்டதோ அங்கேயே, அந்த இடத்திலேயே தண்ணீர்

தேங்கியது. தேங்கிய தண்ணீர் அ.தி.மு.க. ஆட்சியின் ஊழலை அம்பலப்படுத்தியது. இதனை அரசியல் ரீதியான குற்றச்சாட்டாக மட்டும் வைக்காமல், அதிகாரப் பூர்வமாக விசாரணை ஆணையம் அமைத்து வெளிப்படுத்துவோம் என்று சொல்லி இருந்தார் முதலமைச்சர்.

பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டை வைக்காமல், ஒரு நீதி விசாரணை ஆணையம் அமைப்பதை பழனிசாமி வரவேற்றிருக்க வேண்டும். அதனை அவர் செய்யவில்லை. ஆனால், ‘எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறார் ஸ்டாலின்’ என்று பொதுமைப்படுத்துகிறார் பழனிசாமி.

முதலமைச்சர் வைத்த குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகள் அனைத்தின் மீதானது அல்ல. அ.தி.மு.க. ஆட்சியின் மீதான குற்றச்சாட்டு தான். அதிலும் குறிப்பாக பழனிசாமி, வேலுமணி அண்ட் கோ மீதான குற்றச்சாட்டு அது. அதற்கு அவர்கள் இருவரும்தான் பதிலளிக்க வேண்டுமே தவிர, ‘புலிக்குப் பயந்தவர்கள் என் மீது வந்து படுத்துக் கொள்ளுங்கள்’ என்று தப்பிக்கப் பார்க்கக் கூடாது. அதனைத்தான் பழனிசாமி, மிரட்சியில் செய்கிறார். சுருட்டியதால் மிரண்டுகொண்டு இருக்கிறார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது பழனிசாமி என்ன சொன்னார் என்பது இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ‘தியாகராயர் நகர், மாம்பலம் பகுதியில் இப்போது மழை பெய்தால் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட நிற்காது. ஏனென்றால் ஆயிரம் கோடி செலவில் மழைநீர் வடிகால் பணிகளை அமைத்துள்ளோம்’ என்று பழனிசாமி பேசியதையும் -

அந்தப் பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்ததையும் ஒப்பிட்டு வீடியோ காட்சிகளாக வெளியிட்டு வருகிறார்கள். பழனிசாமி சொன்னது அத்தனையும் பச்சைப் பொய் என்பதை அந்த வீடியோ காட்சிகள் பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தி விட்டது.

‘தீக்கதிர்’ நாளிதழில் ‘திட்டங்கள் போட்டு திருடிய கூட்டம்’ என்ற தலைப்பில் ஸ்ரீராமுலு எழுதிய கட்டுரை ஒன்றில் அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல் புள்ளிவிவரங்களைத் தொகுத்து வழங்கி இருக்கிறார்.

* ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது ரூ.4 ஆயிரம் கோடியில் புதிய திட்டத்தை அறிவித்தார். அதன்படி 300கிலோ மீட்டர் தூரத்துக்கு மழை நீர் வடிகால்கள் ரூ.1000 கோடியில் கட்டியதாகச் சொல்லப்பட்டது.

*அடையாற்றில் 49 இடங்கள், கூவத்தில் 105 இடங்கள், பக்கிங்காம் கால்வாயில் 183 இடங்கள் என மொத்தம் 337 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்ய ரூ.300 கோடியில் முதல்கட்டமாக ரூ.150 கோடி ஒதுக்கினார். அது என்ன ஆனது?

*பத்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.5000 கோடிக்கு திட்டங்கள் போட்டதாகச் சொல்லப்பட்டது. அவைகளின் நிலைமை என்ன?

* 1385 கோடி ரூபாய் செலவில் அடையாறு, கூவம் மற்றும் ஒருங் கிணைந்த மழைநீர் வடிகால்கள் 406 கிலோ மீட்டர் நீளத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டதாக அ.தி.மு.க. அரசின் புள்ளிவிபரம் சொன்னதே, அவை முறையாகச் செய்யப்பட்டதா?

* கொசஸ்தலை வடிநிலப் பகுதியில் ரூ.3720 கோடி செலவில் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் அமைக்க சுமார் 260 கிலோமீட்டர் நீளத்திற்கு திட்டமிட்டும் கூட 95 கிலோ மீட்டரில் ரூ.150 கோடியில் திட்டம் முடிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கு திரும்பவும் 100 கோடி ரூபாய் செலவில் மறுவடிவ மைப்புச் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

* அ.தி.மு.க. ஆட்சியில் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி அடையாறு, கூவத்துக்கு ரூ.1385 கோடி, கொசஸ் தலையில் ரூ.250 கோடி, கோவளத்தில் ரூ.20 கோடி, மழை நீர் வடிகால் இணைப்புக்கு ரூ.350 கோடி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தியாகராயர் நகருக்கு மழைநீர் வடிகால் அமைக்க ரூ.200 கோடி, மாம்பலம் கால்வாய் சீரமைப்புக்குரூ.80 கோடி, மழைநீர் வடிகால் தூர்வாரியது ரூ.115 கோடி என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இவை அனைத்தும் செய்யப்பட்டதா அ.தி.மு.க. ஆட்சியில்?

* ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் சீரமைப்புக்கு ரூ.2370 கோடி மதிப்பீட்டில் திட்டம் ஒன்றை பழனிசாமி அறிவித்தார்.

* அதேபோல் புறநகர் பகுதிக்கு ரூ.3000 கோடியில் நிரந்தர வெள்ளத் தடுப்புத் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சொன்னார்.

*எவ்வளவு மழை பெய்தாலும் நாங்கள் கட்டிய வடிகால்கள் வழியாக தண்ணீர் அடையாற்றில் கலந்து கடலுக்குச் சென்று விடும் என்று பன்னீர்செல்வமும், வேலுமணியும் சொன்னார்கள்.

இப்படி அ.தி.மு.க. ஆட்சியின் சுருட்டல் வெள்ளத்தைச் சொல்லிக் கொண்டே போகலாம். இதனைத்தான் விசாரிக்கப் போவதாக முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதனால்தான் பழனிசாமி மிரள்கிறார். வீட்டில் இருக்க முடியாமல் வீதிக்கு வந்து, பத்து நிமிடம் அலைந்து விட்டு, தி.மு.க. ஆட்சியைப் பற்றிக் குறை சொல்லி பேட்டி கொடுத்துவிட்டு பழனிசாமி பதுங்கிக் கொள்வதற்குக் காரணம் இந்த பயம்தான்.

பயம் இல்லாதது மாதிரி காட்டிக் கொள்வதற்காகவே அவர் இத்தகைய பேட்டிகளைக் கொடுக்கிறார்.

banner

Related Stories

Related Stories